கரூர் அரசு பாலிடெக்னிக் விடுதியில் மாணவர்களுக்கான ‘மெய்நலம்’ ஆரோக்கியப் பானத் திட்டத்தை தொடங்கியது ஆனந்த சைதன்யா அறக்கட்டளை

2026 ஜூலை 1, கரூர்

கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் “கற்கை நன்றே” கல்வி ஊக்கத்தொகைத் திட்டம், அனைத்து இளைஞர்களுக்குமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்களின் ஆரோக்கியமே வளமான சமூகத்தின் உறுதியான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், அறக்கட்டளையின் முதன்மை நலவாழ்வு முயற்சியான “மெய்நலம்” திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையில், உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் கலந்த சத்துமிக்க ஆரோக்கியப் பானத்தை மாணவர்களுக்கு வழங்கும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், வைக்கல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ டி.எஸ். ராமன் – சரோஜினிதேவி விடுதியில் தங்கி கல்வி பயிலும் 105-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 2026 முதல் தினந்தோறும் உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய சத்துமிக்க ஆரோக்கியப் பானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயிலும் 55-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 2026 ஜூலை 1 முதல் வாரத்திற்கு மூன்று முறை உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய ஆரோக்கியப் பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ‘மெய்நலம்’ திட்டத்தின் துவக்க விழா 2026 ஜூலை 1 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய எஸ். லோகநாதன், M.E. அவர்கள் தலைமை தாங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி விரிவுரையாளர் திரு. செல்வகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் நிறைவாக, விடுதியில் தங்கி கல்வி பயிலும் 55-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சத்துமிக்க ஆரோக்கியப் பானம் வழங்கப்பட்டது.

மாணவர்களின் உடல்நலம், கல்வித்திறன் மற்றும் ஒட்டுமொத்த நலனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் ‘மெய்நலம்’ திட்டம், எதிர்காலத்தில் மேலும் பல கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது என ஆனந்த சைதன்யா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *