Meinalam Project

Meinalam: A Wellness Initiative

கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் “கற்கை நன்றே” கல்வி ஊக்கத்தொகைத் திட்டம், அனைத்து இளைஞர்களுக்குமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்களின் ஆரோக்கியமே வளமான சமூகத்தின் உறுதியான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், அறக்கட்டளையின் முதன்மை நலவாழ்வு முயற்சியான “மெய்நலம்” திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் நிறுவனர் மதிப்பிற்குரிய திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையில், உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் கலந்த சத்துமிக்க ஆரோக்கியப் பானத்தை மாணவர்களுக்கு வழங்கும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், வைக்கல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ டி.எஸ். ராமன் – சரோஜினிதேவி விடுதியில் தங்கி கல்வி பயிலும் 105-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 2026 முதல் தினந்தோறும் உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய சத்துமிக்க ஆரோக்கியப் பானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயிலும் 55-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 2026 ஜூலை 1 முதல் வாரத்திற்கு மூன்று முறை உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய ஆரோக்கியப் பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ‘மெய்நலம்’ திட்டத்தின் துவக்க விழா 2026 ஜூலை 1 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய எஸ். லோகநாதன், M.E. அவர்கள் தலைமை தாங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி விரிவுரையாளர் திரு. செல்வகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் நிறைவாக, விடுதியில் தங்கி கல்வி பயிலும் 55-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சத்துமிக்க ஆரோக்கியப் பானம் வழங்கப்பட்டது.

மாணவர்களின் உடல்நலம், கல்வித்திறன் மற்றும் ஒட்டுமொத்த நலனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் ‘மெய்நலம்’ திட்டம், எதிர்காலத்தில் மேலும் பல கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது என ஆனந்த சைதன்யா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


Meinalam: A Wellness Initiative Launched in Gobichettipalayam Students Hostel- மெய்நலம்: கோபிசெட்டிபாளையத்தில் மாணவர் விடுதியில் தொடங்கப்பட்ட ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நலவாழ்வு முயற்சி

மார்ச் 2026 | கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்

இளைஞர்களின் ஆரோக்கியமே வளமான சமூகத்தின் உறுதியான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை (Ananda Chaitanya Foundation – ACF), தனது முதன்மை நலவாழ்வு முயற்சியான “மெய்நலம்” திட்டத்தை ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் சிறப்பாக தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் துவக்க விழா பின்வரும் இடத்தில் நடைபெற்றது:

ஸ்ரீ டி.எஸ். ராமன் மற்றும் சரோஜினிதேவி மாணவர் விடுதி
வைக்கால் சாலை,
கோபிசெட்டிபாளையம் – 638452,
ஈரோடு மாவட்டம்.

கல்வி கனவுகளை நனவாக்கும் நோக்கில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உறைவிடமாக விளங்கும் இந்த விடுதியே, “மெய்நலம்” திட்டத்தின் முதல் செயல்பாட்டு மையமாகத் தேர்வு செய்யப்பட்டது. இங்கு தங்கி கல்வி பயிலும் 105-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தினந்தோறும் உயர்தர தானியங்கள் மற்றும் இயற்கை மூலிகைகள் அடங்கிய சத்துமிக்க ஆரோக்கியப் பானம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தியாகி லட்சுமண ஐயரின் சேவைச் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட முயற்சி

கோபிசெட்டிபாளையம் இந்தத் திட்டத்தின் துவக்க இடமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது சாதாரணமான ஒன்றல்ல. சமூக நீதி, தன்னலமற்ற சேவை மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக விளங்கிய தியாகி லட்சுமண ஐயர் வாழ்ந்து பணியாற்றிய மண்ணிலேயே இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடித்த சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி லட்சுமண ஐயர், தன்னுடைய சொத்துக்களை சமூக முன்னேற்றத்திற்காக தியாகம் செய்து, பள்ளிகள், மாணவர் விடுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உருவாக நிலங்களை வழங்கியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பும், மனித கண்ணியத்தை உயர்த்திய அவரது வாழ்வியல் மதிப்புகளும், “மெய்நலம்” திட்டத்திற்கு ஊக்கமாக அமைந்துள்ளன.

இந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியப் பானம் வழங்குவதன் மூலம், தியாகி லட்சுமண ஐயர் ஏற்றி வைத்த சேவைத் தீபத்தின் ஒளியை தொடர்ந்து பரப்புவதில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது.

திருமூலர் ஆர்கானிக்ஸ் தயாரிக்கும் இயற்கைச் சத்துமிக்க ஆரோக்கியப் பானம்

மாணவர்களுக்கு உயர்தரமான மற்றும் இயற்கை சார்ந்த ஊட்டச்சத்தை வழங்கும் நோக்கில், “மெய்நலம்” திட்டத்தின் ஆரோக்கியப் பானம் திருமூலர் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு வழங்கிய மகான் திருமூலர் அவர்களின் பெயரில் செயல்படும் இந்த நிறுவனம், இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய ஊட்டச்சத்து கலவையை தரமான முறையில் தயாரித்து வழங்குகிறது.

இந்த ஆரோக்கியப் பானம் மாணவர்களுக்கு நீடித்த ஆற்றல், மன ஒருமைப்பாடு, நினைவாற்றல் மற்றும் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடல் என்ற அன்னமய கோசத்தை வலுப்படுத்தும் இயற்கை ஊட்டச்சத்தையே இந்தத் திட்டம் முன்னிறுத்துகிறது.

எதிர்காலப் பயணம்

தற்போது 105-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தொடங்கியுள்ள “மெய்நலம்” திட்டம், ஒரு ஆரோக்கியப் பானம் வழங்கும் முயற்சியாக மட்டுமல்லாமல், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் முழுமையான நலவாழ்வை நோக்கமாகக் கொண்ட விரிவான இயக்கமாக உருவெடுத்து வருகிறது.

எதிர்காலத்தில் இலவச மருத்துவ முகாம்கள், உடல்நல பரிசோதனைகள், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் மூலம் மேலும் பலரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணிகளை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

ஆரோக்கியமான இளைஞர்களே வளமான இந்தியாவின் அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், “மெய்நலம்” திட்டம் மாணவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையான சமூக நல முயற்சியாக தொடர்ந்து பயணிக்கிறது.


Read News Article