உயிர் எத்தன்மைத்து? – கடிதம், இராச. மணிமேகலை, புதுவை

உயிர் எத்தன்மைத்து? – கடிதம், இராச. மணிமேகலை, புதுவை

அன்புநிறை ஜெ,

முதல் நிலைப் பயிற்சி வகுப்பினால் கிடைத்த உடல் மற்றும் மனநிலையின் முன்னேற்ற அனுபவமும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் ஜூன் 6,7,8 தேதிகளில் வெள்ளிமலையில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள என்னை வெள்ளிமலை நோக்கி செலுத்தியது. இந்தமுறை உடன் வருவதாகச் சொன்ன வழித்துணை நண்பர் ‘நழுவிவிட’ தனியளாக என் பயணம் தொடர்ந்தது. புதுவை–வெள்ளிமலை வழி தெரிந்து விட்டதால் போனமுறை இருந்த பயம் விலகிவிட்டது. வயது அறுபத்தியிரண்டு. இன்னும் போகவேண்டிய தூரம் எவ்வளவு எனத் தெரியாது. பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர ஏதேனும் ஒரு பற்றுக்கோடு வேண்டுமே! மகள், மகன் அவரவர்களின் குடும்பம் சார்ந்த பொருளாதாரத் தேவைக்களுக்கான இடப்பெயர்வுகளும், சூழ்நிலைகளும் என் போன்ற பெற்றோரை ஏதேனும் ஒன்றை இழந்தாற்போல எண்ணச் செய்கிறது. முகம் பார்த்துப் பேச, சிரிக்க, சிறுசிறு சண்டையிட பேரப்பிள்ளைகளை ஆரத்தழுவி முத்தமிட இனியில்லை என்ற எண்ணம் வாழ்க்கையை வெறுமை ஆக்குகிறது. வயதான காலத்தில் எல்லா கணவன்மார்களுக்கும் ‘நம்மைப் பார்த்துக் கொள்ள ஒருத்தி இருக்கிறாள்’ என்ற எண்ணமே கவலையற்ற நிம்மதியான வாழ்வைத் தருகிறது. அதேநேரத்தில் எல்லா மனைவிமார்களுக்கும் நாம் யார்? நமக்கு என்ன வேண்டும்? நம்முடைய விருப்பம் என்ன? மற்றவர்களுக்காகவே வாழ்ந்திருக்கிறோமே, அவ்வளவு தானா வாழ்க்கை? என்ற கேள்வியே எழுகிறது. இப்படித்தான் நான் வெண்முரசுக் கூடுகைக்குள் வந்தேன். அங்கிருந்து வெள்ளிமலை. வாசிப்பு என்ற சுவாசம் காட்டிய வழி இது! ஒரு வாசிப்பனுபவம் எனக்கு அளித்த பெருங்கொடை, உளக்குவிப்பு தியானப் பயிற்சி என்றே சொல்வேன்.

முதல்நாள் வெள்ளிக்கிழமையன்று புத்தர், வாக்தேவி வழிபாட்டு முறைமைகளுக்குப் பின் வகுப்பு தொடங்கியது. சுய அறிமுகம் முடிந்தப்பின் முதல்நிலைத் தியானப் பயிற்சியில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிரும்படிச் சொன்னார் குரு தில்லை செந்தில்பிரபு. இந்த முறையும் கணிசமானவர்கள் இளைஞர்கள். என் வயதுடையோர் நான்கைந்து பேரே இருந்தோம். மின்னனுக் கருவிகளின் பாதிப்புகளையும், அதனூடான அவர்கள் வாழ்க்கைமுறை, அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், முதல்நிலை வகுப்பில் அடைந்த பயன்களையும் இளைஞர்கள் பகிர்ந்தனர். பசியின்மை, தூக்கமின்மை, உளக்குவிப்பு சார்ந்த பிரச்சனைகளைக் கூறினர். இவர்களுக்கு நோய் என்ன எனத் தெரிந்திருக்கிறது. அதற்கான மருந்தைத், தீர்வை நாடியே இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் இருவர் மருத்துவர்கள். நோய் தீர்ப்பவர்களே இவர்கள்தானே? இவர்கள் எங்கே இங்கு என்று எனக்குள் ஒரு கேள்வி! ‘நாங்கள் நோய்க்கு மருந்து கொடுக்கிறோம்தான். ஆனால் அது அப்போதைக்கான தீர்வு மட்டுமே. நிரந்தரமான தீர்வு என்பது நோய்முதல் கண்டடைவதே. அது மனம் சார்ந்ததாக இருக்கிறது. மனதை சரிசெய்தால் நோய் தீரும் என்று சொன்னாலும் மக்கள் கேட்க மாட்டேன்கிறார்கள். உடனடி பலனே அவர்கள் எதிர்பார்ப்பது’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘நோயாளியின் அனைத்து நிலைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிற என்னுடைய மனப்பான்மையினால் அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. அதற்காகவே வந்தேன்’ என்றார். இளைஞர்கள் பலர் வயிறு சார்ந்த பிரச்சனைகள் முன்பைவிட இப்போது சரியாகி இருப்பதாக கூறினார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட குரு ‘பார்த்துக்கலாம்’ என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு வகுப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

மனம் அதன் செயல்பாடுகள், புருஷன், மூலபிரக்ருதி, புத்தி, அகங்காரம், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், சத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள். அவற்றின் மூலமாக பிரபஞ்சத்தை அடைதல், மகத், ஐந்து தன் மாத்திரைகள், ஐந்து பருப்பொருட்கள், ஐந்து புலன்கள், மனம், புத்தி என இருபத்து ஐந்து தத்துவங்கள் அடங்கிய சாங்கிய தரிசனத்தில் சொல்லப்பட்டவற்றை விளக்கினார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல்தான் இருந்தது. இந்த இருபத்து ஐந்து தத்துவங்களைப் பற்றி முன்பு ஒருமுறை நண்பர் அரிகிருஷ்ணன் ‘பனிரெண்டாவது பகடை’ (புதுவை வெண்முரசு கூடுகை) பேசுபகுதியில் உரையாற்றியது நினைவுக்கு வந்தது. ஏதாவது புரிந்ததா என்றார் குரு. சிலர் இல்லையெனவும், சிலர் ஆமாம் எனவும் சிலர் ஏதுஞ் சொல்லாமலும் இருந்தனர். ‘புரிந்தால் மிக நல்லது, புரியாவிட்டால் மிக மிக நல்லது’ என ஆசிரியர் சொன்னதும் வகுப்பில் நகைப்பொலி எழுந்தது. மதியம் உணவு இடைவேளையின்போது, இந்த தத்துவக் கருத்துகள் எனக்குப் புரியவில்லையே என நான் தோழியிடம் சொல்ல அவள் ‘நீங்கள் ஒருமுறை ‘ஜெ வின் தத்துவ வகுப்புக்கு வாருங்கள் மிக மிக எளிமையாக புரியும்’ என்றாள்.

