Ananda Chaitanya Foundation’s “Karkai Nandre” Kalvi vizha – Scholarships Awarded to More Than 40 Students | ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் “கற்கை நன்றே” கல்வி விழா – 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் கல்லூரிக் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் “கற்கை நன்றே” கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களின் வழிகாட்டுதலில், கல்வி, திறன் மேம்பாடு, ஆன்மீக வளர்ச்சி, சுகாதாரம், யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனிநபர் மற்றும் சமூகத்தின் முழுமையான நலனை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சேவைத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் முக்கிய திட்டங்கள்

அறக்கட்டளையின் சார்பில் தற்போது பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன:

  1. கற்கை நன்றே – பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டம்.
  2. வையத்தலைமைக் கொள் – மாணவர்களின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகுதிகளை மேம்படுத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்.
  3. வாசிக்கலாம் வாங்க – மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி.
  4. ஆனந்த சைதன்யா யோகா & தியானம் – உடல் மற்றும் மனநல மேம்பாட்டிற்கான யோகா, தியானம் மற்றும் மனக்குவிப்பு பயிற்சி வகுப்புகள்.
  5. மெய்நலம் – மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில் உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய சத்துமிக்க ஆரோக்கிய பானம் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் இரத்ததான முகாம்களை நடத்துதல்.

கற்கை நன்றே” கல்வி விழா

பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் கல்லூரிக் கல்விக்கு உதவும் வகையில், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை ஆண்டுக்கு இருமுறை “கற்கை நன்றே” கல்வி விழாவை நடத்தி வருகிறது. இவ்விழாக்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 16 ஆகஸ்ட்2026 அன்று ஆனந்த சைதன்யா தியான மையத்தில் நடைபெற்ற “கற்கை நன்றே” கல்வி விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வழிகாட்டுதலுடன் கூடிய தியானப் பயிற்சி

இறை வணக்கத்துடன் தொடங்கிய விழாவில், ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் யோகா ஆசிரியரான திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களின் வழிகாட்டுதலில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தியானப் பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் மனஅமைதி, கவனம் மற்றும் முழுமையான ஈடுபாட்டை வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இப்பயிற்சி அமைந்தது.

வெல்லும் சொல் – தமிழ் தரும் திறவுகோல்” நூல் வெளியீடு

விழாவின் சிறப்பு நிகழ்வாக, அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு எழுதிய “வெல்லும் சொல் – தமிழ் தரும் திறவுகோல்” என்ற நூல் வெளியிடப்பட்டது.

தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நூலை மேக் கண்ட்ரோல்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் வெளியிட, சன்டெக் எனர்கிரீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் பெற்றுக்கொண்டார்.

யோகா & தியானவ குப்புகளுக்கான Smart WhatsApp Assistant அறிமுகம்

ஆனந்த சைதன்யா யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சிகள் குறித்த தகவல்களை எளிதாகப் பெறவும், முன்பதிவு செய்யவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட Smart WhatsApp Assistant விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கான WhatsApp எண் 7708432130 ஆகும்.

இந்த சேவையை திரு. ஸ்ரீதர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.

தன்னார்வலர்களின் அனுபவப் பகிர்வு

விழாவில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

திரு. ராஜமுருகன், அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட Spoken English வகுப்புகள், Embedded Systems பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை விளக்கினார்.

திரு. சண்முக சுந்தரம், “கற்கை நன்றே” திட்டத்தின் மாணவர் தேர்வு முறை மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். மாணவர்களும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என ஊக்குவித்தார்.

திரு. ரவிகுமார், கடந்த ஓராண்டாக அறக்கட்டளையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட “கற்கை நன்றே” மாணவர் தேர்வு நடைமுறைகள் மற்றும் யோகா, தியானப் பயிற்சி நிகழ்வுகள் குறித்து விளக்கினார்.

