தில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி

தில்லை செந்தில்பிரபு அவர்கள் என்னை தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். நான் பொது இடத்தில் சந்திக்கலாம், எனக்கு அது சவுகரியமாக இருக்கும் என்றேன்.

சரவணம்பட்டிக்கும் குரும்பபாளையத்துக்குமிடையில் உள்ள ஒரு குளிரூட்டப்பட்ட தேநீர் விடுதியில் சந்திப்பதாக முடிவெடுத்து நான் முன்னமே அங்கு போய்  நின்று அவருக்கு அழைத்தேன்.

“சார், நான் வீட்ல இருந்து கிளம்பிட்டேன்”

தில்லை, “நானும் கிளம்பிட்டேன் உன்னோட போனுக்குத்தான் வைட்டிங் விஜி. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவேன். நீ பொறுமையா வா…” என்றார்.

அவர் வருதற்குள் ஒரு டீ அடித்துவிடலாம் என்று மனம் சொல்லிகொண்டே இருந்தது. அதற்குள் தில்லை அந்த பழைய காரில் வந்திறங்கினார். நாங்கள் இருவரும் தேநீர் விடுதியில் உள்ளே சென்று அமர்ந்தோம். “என்ன திடீர்னு பேட்டியெல்லாம் வேணும்முன்னு சொல்ற? ஜெ க்கு கடிதம் ஏதேனும் எழுத எண்ணமா?” என்றார்.

“ஆமா சார்..”

மெலிதாக புன்னகைத்துவிட்டு “சரி ஓகே.. எனக்கும் இது புதுசு தான்..”

“எனக்கும் தான் சார்..”

“இரு டீ சொல்லிடுவோம்.. பயிற்சி தினமும் செய்யறீயா?” என்று அவர் கேட்டுக்கொண்டு வரும் போது  நான் போனில் உள்ள  ரெகார்டரை அமுத்தி அவர் முன் தள்ளி வைத்தேன். “ஆமா சார்..”

“என்ன, நெத்தில இவ்ளோ பெரிய பட்டை? நீ invocation song, குரு பூஜை எல்லாம் தேவை இல்லைன்னு வாதாடுன ஆளாச்சே?” என்றார்.

“என் மனைவி ஏதோ சித்தர் சமாதிக்கு போயிட்டு வந்தா. அந்த விபூதீங்க இது… இப்பெல்லாம் சித்தர் சமாதிக்கு என்ன கொறச்சல்…” என்றேன்.

“இப்போ சுத்துவட்டார பத்து கிலோமீட்டருக்குளாகவே நான் நாலு அப்படிப்பட்ட சமாதிகளை காமிக்க முடியும். என்னையே எடுத்துக்க எங்க வீட்டுல நான் நாலாவது குழந்தை. மூணு அக்காங்க. பையன் வேணும்னு இங்க உள்ள சித்தர் சமயத்தில வேண்டிக்கிட்டு தான் என்ன பெத்தாங்க. இப்போ அந்த சமாதி ஒரு கோயிலா ஆகிடுச்சு” என்றார்.

நான், “இதை எப்படி புரிஞ்சிக்கிறது? இதெல்லாம் தேவைதானா? கோயில் எனக்கு புரியுது. இந்தமாதிரி சித்தர் சன்னதி எல்லாம் கொஞ்ச டூ மச். எனக்குத் தெரியவே கணக்கன்பட்டி சித்தர் ஆசிரமம் இப்போ பெருசா வளர்ந்து போச்சு… நான் அவரை நேருல பாத்துருக்கேன். ரொம்ப சாதாரணமான வயசானவர். நான் பாக்குறப்ப அவருக்கு உடல் கோளாறுகள் இருந்தது” என்றேன்.

“பழனி பக்கத்துல இருக்குதே? அதுதானே. இங்க எல்லாம் அப்படித்தான் நடக்கும். இருந்திட்டு போகுது.  அது தேவைப்படும். அந்த மாதிரி செட் அப் இங்க இல்லைன்னா, வேற எந்த செட் அப் மக்களுக்கு லௌகீக சமாதானமும் மீட்பும் தரும்? தெருவுக்கு ஒரு psychiatrist வைக்கமுடியாதுல்ல?”

