தியானமுகாம், கடிதம் – பா.கின்ஸ்லின் & ஜி.மாணிக்கவாசகம்

பிரியமுள்ள ஜெயமோகன்..

வணக்கம்.  19,20,21 ல் நடந்த தியான முகாமில் கலந்து கொண்டேன். நிச்சயம் வாழ்வின் அற்புதமான நாட்கள். இதற்கு முன் ஈஷா யோக மையத்தின் “சாம்பவி மஹா முத்ரா’ தொடர்ந்த பயிற்சி செய்த அனுபவம்.எனக்கு உண்டு அத்துடன் சூர்யநமஸ்காரமும் தொடர்ந்து பயிற்சி செய்திருக்கிறேன். யோகத்திலும், தியானத்திலும் என் அனுபவ எல்லைக்குள் நான் மட்டும் உணர்ந்த உண்மைகள் என்னை அது சார்ந்த தொடர்ந்த சிந்தனையிலும் வாசிப்பிலும் வைத்திருந்தது. சில தியான ஆசிரியர்களை சென்னையில் போய் பார்த்தது உண்டு சரிவரவில்லை. தியானம் நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு ஆசிரியருக்காக மனம் காத்திருந்தது. உங்கள் மூலம் கண்டு கொண்டேன். மிகுந்த மகிழ்ச்சி.

தில்லை செந்தில் பிரபு அவர்கள் ஒரு அற்புதமான ஆசிரியர். அன்பான மனிதர். மூன்று நாட்களுக்குள் தியானத்தைப் பற்றி ஆழமாக உணரச் செய்தார். எங்களின் அனுபவ எல்லையை விரிவாக்கியிருக்கிறார்.. மனதைக் கையாள அவர் அளித்த அகக் கருவிகள் மிக முக்கியமானவை.

சில உவமைகள் மூலம் ஆழமாகச் சிந்திக்க வைத்தார், தொடர் பயிற்சிகளால் சிந்தித்ததை உணர் எல்லைக்குள் அனுபவமாக மாற்றினார். மூன்று நாள் வகுப்பு முடியும் போது எனக்குள் எதிர்பாராத ஒரு திறப்பு இயல்பாக நிகழ்ந்திருந்தது. தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும், உங்களுக்கும் எங்களின் பெரும் அன்பும் நன்றியும்.

பா.கின்ஸ்லின்.


அன்புள்ள ஜெ

நீங்கள் ஒருங்கிணைக்கும் தியான முகாமின் புகைப்படங்கள் கண்டேன்.மிகச்சிலர் மட்டுமே அமர்ந்து ஆசிரியருடன் அதை பயில்வது தெரிந்தது. அது ஒரு மிகச்சிறந்த நல்வாய்ப்பு என நினைக்கிறேன். நான் சில தியான முகாம்களில் கலந்துகொண்டிருக்கிறேன். பலநூறு பேர் கலந்துகொள்ளும் கூட்டான நிகழ்வுகள் அவை. அவற்றில் ஒரு கூட்டான மனநிலை அமைகிறது.

ஆகவே தியானம் கைகூடுவதும் உண்மை. ஆனால் தனிப்பட்ட நிலையில் கல்வி இல்லை. ஆகவே மிகச்சீக்கிரமே அது குரு இல்லாத ஒரு பயணமாக ஆகிவிடுகிறது. இந்த வகையான தியானப்பயிற்சிகள் மிக முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஜி.மாணிக்கவாசகம்


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

https://www.jeyamohan.in/183795/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த ஜூன் மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.