அன்றைய மாலை வகுப்பை நீங்கள் யார்? என்ற கேள்வியோடு துவக்கினார் ஆசிரியர். நாங்கள் அவரவர் பெயர்களோடு சொன்னதும் கேள்வியை வேறொரு கோணத்தில் முன்வைத்து விவாதத்தைத் தொடங்கினார். இரு குழுவாக பிரிந்து பதில் அளித்தடன் ஒவ்வொன்றாக விளக்கி, ஒவ்வொன்றாக உடைத்து எது நிலைக்கும்? எது வாழும் எது வீழும் என தத்துவம் சார்ந்து விளக்கினார். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து இரு கைகளிலும் பால் நிறைந்து பொங்குவதாக கற்பனை செய்யுங்கள்! இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் வழங்குவதாக நினையுங்கள்! உங்களின் கருணையும் அன்பும் பெருகிச் செல்வதை கற்பனை செய்யுங்கள் எதிர்மறை எண்ணங்களை நீக்குவதும், நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதும் நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது” என்று கூறினார். “அறுகுளத்து உகத்தும் அகல்வயல் பொழிந்தும் வரையா மரபின் மாரிபோல” என்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நிகழ்வில் நமது உடலின் ஆற்றல் மையங்களையும் விழிப்புணர்வு, தூக்கம் கனவு, துரியம் பற்றியும் விளக்கி, ஆற்றல் மையங்கள் சமநிலையில் இல்லாதபோது உடல்ரீதியான, மனரீதியான சிக்கல்கள் ஏற்படுதல், இவற்றை சமன் செய்யவே யோகா, தியானப் பயிற்சிகள் என்பதையும் விளக்கினார். ‘உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான்’ என்று கூறினார். முதல்நாள் வகுப்பே சற்று ‘கனமானதாக’ உணர்ந்தோம்.

இரண்டாம் நாள் வகுப்பு ஆரம்பகட்ட பிராணாயாமத்திலிருந்து இன்னும் மேம்பட்ட, ஆழ்நிலை கொண்ட பிராணாயாம வகுப்பாக அமைந்தது. கபாலபதி, ஷீத்தலி பிராயாணாமங்களையும், உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணைந்து பிரபஞ்ச சக்தியை அடைவதற்கான படிநிலைகளைக் கொண்ட சில பிராணாயாமங்களையும் தியரிநிலையில் மட்டுமின்றி அவரே செய்து காட்டி விளக்கினார். பிராணன் செயல்படும் விதங்களையும், அதன் பலன்களையும் தெளிவாக விளக்கிக் கூறினார். அந்தந்தக் கணத்தில் வாழ்தல், நிகழும் அனுபவங்களை ஆராயாமல் அதனை உற்று நோக்குதல், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இருத்தல் இவைகள் உணர்வுநிலையில் உங்களின் மேம்பட்ட தியானத்திற்கு வழியமைக்கும் என்றார்.

சற்றுநேர இடைவெளிக்குப் பின்னரான நிகழ்வில் மிகவும் சக்திவாய்ந்த சைதன்ய சொரூப தியானமுறையை (துரியநிலை தியானம்) கற்றுக் கொடுத்தார். முதல்நிலைத் தியானப் பயிற்சி வகுப்பில் கற்பித்த யோகா மற்றும், தியானப் பயிற்சியால் எங்களில் பலர் பலன் அடைந்திருந்தோம். இந்த முறை இத்தியானத்தின் சிறப்புகளையும், உடல்நிலையில் உணர்வு நிலையில், சக்தி நிலையில் இத்தியானம் எவ்வளவு ஆற்றலை எங்களுக்கு அளிக்கும் என்பதையும் கூறினார். புருஷன் என்ற விழிப்புணர்வை உணருவதற்கான படிநிலைகள் இந்த இரண்டு நாட்களும் கற்பிக்கப்பட்டது என்பதை இத்தியானத்தில் அமர்ந்தபோது உணர்ந்தோம்.

இதற்காக நாங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். மூன்று குழுவினரையும் தனித்தனியாக அழைத்து அவரவர்களுக்கான மந்திரச் சொல்லை ஆலமரத்தடியில் அமர்ந்து உபதேசித்தார் குரு தில்லை செந்தில் பிரபு. யாரும், எதையும் யாரிடமும் பகிர்தல் கூடாது, கண்ணொடு கண் நோக்காமை, வாய்ச்சொற்கள் இலாமை என்ற கட்டளைகளை ஏற்று தியானத்தில் அமர்ந்தோம் நாங்கள். இத்தியானத்தின் அனுபவம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அமர்ந்த சில நிமிடங்களிலேயே உடல் என்ற பருப்பொருள் அங்கிலாததான, தன்னை மறந்த நிலை அது கனவா, இல்லை நினைவா என்று தெரியாத நிலையை அடைந்தேன். இனிப்பு சாப்பிட்ட பின்னும் நாக்கின் அடியில் ஓரு தித்திப்பு தங்கியிருக்குமே அது போல தியானம் முடிந்து கண்ணைத் திறந்த பின்னும் உடல் முழுவதும் ஒரு பரவசநிலை பரவியிருந்ததை அறிந்தேன். குரு அனைவரிடமும் பின்னூட்டம் கேட்டுக் கொண்டு என்முறை வந்தபோது நான் சொன்ன பதில் ‘சுகமாயிருந்தது; என்பதே! யாரிடமும் பகிராத எங்களின் அகம் மட்டுமே அறிந்த அந்த மந்திரச்சொல் எங்களுக்கு மட்டுமானது. அச்சொல்லை விட மேலானது அந்த தியானம் எனும் பெரும் நிதியம். இரண்டாம் கட்ட இப்பயிற்சியைத் தவறவிட்டவர்கள் இப்பெரும் நிதியை தவறவிட்டவர்கள் ஆவர்.