“அப்போ இதெல்லாம் சரின்னு சொல்லறீங்களா?  விட்டா கணக்கன்பட்டிக்கு பால் காவடியே தூக்குவீங்க போல” சொல்லிக்கொண்டு வரும்போதே என் அதிக பிரசங்கித்தனத்தை கண்டுகொண்டேன். ஆனாலும் அதை முடித்தாக வேண்டியதாயிற்று.

“தூக்கினாலும் தப்பில்ல. நான் தூக்கக்கூடிய ஆள் தான். ஏன் சொல்றேன்னா. தவறான சந்நிதியாக இருந்தாலும் தேடலில் உள்ள  சாதகனை அவனது தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டு செல்லும். It will deliver him.”

“கொண்டுசெல்லும்னா? எங்க சார்? முக்தி மோக்ஷம்-ன்னு சொல்லப்போறீங்களா?”

“அவ்வளவு பெருசு இப்போ வேண்டாம். மேலும் நமக்கு தெரியாததை பத்தி பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு விடுதலைன்னு வெச்சுக்குவோம். விடுதலைன்னா… எதிலிருந்து ன்னு ஒரு கேள்வி வரும். நம்மோட  கட்டாயத்திலிருந்து. இப்போ காலைல எழுந்த உடனேயே காப்பி குடிச்சே ஆகணும்ன்னு கட்டாயம் மாதிரி. இதெல்லாம் நாம் வகுப்பிலேயே பாத்தோமே… அதை தான் கர்மான்னு சொல்றோம். கர்மான்னா ஏதோ பெருசா நினைக்க வேண்டாம். எது அனுபவ வட்டத்துக்குள்ள இப்போ என்ன இருக்கோ அதை மட்டும் பாக்கலாம். யோக பயிற்சி தொடர்ந்து செய். மீதிய அப்புறம் பாத்துக்கலாம்” என்றார்.

நான் சாய்ந்து அமர்ந்தவாறே கேட்டேன், “அப்போ யோகா தியானம் செஞ்சா நம்மோட கட்டாயத்தில் இருந்து விடுபடலாம்ன்னு சொல்றீங்க. அதுக்கு will power போதுமே. எதுக்கு சார் யோகா?”

“will power எத்தனை நாளைக்கு? வைராக்கியம் வேலை செய்யும். இல்லைன்னு சொல்லலை. நான் வைராக்கியத்தை பயிற்சி செஞ்சவன் தான். அது என்னோட கட்டாயத்தை அழுத்தித்தான் வெச்சது. ஒருநாள் அழுத்தம் தாளம வெடிச்சது. ஆனா யோகா கட்டாயத்தை உதிர்ந்து போக வைக்குது. I see my compulsions withering away. I do all my actions out of my own choice.”

“எங்கையோ படிச்சிட்டு வந்து பேசுற மாதிரி இருக்குங்க சார்..”

“கரெக்ட் தான்.. நான் மறுப்பேன்னு  நினச்சு இதெல்லாம் சொல்றன்னு எனக்கு புரியாமல் இல்லை. படிச்சிட்டு வந்துதான் பேசுறேன். நான் படிச்சத validate பண்ணிட்டுதான் பேசுறேன். அதாவது என் அனுபவ உண்மைய மட்டும்தான் பேசுறேன். அப்புறம் படிச்சதை எல்லாம் கொண்டுவந்து இங்க பேசல. பெரும்பாலும் நான் இதையெல்லாம் பேசுறதில்லை. அது கேக்கறவங்க கற்பனைய பொறுத்து வளந்துக்கிட்டே போகும். இதோ இந்த ‘கர்மா’ என்ற சொல் மாதிரி. அதனால இதை மாதிரி கேக்கறவங்க கிட்ட நான் சொல்றது யோக பயிற்சி செய். இடைவிடாமல்..”

“சார்.. எல்லா கேள்விக்கும் பயிற்சி செய்ன்னு தான் நீங்க முடிக்கிறீங்க..” என்றதுக்கு சிரித்தார்.

