தில்லை செந்தில் பிரபு நடத்திவரும் தியானம்- உளக்குவிப்பு- செயல்முனைப்புப் பயிற்சிகள் அவற்றின் எளிமை காரணமாகவும், நடைமுறைப் பயன் காரணமாகவும் புகழ்பெற்றவை. தொடர்ச்சியாக இப்பயிற்சியில் பலர் கலந்துகொண்டே இருக்கிறார்கள். இப்பயிற்சிகள் அடிப்படை தியானம், அடிப்படை யோகம், அடிப்படை மூச்சுப்பயிற்சிகள் ஆகியவை இணைந்தவை. இவற்றுடன் மனம் சார்ந்த அன்றாட நிகழ்வுகளை தொகுத்துக்கொள்ளும் பயிற்சியும்கூட.

இந்த வகையான பயிற்சிகள் இன்றைய நடைமுறைவாழ்க்கையில் மிக அவசியமானவை. அவற்றின் பயனை நாம் உண்மையில் இன்னும் உணரத்தொடங்கவில்லை. ஏனென்றால் நாம் எந்தச் சிக்கலில் இருக்கிறோம் என்பதையே நாம் உணர்ந்திருப்பதில்லை.
- நாம் எந்தச் செயலையும் முழுமையாகச் செய்யாமல் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
- ஒரு செயலில் கவனம் குவியாமல் அதற்குள்ளேயே சிறு சிறு கவனச்சிதறல்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
- நமக்கு மிக முக்கியமானவையும் நாம் மிக விரும்புபவையுமான செயல்களைக்கூட நாம் தொடங்காமல் ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றால்,
- காலை எழுந்ததுமே நமக்கு உகந்த, நமக்கு அவசியமான செயல்களத்திற்குள் நுழையாமல் இருக்கிறோம் என்றால்,
- இரவுகளில் நம் மனம் இயல்பாக அடங்கி தானாகவே சரியான நேரத்துக்கு தூக்கத்திற்குள் செல்லவில்லை என்றால்,
நாம் உண்மையில் சிக்கலில் இருக்கிறோம். நம் உள்ளம் குவியவில்லை. நம் அக ஓட்டமும் புறச்செயலும் ஒத்திசையவில்லை. நம் அகம் ஓடை போல தொடர்ச்சியாக முன்னால் ஓடவில்லை, அது சிதறிச் சிதறிப் பரவிக்கொண்டிருக்கிறது.
அது ஒரு வகையான நோய்நிலை. எந்த நோய்க்கும் அதற்கான மருத்துவம் தேவை. இந்த வகையான அகப்பயிற்சிகள் அதற்கான மருத்துவங்கள்தான். இவை உடலை இலகுவாக ஆக்க, செயல்திறமைகொள்ளச் செய்ய உதவுகின்றன. மனதைக் குவிக்கவும் செயலுடன் இணைக்கவும் கற்பிக்கின்றன. முறையான ஆசிரியர் இவற்றைக் கற்பிக்கவேண்டியிருக்கிறது.
தில்லை செந்தில்பிரபு இந்த பயிற்சியில் முப்பதாண்டுக்கால அனுபவம் கொண்டவர். பல்லாயிரம்பேரை பயிற்றுவித்தவர். அவர்களால் ஆசிரியராக வணங்கப்படுபவர். ஓர் யோக- தியான ஆசிரியர் அதற்கு மட்டும் ஆசிரியர் அல்ல, முழு வாழ்க்கைக்கும் ஆசிரியர் அவர்.
புகழ்பெற்ற இப்பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன.
நாள் – 26, 27, 28.
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் வரும் ஜூன் 26, 27 மற்றும் 28 (2026) வெள்ளி சனி ஞாயிற்று கிழமைகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்த்தவுள்ள தியானம், உளக்குவிப்பு, செயல்முனைப்பு- பயிற்சிகள் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தனது இணையதளத்தில் 8 ஜூன் 2026 அன்று தியானம், உளக்குவிப்பு, செயல்முனைப்பு- பயிற்சிகள் என்ற தலைப்பில் வெளியிட்ட இணைய கட்டுரையின் தொகுப்பு.
எழுத்தாளர் திரு. ஜெயமோகன்