இதில் சிறப்பாக நான் உணர்ந்த விஷயம் என்னவென்றால் இரண்டு கட்டப் பயிற்சிகளிலும் எங்களை உடற்பயிற்சி, யோகப் பயிற்சி, தியானப்பயிற்சி என அகமும் புறமும் தயார் செய்து, அந்நிதியைப் பெற எங்களைத் தகுதியுடைவர்களாக்கி விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை அளித்ததை என்னவென்று சொல்வது? பிராணாயாம நிலையில் உடலைத் தூய்மைப்படுத்தியும், உணர்வுநிலையில் மனதைத் தூய்மைப்படுத்தியும், சக்தி நிலையில் எங்களின் உள்சக்தியை மேம்படுத்தியதையும் உணர்ந்து வியந்தோம். ‘சில பயிற்சிகள் செய்யும்போது எப்போது முடியும் என்றிருக்கும். இப்பயிற்சி மட்டுமே எப்போது ஆரம்பிப்போம் என எண்ண வைத்தது; எனப் பலரும் பின்னூட்டத்தில் கூறினார்.

மறுநாள் வழக்கம்போல் காலைநேர யோகா பயிற்சி, பிராணாயாமப் பயிற்சி, தியானம் என முதல் கட்ட நிகழ்வு முடிந்தது. இரண்டாம் கட்ட நிகழ்வில் அவரவர்கள் மூன்று நாட்களாக நடைபெற்ற அனுபவங்களைப் பகிர்ந்தனர். என் அனுபவங்களைக் கூறிய பின்னர் அங்கிருந்தவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ‘உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களையும் குறிப்பாக உங்கள் வீட்டின் பெண்களையும் இந்த உளக்குவிப்பு தியானப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து வாருங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாக இருக்கும்’.

யோக தரிசனத்தின் நோக்கம், அத்தரிசனத்தை உணர்த்துவதற்காக கற்பிக்கப்பட்ட படிநிலைகள் இத்தனையும் கற்று நாங்கள் அடைந்த சைதன்ய சொரூப தரிசனம் மாபெரும் நிதியம்! உயிர் எத்தன்மைத்து என்று கேட்டால் என்ன சொல்வோம்? ‘அது உணர்தல் தன்மைத்து’ ஆம்! தியானமும் உணர்தல் தன்மைத்தே! அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்.

இராச. மணிமேகலை


இது கடந்த ஜூன் (2025) மாதம் 6,7 & 8 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திருமதி. இராச. மணிமேகலை அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்டதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.

இந்த கடிதம் கடந்த 3 ஜூலை 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் உயிர் எத்தன்மைத்து? எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்


உளக்குவிப்பு- கடிதம் – சூரிய நாராயணன்

உளக்குவிப்பு- கடிதம் – சூரிய நாராயணன்

வணக்கம்

மார்ச் 8-10 2024 தேதிகளில் நடந்த உளக்குவிப்பு வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பயிற்சி செய்யத் தொடங்கி 11 மார்ச் 2025தோடு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்தது (மார்ச் 12 2024ல் இருந்து பயிற்சியைத் தொடங்கினேன்). இந்த ஒரு வருடத்தில் 15ல் இருந்து 20 (அதிகபட்சம்) நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பயிற்சியை விடாமல் செந்திருக்கிறேன்.

இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள், கிட்டத்தட்ட எல்லா மாதங்களிலும் வெளியூர் பயணங்களுக்கு இடையிலும் தவறாமல் பயிற்சி செய்ய முடிந்திருப்பதே பெரும் நிறைவைத் தருகிறது.

– சூரிய நாராயணன்


இது கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் 8,9 &10 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திரு.சூரிய நாராயணன் அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்ட தியானபயிற்சிகளை கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக பயிற்சி செய்து அதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.

இந்த கடிதம் கடந்த 8 ஏப்ரல் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் உளக்குவிப்பு- கடிதம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

உளக்குவிப்பு – ஈரோடு வெள்ளிமலையில் மூன்று நாட்கள் நடைபெற்ற தியான பயிற்சி வகுப்பின் பங்கேற்பாளர் திருமதி. இராச மணிமேகலையின் “அருமருந்து” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பகிர்வு!

உளக்குவிப்பு – ஈரோடு வெள்ளிமலையில் மூன்று நாட்கள் நடைபெற்ற தியான பயிற்சி வகுப்பின் பங்கேற்பாளர் திருமதி. இராச மணிமேகலையின் “அருமருந்து” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பகிர்வு!

அருமருந்து!

அன்புநிறை ஜெ.

பிப்.28, மார்ச் 1,2 தேதிகளில் உளக்குவிப்பு பயிற்சி வெள்ளிமலையில் என்ற அறிவிப்பு உங்கள் தளத்தில் கண்டேன். சென்ற வருடமே கிளம்ப ஆயத்தமாகி இந்த முறை கைகூடியது. நெடுநாட்களாக தூக்கமின்மை, மனம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். புதுவையில் இருந்து யார் யார் வருகிறார்கள் என்று தெரியாத நிலையிலும் தனி ஒருத்தியாக வெள்ளிமலை கிளம்பிவிட்டேன். வாட்ஸ்அப் குழு 5 நாட்கள் முன்னதாக Open ஆனபோது யாருமே புதுவையில் இருந்து வெள்ளிமலைக்கு கிளம்புவதாக அதில் தகவல் இல்லை. கணவரும் மகனும் போருக்கு அனுப்புவது போல இரவு 11.00 மணிக்கு Sleeper Coach பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். ஏறி உட்கார்ந்ததும் போனைப் பார்த்தால் வாட்ஸ்அப் குழு பரபரத்து கிடந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் இருந்து அந்தியூர் வரை TT-ல் யாரெல்லாம் வருகிறீர்கள் என் ஓட்டெடுப்பு வேறு போய்க் கொண்டிருந்தது. சென்னை, பெங்களுர், ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், சேலம், காஞ்சிபுரம் இடங்களில் இருந்து வருகிறோம் எனப் பலரும் பதிவிட, ஒருவர் நான் பைக்கில் வரேன் என்கூட யார் வரீங்க…. என்பன போன்ற தகவல்களால் தகித்தது குழு. அட்மினும் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாருங்கள் என எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார், நான் ஒருத்தி மட்டும், “ஹலோ! யாராவது என்னை பைபாஸில் Pickup பண்ணிக்கிறீர்களா” எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன். பவானி பைபாஸ் எங்கே இருக்கு? அந்தியூர் எங்கே இருக்கு? ஈரோடு ரயில்வே ஸ்டேசன் எங்கிருக்கு? என எதுவும் தெரியாமல் போகும் இடம் பற்றிய கனவுகளோடு 4.15 மணிக்கு பவானி பைபாஸில் வந்து இறங்கினேன். வாயிலே இருக்கு வழி என்பார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான். (நான் என்ன Sixteen ஆ Just Sixty!) ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’. தெய்வம் போலீஸ்காரர் வடிவில் வந்து அந்தியூருக்கு பஸ் ஏற்றிவிட்டது. காந்தியடிகள் சொன்னது போல் (என்றைக்கு ஒரு பெண் தன்னந்தனியாக…) 28.02.25 அன்றுதான் இந்திய சுதந்திர தினம். அந்தியூர் இறங்கினால் அங்கே நித்யவனம் செல்லும் தெய்வங்கள் எனக்கு உதவி பண்ண, அந்தியூரிலிருந்து வெள்ளி மலைக்கு  பேருந்தில் ஏறி அமர்ந்து பெருமையோடு முதல் பஸ் பிடித்துவிட்டேன் என்று குழுவில் பதிவிட்டேன்.