டீ வந்தது.  சிறிய சக்கரைப் பை இரண்டை பிரித்து டீ கோப்பையிலிட்டு கலக்கினார். நான் அவரையே  பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். “சார் நான் இப்போ கட்டாயத்தின் பேர்ல ஒன்னும் டீ குடிக்கலை” என்றேன். மீண்டும் அழகாக சிரித்து, “வெளில சொல்லமாட்டேன் குடி” என்றார்.

ஒரு மிடறு அருந்தியதும், “சார்.. நாம அனுபவ உண்மையும் நூல் உண்மையும் பத்தி பேசிட்டு இருந்தோம். இப்போ உங்க அக அனுபவத்தை எந்த text ல கண்டுக்கிட்டீங்க?”

டீ கோப்பையை கீழே வைத்துவிட்டு என்னை நோக்காமல், “சைவ சித்தாந்தத்தில்..” என்றார்.

“சார்.. சைவத்திலா? நீங்க பௌத்த தத்துவம் அல்லது யோகா சூத்திரம்.. அப்படீன்னு சொல்வீங்கன்னு பாத்தேன்.”

என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்களை மூடி பேசலானார். “உண்மைய சொன்னா, எது நமக்கு  எப்படி அர்த்தம் ஆகும் எப்படி connect ஆகும்ன்னு சொல்ல முடியாது. நான் யோக சாதகனா ஆனதற்கு அப்புறமா தத்துவத்தின் மீது ஒரு ஆர்வம் வந்து படிச்சேன். எனக்கு எந்த தத்துவத்தை விடவும் என் அனுபவத்துக்கு நியாயம் செய்யறது சைவம் தான்னு படுத்தது. அப்புறம் தத்துவத்தை அறிவுச் சேகரமா செய்துகிட்டு போறதுல என்ன இருக்கு?”

“சைவ சித்தாந்தத்துல இந்த மாதிரி பயிற்சிகள் ஏதாவது வெகுஜனத்துக்கு சொல்லித்தரங்களா? வழிபாடற்ற பயிற்சி அதுல இருக்குதா?”

“இருக்குற மாதிரி எனக்கு தெரில. அப்படிப்பட்ட பயிற்சிகள் ஒரு காலத்துல இருந்துருக்க வேணும். அதன் கண்ணி எப்படியோ அறுந்து போச்சுங்கறது என்னோட ஊகம். இல்லைன்னா இவ்ளோ விலாவரியா எழுதீருக்க  முடியாதுன்னு நினைக்கிறேன்.”

“சித்தர் மரபு மாதிரி ஏதாவது…”

“சித்தர் மரபை பற்றி நான் தேடி போயிருக்கிறேன். எனக்கு நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் என் கண்ணுக்கு  படல. அதாவது அது வாழும் மரபாக இருந்திருந்தால் அதிலிருந்து ஒரு ஆசிரியர் புறப்பட்டு வந்திருப்பார்.”

“அப்போ சைவ ஆதீனங்கள்?”

“அவர்கள் மரபானவர்கள். நவீன காலத்துக்கு ஏத்த மாதிரி தங்களை  மறுவரையறை செய்துகொள்ளவில்லை ன்னு நான் நினைக்கிறேன்.”

“மறுவரையறை  செய்தா அந்த மரபான ஞானம் என்ன ஆகும்?”

“ஒன்னும் ஆகாது. உதாரணமா, இப்போ நான் சொல்லிக்கொடுக்குற methods கூட எதுவும் புதுசு இல்ல. தியானம் என்பது நவீன ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது. இந்த காலத்து ஆசிரியர்கள் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அந்த ஞானத்தை கடத்துறாங்க. அவ்வளவு தான். Different packaging. It is catchy, it is trendy. So it is working.”

“இந்த மாதிரி உயர் ஆன்மீக அனுபவங்கள் எல்லாம் கஞ்சா lsd போன்ற வஸ்துக்களால உண்டாக்கிட முடியும்.”

“அப்படியா? எனக்கு தெரில…”

“என்ன சார் தெர்ல ன்னு சொல்லறீங்க?”

“சரி அப்படி எடுத்துக்கற வஸ்த்துக்களோட வீரியம் நேரம் ஆகா ஆகா குறைஞ்சுடுச்சுன்னா? வீரியம் குறையாத வஸ்த்து  இந்த பயிற்சிகள்.”

“சரி நான் பயிற்சி பண்றேன். நீங்க பயிற்சி சொல்லித் தாறீங்க. இதுக்கு எதுக்கு ஆனந்த சைத்தன்யம் ன்னு ஒரு நிறுவனம்?”

“நிறுவனம் என்பது ஒரு வசதிக்குத்தான்.”

“அந்த நிறுவனம் வளந்துக்கிட்டு வருது. அது உங்கள மீறி வளந்துடுச்சுனா? அதுல இருந்தும் வெளியேறுவீங்களா?”

“நீ பின் தொடரும் நிழலின் குரல் சமீபமா வாசிச்சது எனக்கு தெரியும். படிச்சதையெல்லாம்  இங்க கொண்டுவந்து போட்டு பேசுறது யார்? நீயா? நானா? நீ வீரபத்திர பிள்ளை அருணாச்சலத்தை எல்லாம் என்கிட்டே தேடாத. என்னை எந்த இயக்கமும் வெளீல தள்ளல. என்னோட பணி அந்த அந்த இயக்கங்களில் முடிந்தது. நான் வெளியே வந்தேன்.”

“அப்படீன்னா உங்க செயல்பாட்டை எப்படி புரிஞ்சிக்கிறது?”

“நான் அறிந்ததை அறிவிக்கிறேன்னு சொல்வது கொஞ்சம் அதிக பிரசங்கித்தனம். அதனால நான் எப்பவுமே சொல்றது, நான் கத்துக்கிட்டது பிறருக்கு சொல்லித்தருவது. என்னால சிறப்பா இந்த யோக தியான கருவிகளை சொல்லித்தர முடியும். யோக ஆசிரியராக எனக்கு பல வருட பயிற்சி இருக்கு. இதுதான் நான் செய்வது.”

“நீங்க சொல்றத பாத்தா, நீங்க ஏதோ பொன்னுலகத்தை கற்பனை பண்ற மாதிரி தெரியுது”

“பொன்னுலக கற்பனை யாருக்குத்தான் இல்லை. எனக்கும் இருக்கு. நான் தலைமை தாங்கி அந்த உலகத்தை பண்ணி காமிக்கணும் அப்படின்னு சிறுபிள்ளை தனமான கற்பனையெல்லாம் எனக்கு இல்ல. நான் செய்யக்கூடிய செயலை நான் தொடர்ந்து விடாப்பிடியா செய்யறேன். அதற்கான ஊக்கத்தை என் ஆசிரியர்களிடம் இருந்து நான் எடுத்துகிறேன். அவ்ளோ தான்.”

“சார், மேலான உலகத்தை உருவாக்கிட சோசலிசம் மாதிரியான உலக இயக்கங்கள் முயன்றும் முடியாம போயிருக்கிறத  நாம பாக்குறோம். அப்படி இருக்கைல நீங்களும் உங்கள மாதிரி இருக்கவங்களும் உலகத்துக்கு யோகா தியானம் சொல்லிக்கொடுத்து இந்த உலகத்தை நல்ல முறைல மாத்திட முடியும்ன்னு நினைக்கிறீங்களா?”

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “மனிதன் உள்ளும் புறமுமாக பரிசுத்தம் அடையணும். அவனது கட்டாயங்கள் ஆறணும். அதற்கு அப்புறம் நாம் கற்பனை பண்ற பொன்னுலகத்தை பத்தி பேசலாம்.”

நான் தலையை மட்டும் லேசாக பின்னிழுத்து கண்களை லேசாக சுருக்கி “ஜே ஜே சில குறிப்புகள் சமீபமா படிசீங்களோ?”