விரையும் தோட்டங்களை, பனியில் நனைந்த மரங்களை, பனிப்படலத்தின் ஊடே தெரியும் சின்னஞ்சிறு ஊர்களை, ஷேவ் செய்யப்பட்டது போன்ற பெயர் தெரியாத மரங்களை, பூமியிலிருந்து  மேலே கிளம்பி வானத்திற்கு சாமரம் வீசும் மரங்களை, கரையும் காகங்களை, கூவும் குயில்களை, ‘தண்டலை மயில்களின் நடனத்தை, தாமரைகள் விளக்கம் தாங்குவதை, குவளைக்கண் விழித்து நோக்குவதை’ வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வெள்ளிமலை நித்யவனத்தில் கால்பதித்தேன்.

ரம்மியமான இயற்கைச்சூழல், அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிடம், சரஸ்வதி அம்மாவின் கைப்பக்குவத்தில் அருமையான உணவு, இனிப்பும் புளிப்பும் கலந்த அந்தப் பானகம், அந்தியூர் மணியின் அனுசரணையான பேச்சு…. நகரத்தில் இருந்து வருபவர்களுக்கு நித்யவனம் சொர்க்கபூமிதான். தியானம், யோகா, தத்துவம், மனஅமைதி, இலக்கியம் இவைகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்த இந்த இடத்தை நீங்கள் ஏன் தேர்வு செய்தீர்கள் என்பதற்கான காரணம் அங்கு சென்றவர்களுக்கே தெரியும்!

இறை வழிபாடு முடிந்து குருநித்யா அரங்கில் நுழைந்தோம். நெடிய தோற்றத்தில், தூய வெண்ணிற ஆடையில், நிலம் அதிராமல் நடந்து வந்து அமர்ந்தார் குரு தில்லை செந்தில்பிரபு. சுய அறிமுகம்  முடிந்தது. வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர் இளைஞர்கள். 50, 60 வயதுகளில் இருந்தோர் கால்வாசி. இந்த இளைஞர்களுக்குத்தான் என்னென்ன பிரச்சினைகள்? தொழில் முனைவோர், தனியார், அரசு அலுவலகங்களில்   உயர்பதவியில் இருப்போர், காவலர்கள், இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தோடு வந்திருந்தோர் எனப் பலரகத்தினர். இவர்கள் என்ன காரணத்திற்காக உளக்குவிப்பு பயிற்சிக்கு வந்தார்கள் என்பதைத் தொகுத்துப் பார்த்தால் தூக்கமின்மை, கவனச்சிதறல், மனஅழுத்தம், செல்போன் பாதிப்பு இவைகள்தான் எனலாம்.

வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் குரு மனம், விழிப்புணர்வு, கவனக்குவிப்பு, இக்கணத்தில் வாழ்தல் முதலான விசயங்களைக் கூறினார். வகுப்புக்கு நேரத்தோடு வருதல், செல்போன் தடை இதனை கவனிப்புடனும் கண்டிப்புடனும் செயல்படுத்தினார். கேள்விகளும் பதில்களுமாக வகுப்பு சென்றது. 2 மணியிலிருந்து 5.30 மணிவரை Break. இரவு 9.00 மணி வரை வகுப்பு நீண்டது. சிறப்பாக, சாப்பாடு பற்றி சொல்லியே ஆகவேண்டும். வீட்டில் கூட நாம் சாப்பிடுகிறோம்தான். இங்கு சாப்பிட்டதுதான் சாப்பாடு. வாயார, வயிராற சோற்றை அள்ளி, அள்ளி உண்டோம்! பசித்துப் புசி என்று சும்மாவா சொன்னார்கள்? சரஸ்வதியம்மாள் நல்ல உடல் நலத்துடன்  வாழ இறை அருள்புரியட்டும்! இங்கிருந்த மூன்று நாட்களும் குருவாலும் இயற்கை சூழலாலும், அகமும் புறமும், அடியோடு மாறிவிட்டது. அதிர்ந்த பேச்சரவம் கூட கேட்கவேயில்லை.

சனிக்கிழமையன்று பிரணாயாம, தியானப் பயிற்சிகள் முடிந்த பிறகு குரு இன்னும் சில பயிற்சிகளை பயிற்றுவித்தார். அதாவது, நின்ற நிலை, கிடந்த நிலை, அமர்ந்த நிலை மட்டுமன்றி உடலசைவுகள் மூலமான பயிற்சியும் நாடி நரம்புகளை புத்துணர்ச்சி அடையச்செய்யும் என்று கூறினார். அடுத்து தூக்கமின்மை பிரச்சனைக்காகத்தான் பலபேர் இங்கு வந்திருந்தோம். அந்தப் பயிற்சி  முடியும் தருவாயில் பலரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதை ‘கொர் கொர்’ குறட்டையொலியால் உணரமுடிந்தது. இப்பயிற்சிக்குப் பின்னர் நான் எப்போதும் நித்ரா தேவியின்  அணைப்பிலேயே இருந்தேன். யாராவது ஒருவர் தேவியின் பிடியிலிருந்து என்னை எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். எதற்காக நான் இங்கே வந்தேனோ அது நிவர்த்தியானதை உணர்ந்தேன்.