“ஹாஹா.. ஹாஹா.. கண்டு பிடிச்சிட்டியா?” என்றவர் தன்னை திரட்டிக்கொண்டு பேசினார். “நமக்கு உள்ளே ஆழமா தெரிஞ்ச ஒன்னை மொழியாக மாற்றத் தெரியாத அந்த ஒன்றை நாம் இலக்கியத்திலே அடையாளம் காண்கிறோம். அந்த மாதிரிதான் இது.”

“கரெக்ட் தான் சார். சில படைப்புகளை நாம படிக்கும் போது அதுக்கு ஆமா.. ஆமா.. சொல்லிப் படிப்போம். ஜே ஜே சில குறிப்புகள் எனக்கு அப்படித்தான் இருந்தது. சில படைப்புகளை “இல்லை.. இல்லை..ன்னு சொல்லிப் படிப்போம். பின் தொடரும் நிழலின் குரல் மாதிரி.”

“அப்படியா..” என்று கேட்டவர் தரையை பார்த்து தனக்குள் சிறிது ஆழ்ந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவர், “இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனமா மாறிப்போகிறத அந்த நாவல்ல பாக்கலாம். அது சோகமான விஷயம். ஒருவேளை தவிர்க்க முடியாதோன்னு தோணும்.”

நான் அமைதியாக இருந்தேன். அவரும் அதையே செய்தார். “அந்த நாவல்ல இருந்து இப்போ வெளியே வந்திட்டியா?” என்று கேட்டார்.

“இல்ல சார்..’ என்றேன்

“மறுபடியும் குமரித்துறைவி படி. சரியாகிடும்.”

“இல்லீங்க… கொஞ்ச நாள் நான் அதிலேயே இருக்க விருப்பப்படுறேன்.”

எங்கள் இருவருக்கும் இடையில் ஏதோ அசௌகரியமான ஒன்று வந்து அமர்ந்தது போல் உணர்ந்தேன். “என்ன சார் டீ அதுக்குள்ள தீந்து போச்சு..” என்று கேட்டு அதை தாண்டி வர முயற்சி செய்தேன்.

“நல்ல டீ..” என்றார்.

இந்த உரையாடல் முழுதும்  ஏதோ முரண்பாட்டின் அடிப்படையில் செல்வது போல் உணர்ந்தேன். உடன்பாடான கேள்விகள் என்னென்ன என்று நான் எழுதிக் கொண்டு வந்திருந்த தாளில்  பார்த்தேன். “நீங்க ‘கற்கை நன்றே’ திட்டத்தை பத்தி எதுவுமே சொல்லல?   சொல்லக்கூடாதுன்னு ஏதாவது தீர்மானமா?” என்று கேட்டேன்.

ஆசிரியர் நிமிர்ந்து அமர்ந்தார். “உனக்கு எல்லாம் தெரிஞ்சது தானே.. கற்கை நன்றே மூலம் நண்பர்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்றோம். இதுவரைக்கும் சுமார் ஐம்பது மாணவர்கள் இதனால பயன் அடைந்தவர்கள்.”

“உங்களுக்கு இந்த எண்ணம் முதல்ல எப்படி வந்தது?”

“நான் ஈடுபட்டுள்ள தொழில்துறைல பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறேன். எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் எதிர்கால சமூகத்தை நிர்ணயம் செய்யறவங்க. அவங்க ஒரு வகை, நான் ஈடுபட்டுள்ள யோகா நிகழ்ச்சி மூலமா பல ஊர்களில் கிராமங்களில் நான் சந்திக்கிற மனிதர்கள் இன்னொருவகை. நான் என்னை அடையாளப் படுத்திக்கொள்வது இந்த கிராம மனிதர்களிடம் தான். அடிப்படையான கல்வி அவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் வாழ்வு பல மடங்கு உயர்வதை  நான் நேர்ல பார்த்துருக்கேன். அந்த இடைவெளி என் கண்ணுல படுது. நான் அதில செயல் செய்றேன். அந்த செயல் மூலமா நான் சந்தோசமாக இருக்கேன்.” அவர் கண்களில் ஈரப்பதம் நிறைவது போல் இருந்தது. எதோ சொல்ல வந்தவர் நிறுத்திக்கொண்டார்.