நான் அன்று மதியம் உங்கள் புத்தகங்களை அந்தியூர் மணியிடம் வாங்கிக் கொண்டு வந்ததைப் பார்த்து பலரும் ஆர்வமுடன் சென்று வாங்கினர். இரவு உணவு முடிந்தவுடன் அந்தியூர் மணி, ‘இசை மழையில் நனையத் தயாரா’ குங்கள் என அன்பு வேண்டுகோள் விடுக்க, மதியம் வாங்கிய புத்தக வாசம் என்னை அறைக்கு அழைக்க, நான் புத்தகத்தில் மூழ்கினேன். இங்கே இசை மழையில் நனைந்து, அனைவரும் தலை துவட்டும் நேரத்தில் நான் அங்கு செல்ல ‘வாங்க வாங்க நீங்க ஒரு பாட்டுப் பாடுங்க’ என்றவுடன் மங்களம் பாடி இசைக் கச்சேரியை முடித்துவைத்தேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியோடு வகுப்பு நிறைவடையும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது. அன்றைய வகுப்பில் இதுவரை கற்றுக்கொடுத்த பயிற்சிகள், தியானமுறைகள், சந்தேக நிவர்த்திகள் மறுபடியும் நினைவூட்டப்பட்டது. மூன்று நாட்களாக நடைபெற்ற பயிற்சியின் பின்னூட்டம் பற்றி பலர் பேசினர். பின்பு குரு அனைவரையும் கண்களை மூடி அமரக் கேட்டுக் கொண்டார். இறுதியாக அவர் உபதேசித்த ‘அந்த மந்திரம்தான்’ அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இதுதான் இந்தப் பயிற்சியின் உச்சம்! அந்தக் குரலின் சக்தியும், அமைதியும், அந்த இடத்தின் சூழலும் எப்படிப்பட்டவரையும் அசைத்துப் பார்த்துவிட்டது என்றே சொல்வேன். மூன்று நாட்களாக எடுத்துக்கொண்ட பயிற்சியில் மனம் பண்படுத்தப்பட்ட நிலம்போல் அவ்வளவு இலகுவாக இருந்ததால் அவரவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், விசும்பலும், சன்னமான அழுகையொலியும், அவ்விடத்தை நிறைத்தது. மனதில் உள்ள குப்பைக்கூளங்களைத் தூர்வாரி, சரிசெய்துவிட்டு அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார் குரு. ‘கல்லுதல்’ என்ற சொல்லுக்கு ‘அகழ்தல்’ எனப் பொருள். ஒரு ஆசிரியராக எங்களின் அகத்தே இருந்து என்னென்ன அகழ்ந்தெடுத்தார் என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம். கலங்கிய விழிகளுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். ‘கண்டும் கேட்டும் உறவாடிய நாங்கள் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்தோம்’.

ஏன் சார் எங்களை அழ வைச்சீங்க?

நித்யவனத்தின் அருமருந்தை உட்கொண்டு வீடு திரும்பிய நான் நானாக இல்லை! யாரிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை. மனதின் கசடுகள் நீங்கி, எண்ணஅலைகள் ஏதுமற்றவளாக, அமைதியாக என்னை நானே உள்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்!  குறையொன்றுமில்லை!

பயிற்சிக்கு வந்த அனைவரின் சார்பாக குருவுக்கும், தங்களுக்கும், மற்ற வர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்!

இராச மணிமேகலை

Sharings Link :  அருமருந்து | முழுமையறிவு

Ulakkuvippu – Three-day residential meditation program participant, Senthil Arasu Subramani Sharings through letter

Ulakkuvippu – Three-day residential meditation program participant, Senthil Arasu Subramani Sharings through letter

I am writing to express my immense gratitude for the incredible three-day residential meditation workshop held from February 28 to March 2, 2025 , at Nithyavanam, Vellimalai. It was an absolute pleasure to be a participant in this transformative experience.

From the serene location to the comfortable accommodation, delicious food, and, most importantly, the well-structured meditation workshop, every aspect of the program was flawlessly organized. The guidance and hand-holding approach made it exceptionally easy for a novice like me to learn and follow the proven meditation technique in , Ulakkuvippu. Nothing could have been better than this event!

A special thanks to “Guruji” Mr. Thillai Senthil for their dedicated care and commitment to ensuring that every participant absorbed the intended teachings with clarity and confidence. His personal attention made a significant impact on my learning journey.

I also extend my sincere appreciation to Writer “J ” for incorporating this session into Unified Wisdom. This workshop is truly a must-have experience for anyone aspiring to achieve excellence in both personal and professional life.

Once again, thank you for organizing such a life-changing program. I look forward to participating in more such enriching sessions in the future.

Thanks

Senthil Arasu Subramani

Ananda Chaitanya Focus – Meditation Intensive Program Sharings

Ananda Chaitanya Focus – Meditation Intensive Program Sharings

Dear Thillai Guruji,

Yesterday evening After I experienced the Stillness meditation. Yogic exercises Asanas, Panayama & Chaitanya Meditation I felt calm and peaceful inside. My mind was fully quiet I didn’t think about any worries or problems. For The first time I felt my mind is so happy without any reason & thought process, mind is entirely happy.

Today morning nearly after 06:30 am I experienced the above 5 sets of yoga practices, My mind is entirely blank and calm with happy, I experienced this peaceful silent for more than 2 hours.

Especially while I’m doing Chaitanya meditation, I felt too silent in my inner mind, I entirely connected with myself. After I experienced the Chaitanya Meditation my entire body is relaxed, my mind is calm and very happy. I felt too wonderful experience in Chaitanya meditation.

Vishwa
Design Engineer
Coimbatore.

ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்பு விழா

ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்பு விழா

தில்லை செந்தில்பிரபு உயர்தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர். தியானப்பயிற்சி அவர் நடத்திவரும் தனிப்பட்ட செயல்பாடு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக தியானப்பயிற்சியில் அனுபவம் கொண்டவர். முழுமையறிவு அமைப்பின் சார்பில் தொடர் பயிற்சிவகுப்புகள் நடத்திவருகிறார்.

கோவையில் அவர் தனக்கான தியானமையம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதை நான் நாளை (20 டிசம்பர் 2024) அன்று திறந்துவைக்கிறேன்.

இடம் சி. பிளாக், சைட் 2, டி.ஆர்.எஸ்.அவென்யூ, குரும்பப்பாளையம் கோவை.

காலை 8:00 மணிமுதல் 9:15 வரை காலையுணவு

விழா காலை 9:30 முதல் 10:30 

நிகழ்ச்சி நிரல்

  • 9.30 இறை வணக்கம். -கவி நிலவன்
  • 9:35 குருபூஜை – தில்லை
  • 9:40 வரவேற்பு & தியான மைய அறிமுக உரை – தில்லை
  • 9:50: நினைவுப்பரிசு வழங்குதல்
  • 9:52 : குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை – ஜெயமோகன்
  • நன்றி உரை – விஜய் குமார் சம்மங்கரை

திறன் மேம்பாட்டு கூடங்கள் திறப்பு.

  • பிரக்யா – ஜெயமோகன்
  • சங்கல்பா – திருநாவுக்கரசு
  • தேஜஸ் – திருநாவுக்கரசு

இது ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா எனும் தலைப்பில் டிசம்பர் 19, 2024 அன்று பிரசுராமான செய்தி தொகுப்பு

அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் – மனோஜ், திருவானைக்காவல் 

அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் – மனோஜ், திருவானைக்காவல் 

டிசம்பர் 15, 2024

அன்புள்ள ஜெ,

நலமறிய ஆவல்.

இந்த வாரம் பங்கெடுத்த தியானம் உளக்குவிதல் வகுப்பின் அனுபவங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.

முதலில் மனதிற்கான பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி அன்றாடம் நான் செய்தது இல்லை. புத்தக வாசிப்பொன்றுதான் நான் செய்திருந்த உட்சபட்ச கூர்ந்த தியானம். தற்போது இந்திர நீலம் படித்துக்கொண்டிருக்கிறேன். துவாரகையில் இருக்கும் வரை மனம் அதில் லயிக்கிறது. வெளிவந்த உடனேயே அலுவலக வேலை செய்யும் ஒரு உருவாகவும், அதே நேரம் இடைவிடாது மனத்துள் ஓடிக்கொண்டிருக்கும் உரையாடல்கள், கேள்விகள், பதில்கள் என்று சக்தியை செலவிடும் ஒரு உருவாகவும் இரு கூறாக மனம் பிரிந்து நிற்கிறது.

மிக முக்கிய அரிதலாக தில்லை குருஜி சொல்லிக்கொடுத்தது இந்த மனம் மற்றும் உடல் இரண்டிற்குமான ஒத்திசைவை. மூன்று நாட்களும் முயன்று முயன்று அதை தான் அடைய முற்பட்டோம். ஓரளவு அடையவும் செய்தோம். 

இயற்கை தியானத்திற்காக ரம்மியமான கால நிலையை வழங்கியது, நாள் முழுக்க குளிரும் அவ்வப்போது மென் தூறலும் இருந்தன. 

தேநீருக்கு பதிலாக சூடான எலுமிச்சை சாறு போன்று நிறைய மாற்றங்களை வகுப்பிற்காக ஏற்படுத்தியிருந்தார், அனைத்து வகுப்புகளும் குறித்த நேரத்திற்கு 10 நிமிடம் முன்பே தொடங்கி அனைவரும் நிலையில் அமர்ந்த பின்னரே தொடங்கியது.

முதல் பயிற்சியாக Stillness meditation கற்றுக்கொடுத்தார். முதலில் நிலையில் அமர்ந்து உடலின் தற்போதைய நிலையை கவனிக்க உதவும் பயிற்சி, அதனை தொடர்ந்து yogic exercises என்னும் உடற்பயிற்சிகள். வெள்ளிக்கிழமை மாலை கணம் குறித்த விளக்கமும் அதனை தொடர்ந்து சில உலகுவித்தல் குறித்த கருவிகளையும் பற்றி விளக்கினார். கணம் குறித்த விளக்கம் மிகப்பெரிய திறப்பாக இருந்தது. நேற்றும் நாளையும் என்று ஓடி ஓடி இந்த கணத்தை இழந்தபடியே இருக்கிறேன். 

இரண்டாம் நாள் காலை பிராணயாமா பயிற்சிகளை முடித்து குருவணக்கத்தோடு சைதன்ய தியானம் தொடங்கினோம். உண்மையில் மூன்று படிநிலைகளாக ஆழ்ந்த அனுபவத்தை கொடுத்தது. பயிற்சி முடித்தபின் தெளிந்த ஓடைக்கருகில் அமர்ந்திருந்து அமைதியான நீர் ஒழுக்கை காண்பது போன்று எண்ணங்கள் தெளிவாகின. மாலை மீண்டும் சிறு வகுப்பும் பயிற்சிகளும்.

ஞாயிறு காலை மீண்டும் Stillness meditation, யோக உடற்பயிற்சிகள், நாத முத்ர மற்றும் பஞ்ச பிராண பிராணயாமா, நாடி சோதனா, யோக நித்ரா இறுதியாக சைதன்ய தியானம் செய்து முழு பயிற்சி முடித்தோம்.

வகுப்பில் பங்கு கொண்ட நண்பர்கள் பலவகையான பின்னணியிலிருந்து வந்திருந்தனர். தலைமை மேலாளரிலிருந்து திரைப்பட துறை உதவி இயக்குனர் வரை, இருதய சிகிச்சை நிபுணரிலிருந்து கட்டிட கலைஞர் வரை, மழலைகள் முதல் மூத்தோர் வரை என அத்தனை பேருக்கும் தேவையான ஒரு பயிற்சியாக தியானம் உள்ளது.

தில்லை குருஜி கனிவான கணித ஆசிரியர் போல. அவ்வப்போது கண்டிப்பும் வெளிப்பட்டது. தியானம் காலை மாலை மற்றும் செய்யும் ஒரு பயிற்சி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்ற ஆப்தவாக்கியதோடு விடைபெற்றோம். தியான நிலையத்தை தாங்கள் திறந்து வைக்க வருவதை சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு முறை தியானத்தில் அமரும்போதும் புதியதொரு அனுபவம் கிடைக்குமாகையால் அடுத்த 40 நாட்கள் இரு முறையும் அதற்கடுத்த 6 மாதங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் பயிற்சியை தொடர சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்.

வாழ்வு முழுமைக்கும் உடனிருக்கும் மூன்று தினங்களாக அமைந்த இந்நாட்களை வழங்கிய உங்களுக்கும் குருஜிக்கும், வகுப்புகள் சீராக நடைபெற ஒவ்வொரு அமர்வுக்கு முன் உழைத்த இரு நண்பர்களுக்கும் (பெயர் கேட்க மறந்துவிட்டேன்) மற்றும் பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும். 