“அப்போ நீங்களும் புரட்சிதான் பண்றீங்க?”

மெலிதாக சிரித்து, “புரட்சிதான். சந்தேகம் வேண்டாம். இது கொஞ்சம் மெதுவா நடக்கிறப் புரட்சி. இந்த புரட்சியின் வித்தை நான் எனக்கு முன்னாடி செயல்  செஞ்சவங்க கிட்ட இருந்து எடுத்துக்கிட்டேன். எனக்கு அடுத்து வர்றவங்களுக்கு இதை செய்வாங்க. நானும் இதில ஒரு கண்ணி. அவ்ளோதான்.”

நான், “கற்கை நன்றே வருடம் இரண்டு முறை விழாவாக செய்யறீங்க. ஏன் ஒருதடவை கூட எந்த எழுத்தாளரையும் அழைக்கவில்லை.?”

“வாழ்க்கைல ஏதோ ஒரு விதத்துல சாதிச்சவங்களை அழைத்து மாணவர்களிடம் பேச வைக்கிறேன். அது அந்த மாணவர்களுக்கு பெரிய ஊக்கமா இருக்கும். ஜெ வை அழைக்கும் எண்ணம் இருக்கு. அதைப் பத்தி நான் உன்கிட்ட ஏற்கனவே பேசி இருக்கேன்.”

நான் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்து புன்னகைத்தேன். ஆசிரியரும் புன்னகைத்தார்.

“காந்தி மீது உங்களுக்கு உள்ள ஈடுபாடு பத்தி?”

“எல்லாருக்கும் உள்ள ஈடுபாடுதான். சத்திய சோதனைல அவரை அறிமுகம் செஞ்சுக்கிட்டேன். இன்றைய காந்தி மூலம் ரொம்ப நெருங்கி வந்தேன். இப்போ சுனில் கிருஷ்ணனுடைய  காந்தி டுடே இணையதளம் மூலம் மீண்டும் மீண்டும் காந்திய பல விதமா கண்டடைந்து கிட்டே இருக்கேன்.  காந்தி எதிர் தரப்பு இல்லாமல் போகனும்னு நினைக்க மாட்டார். அதனோடு உரையாட எப்போவும் ரெடியா இருப்பார். இதுகூட என்னோட பதில் இல்லை. நான் படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா அந்த பதிலை என்னோட பதிலா மாத்திக்கிட்டேன்.”

“உங்களோட எதிர்கால திட்டம்?”

“யோகா ஸ்டூடியோ ஒன்னு கட்டணும்… சரி விஜி, போலாமா? பேசிகிட்டு இருந்தா நேரம் போறதே தெரியமாட்டேங்குது. நெறைய அலுவல் இருக்கு. நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்குறது ஒரு போதை தான். அதுவும் நம்ல பத்தி நாமே பேசுறது பெரிய போதை தான்.” என்று விட்டு சிரித்தார்.

பில் கட்டிவிட்டு எழுந்தோம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வெளியே வந்து சிறிது நேரம் வேறு ஏது ஏதோ பேசிவிட்டு கிளம்பினார். அவர் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். சென்றுவிட்டார் என்று ஊர்ஜிதம் ஆனதும் மீண்டும் உள்ளே சென்று அமர்ந்தேன். உமா போனில் அழைத்தாள். எடுத்து இன்னும் ஆசிரியருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு துண்டித்தேன். அவசர அவசரமாக ஒரு டீ ஆர்டர் செய்தேன். வந்த டீயை நிதானமாக குடித்தேன்.

– விஜயகுமார் சம்மங்கரை


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

https://www.jeyamohan.in/181822/ ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களுடன் எழுத்தாளர் திரு விஜயகுமார் சம்மங்கரை அவர்கள் சந்தித்த நேர்காணல் சமீபத்தில் கோவையில் நிகழ்ந்தது. அந்த நேர்காணலின் தொகுப்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் கட்டுரையாக வெளியாகி இருந்தது.