அன்புடன்,

மனோஜ், திருவானைக்காவல் 


ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று  அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

தியானவகுப்பு- கடிதம்

தியானவகுப்பு- கடிதம்

December 7, 2024

நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை தியான வகுப்பு நடப்பதான அறிவிப்பு வந்தது.தியானமும் பயில  பல நாட்களாக எண்ணம் இருந்தது. நண்பரின் துணையும் கிடைத்தது. கூகிள் கோவையிலிருந்து நான்கு மணிநேரப் பயணம் என்றதால் முதல் நாளே கிளம்பிப் போகலாமா எனும் எண்ணம் எழுந்தது. நித்யவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அந்தியூர் மணியும் மாலையில் வரலாம் என அனுமதி தந்தார். இருட்டுவதற்குள் சென்று விடலாம் எனும் எண்ணத்தில் மதிய உணவினை முடித்ததும் கிளம்பினோம். 

 அந்தியூருக்கு எந்த திசையிலிருந்து வந்தாலும் சாலை நன்றாகவே இருக்கும் போல. கூகிள் வழிகாட்டியபடி குன்னத்தூர் கோபி வழியாக அந்தியூர் சென்று சேர்ந்தோம். கொல்லேகால் சாலையில் நகர எல்லையைத் தாண்டியதுமே வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. எதற்கும் கொஞ்சம் வெயிட் இருக்கட்டும் என்று வெள்ளிமலை ஆசிரமித்திற்குச்  செல்கிறோம் என பதிலளித்துவிட்டு கடந்து சென்றோம். இனிய மாலையில் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதான எச்சரிக்கைகளை பார்த்தபடி ரசித்து பயணித்தோம். சில கொண்டை ஊசி வளைவுகளுடன் சிறப்பான சாலை. 

தாமரைக்கரையிலிருந்து வெள்ளிமலைக்கான சாலைதான் சிறிது பழுதடைந்துள்ளது. சாலை வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜல்லி பரப்பி இருந்ததாலும் ஆங்காங்கே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த இடங்களில் மண்பாதையில் செல்லவேண்டி இருந்ததும் சிறிது கவலை அளித்தது. வழியில் சாலையோர மரங்களும் இயற்கை காட்சிகளும் கிராமங்களில் அய்யப்பன் ஆலயங்களில் பாடல்களும் இறுக்கத்தினை தளர்த்தின.  சாலலையிலிருந்து நித்தியவனத்திற்கு பிரியும் இடத்தை அடைந்தபோது சுமார் ஆறுமணிக்கே நன்கு இருட்டியிருந்தது. குறுகலான மண்பாதையில் செல்லும்போது கார் தரைதட்டி விடுமோ எனும் அச்சம் இருந்தது. அதற்குள் மணி அவர்கள் நாங்கள் வந்ததை தொலைவிலிருந்து பார்த்து வழி சொன்னார். அவர் சமையலுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வெளியே சென்றிருந்தார். நுழைவாயிலை ஒட்டிய வீட்டின் திண்ணையில் பேரனுடன் அமரந்திருந்த  காவல்கார முதியவர் உற்சாகமாக வரவேற்றார். மேடேறிச் சென்று முதலில் கண்ட கட்டிடத்தின் அருகில் கார் நிறுத்தினோம். சுற்றிலும் இருட்டு. பாதையிலும் கூட வளர்ந்து நிற்கும் புற்கள். காரை விட்டு இறங்க எனக்கு தைரியம் இல்லை. நண்பர் சகஜமாக கீழிறங்கி புதிதாக வாங்கிய கைபேசியில் படங்களை எடுக்கத் துணிந்தார். உள்ளே வந்து அமரும்படி அவரை வேண்டினேன். பூச்சி பொட்டு இருந்திச்சுன்னா?

சிறிது நேரத்தில் குருஜி செந்தில் பிரபு அவர்களும் வயநாட்டிலிருந்து பேரசிரியர் காந்தநாதனும் வெவ்வேறு கார்களில் வந்துசேர்ந்தனர். சிறிது ஆசுவாசமாக இருந்தது. மணியும் வந்து சேர்ந்தார். எங்களுக்கான தங்குமிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். கரடுமுரடான சரிவான பாதையில் இறங்கிச் சென்றோம். தங்குமிடம் ஒரு டார்மிடரி. எனது முதல் டார்மிடரி அனுபவம் இது. மூன்று ஓரங்களிலும் 2+3+3 என எட்டு இரண்டடுக்கு பங்கர் பெட் நடுவே வெற்றிடம்.  இங்கே எல்லாம் ஃபுல்லா பெட் போட்டிருவோம் என மணி சொல்ல எனக்கு இவ்வளவு கூட்டத்தில் எப்படி இருக்குமோ எனும் கவலையாக இருந்தது. மணியும் காந்தநாதனும் தீவிர தத்துவ விசாரத்தில் இருந்தனர். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். எட்டரைக்கு சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்து மணி சென்றார். எட்டரைக்கு சாப்பாட்டு அறைக்கு சென்றபோது வெளிச்சமும் ஆள் நடமாட்டமுமாக உயிர்ப்புடன் இருந்தது ஆறுதலாக இருந்தது. சுவையான இரவு உணவு (உப்புமா தான் என்றாலும்) மேலும் நம்பிக்கை அளித்தது. சிறிது நேரம் குருஜியுடன் பேசி விட்டு தங்குமிடம் வந்தோம். இப்பொழுது வழி பரிசயமானதால்  அச்சமளிப்பதாக இல்லை. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து கும்பலை எதிர்கொள்ள தயாரானோம். வந்தவர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் இளைஞர்கள். அவ்வளவு பேர் இருந்தும் மிகவும் சுமுகமாக இருந்தது சூழல். காலை உணவின்போது அனைவரையும் பார்க்க முடிந்தது. சில பெண்களும் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பயிற்சிககென வந்திருந்தனர்.

வெளிச்சத்தில் பார்த்தபோதுதான் அந்த இடத்தின் நில அமைப்பினை பெரிதும் சிதைக்காமல் கட்டிடங்களை எழுப்பியிருப்பது தெரிந்தது.    

வந்திருந்த இளைஞர்கள் அனைவருமே தங்களது அலுவலகப் பணியில் வெற்றிகரமாக செயல்படுவதாகவே தெரிந்தது. தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள வந்திருந்தனர். பயிற்சி அவர்களுக்கு தேவையான உறுதிப்பாட்டினை அளித்துள்ளது என்பது நிறைவுக் கூடுகையில் அவர்கள் மனம் நெகிழ்ந்து பேசியதில் தெரிந்தது. குருஜி செந்தில் பிரபு அவர்களும் கோவையின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆனந்த சைதன்யா  யோகா எனும் அமைப்பினை நிறுவி தியானப் பயிற்சி அளிக்கிறார். அவரது மையம் கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையத்தில் உள்ளது. அங்கும் பயிற்சிகள் நடைபெறுகின்றன. மிகவும் மென்மையாகவும் நகைச்சுவையாகவும் அதே நேரம் கண்டிப்பாகவும் பயிற்சியளித்தார். இரண்டாம் நாள் இரவுணவிற்கு பிறகு திரைப்பட  பாடல் ஜமா கூட்டினார் குருஜி. விஷ்ணுபுரத்தின் ஆஸ்தான பாடகர் என மணி அறிமுகப்படுத்திய யோகேஸ்வரன் மிக இனிமையாகப் பாடினார். அவருக்கு போட்டியாக குருஜியும் களமிறங்கினார். சுவையான உணவு படைத்த அம்மையார் உட்பட பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.             

திரும்பி வர வேண்டிய நேரம் நெருங்கியதும் சாலை குறித்த கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. காலையிலிருந்தே மழை பெய்துக் கொண்டே இருந்தது. மதியம் மழை விட்டாலும் எந்நேரமும் வந்து விடுமோ என்றிருந்தது. அவசரத்தில் உடன் வந்த யோகேஸ்வரன் சாப்பிடாமலே கிளம்பி வந்தது மிகுந்த வருத்தமளித்தது. திரும்பி வரும்போது சாலை அவ்வளவு மோசமானதாக தோன்றவில்லை. பல இடங்களில் வேலை முடிந்து சிமெண்ட் சாலைகள் திறந்து விட்டிருந்தனர். எளிதாகவே முக்கிய சாலையை எட்டினோம். யோகேஸ்வரனின் தந்தையார் தான் தூரன் விழாவில் சிறப்பாக நாதசுரம் இசைத்த கலைஞர் என்பது  பேச்சினூடே தெரிந்தது. அவர் இனிமையாக பாடியதில் வியப்பென்ன! மிகவும் இனிமையான அனுபவமாக அமைந்தது வெள்ளிமலை நித்தியவன பயிற்சி. 

பின் குறிப்பு : நல்ல குளிரும் மழையும் இருந்தபோதும் இறுதி நாளில் மின்சாரம் தடை பட்டதால் பச்சைத் தண்ணீரில் குளித்தபோதும் கோவையிலிருந்து கிளம்புபம் போது வெகு நாட்களாக இருந்த இருமல் தியானம் முடித்து திரும்பும்போது இல்லாமலிருக்கிறது!!!

அரவிந்த் வடசேரி


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று தியானவகுப்பு- கடிதம்  என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

தில்லை செந்தில்பிரபு – கடிதம்

தில்லை செந்தில்பிரபு – கடிதம்
YouTube player

வணக்கம் 

அன்புள்ள ஜெ அவர்களுக்கு  ,

ஆர்வமுள்ளவர்களுக்கு  சிறந்த அறிமுக உரை  . முக்கியமான உடல் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு, பயிற்சியின் வாயிலாக அவை மேன்மை அடைவதும். பயிற்சியின் மூலம் வாழ்வின் அடுத்த பரிணாமம் நோக்கி செல்வது தியான மரபின் ஒரு வழிமுறை என்பது பற்றிய அறிமுக உரை மிகவும் நேர்த்தியாக அமைந்தது. மனதினுடைய தொடர் ஓட்டத்திற்கு உளம் குவிவதன் வாயிலாக ஆற்றலை உற்பத்தி செய்து புத்துணர்வுடன் அன்றைய நாளை நிறைவுடன் முழுமை செய்ய பயிற்சி கருவிகள் வாழ்வில் பெரிதும் உதவுவது பற்றியும் . உடலில் ஏற்படும் பதற்றம் பயம் போன்ற உணர்வுகள் செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பது போன்ற ஆழ்ந்த பார்வை டிஎன்ஏ தொடர்ச்சியின் தொடர்பு பற்றிய தகவல் புதியவர்கள்  மற்றும் தியான மார்கத்தில் பயணிக்கும் அனைவரும் உணர்ந்து பயிற்சியின் வாயிலாக மேம்படுத்திக்கொள்ள உதவும்…

உடலுக்கு தூக்கம் இன்றியமையாதது போல மனதிற்கு தியானம் யோகம் போன்ற வழிமுறையின் முக்கியத்துவம் பற்றிய பார்வை நல்ல திறப்பாக அமையும் … சைதன்ய ஒளிக்கீற்றுஅனைவரின் உள்ளும் நிறைந்து ஒளிர தாங்களின் இந்த காணொளிக்கு குரு மரபிர்க்கும் ஜெ அவர்களுக்கும் , தாங்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .  குரு அவர்களின் தியான முறைகள் தொடர் பயிற்சியின் வாயிலாக  நிறைவுடன் வாழ்வை கணங்களில் கடந்து செல்ல பெரிதும் உதவும்.

ஒவ்வொரு சத் சங்கங்களிலும் புதிய கருவிகளை அருள செய்வார்கள். அவை அனைவருக்கும் தங்களுக்கு உரியதா என அவதானிக்கவும். அதன் அனுபவம் சார்ந்து  கலந்து உரையாடவும் சந்தேகங்களை குருவுடன் பகிர்ந்து கொண்டு மேம்படுத்தி கொள்ளவும் .. மாத மாதம் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது . இவை அனைத்தும் எனக்கு சாத்தியம் பெற  வாய்ப்பு அளித்த தங்களுக்கும் தாங்களுடன் செயலாற்றும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் ….

நன்றி ஜெ 

சிசுபாலன் கிருஷ்ணமூர்த்தி


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

அன்றாட வாழ்வில் தியானம் எனும் தலைப்பில் தியானம் மற்றும் யோகக்கலை பற்றி திரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் காணொளி குறித்து திரு. சிசுபாலன் எழுதிய கடிதம் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் https://unifiedwisdom.guru/199538 கடந்த 4 ஆகஸ்ட் 2024 அன்று வெளியானது. இது அதன் இணையகட்டுரையின் தொகுப்பாகும்.

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

Coimbatore, 11 July 2024

YouTube player

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

“In this video, Thillai Senthil Prabu, founder of Ananda Chaitanya Foundation, with more than two and a half decades of meditation and yoga teaching experience, delves into meditation and its profound benefits. He explains the role of the parasympathetic nervous system, the impact of uncontrolled mental chattering on our physical health, and how meditation enhances focus, productivity, and alleviates pain and psychosomatic diseases. Additionally, he addresses the positive effects of meditation on sleep disorders.”