திரு. ஹரிகோவிந்தன், மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், Embedded System Training மற்றும் இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடுகள் மற்றும் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

திரு. விக்னேஷ், திறன் மேம்பாடு, Embedded Systems, AI பயன்பாடுகள் ஆகியவற்றுடன், கற்றலில் ஆழமான புரிதலையும் முழுமையான கவனத்தையும் வளர்க்கும் Deep Understanding & Focus குறித்தும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

திரு. விஷ்வா, ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் சூலூரில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட வாசிக்கலாம் வாங்க போட்டிகளில் மாணவர்கள் ஈடுபாடுடன் கலந்துகொண்டதைபற்றி பற்றி எடுத்துரைத்தார்.

திரு. செல்வகுமார், ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்பட்ட “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்புப் போட்டி குறித்து எடுத்துரைத்தார். மேலும், அறக்கட்டளையின் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட கல்லூரி நூலகத்தின் மூலம் மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், அக்கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு மெய்நலம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் சத்துமிக்க ஆரோக்கிய பானத்தின் பயன்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

மாணவர்களின் மனம் திறந்த பகிர்வுகள்

“கற்கை நன்றே” திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயனடைந்து வரும் மாணவர்கள் மற்றும் இந்தக் கல்வியாண்டில் புதிதாக கல்வி ஊக்கத்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் என 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழாவில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலை, குடும்பச் சூழல், கல்விப் பயணம், அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள், இதுவரை பெற்ற சாதனைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மாணவர்கள் மனம் திறந்து பேசினர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் எதிர்காலக் கனவுகள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்தன.

சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரை

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற திரு. சண்முகசுந்தரம், திரு. திருநாவுக்கரசு மற்றும் திரு. ஸ்ரீதர்பாபு ஆகியோர் மாணவர்களின் கல்விச் சாதனைகள் மற்றும் திறமைகளைப் பாராட்டினர்.

மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து கற்று, தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதுடன், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

40க்கும் மேற்பட்டமாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

விழாவின் முக்கிய நிகழ்வாக, நடப்பு கல்வியாண்டிற்காக தேர்வு செய்யப்பட்ட40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைக்கான காசோலைகளை ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு வழங்கினார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களுக்கு அறிவு வளர்க்கும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த ஊக்கத்தொகை மாணவர்களின் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதற்கான பொருளாதார ஆதரவாக மட்டுமல்லாமல், அவர்கள் தன்னம்பிக்கையுடன் தங்களது இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கான ஊக்கமாகவும் அமைந்தது.

முழுகவனத்துடன் செயல்படுங்கள்” – திரு. தில்லை செந்தில் பிரபு

விழாவின் நிறைவுரையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு, தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றான கவனச்சிதறல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

எந்த ஒரு செயலிலும் முழுமையான கவனம் மற்றும் ஈடுபாடு இல்லாமல் போவதற்கான காரணங்களை விளக்கிய அவர், அதிலிருந்து விடுபட்டு கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவதற்கான வழிமுறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், யோகா மற்றும் தியானப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் உடல் மற்றும் மனநல நன்மைகள் குறித்து விளக்கியதுடன், ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கல்வியுடன் வாழ்க்கைத்திறனையும் வளர்க்கும் பயணம்

கல்வி என்பது பாடப்புத்தக அறிவுடன் மட்டும் முடிவடையாமல், மாணவர்களின் ஆளுமை, திறன், உடல்நலம், மனநலம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கற்கை நன்றே” கல்வி ஊக்கத்தொகை, “வையத்தலைமை கொள்” திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு இயக்கம், “மெய்நலம்” மற்றும் யோகா & தியானப்பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அறக்கட்டளை தொடர்ந்து பங்களித்து வருகிறது.

நிகழ்ச்சியின் நிறைவாக அனைத்து குருமார்களுக்கும் வணக்கம் செலுத்திய திரு. தில்லை செந்தில் பிரபு, அறக்கட்டளையின் சேவைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் நன்கொடையாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும்அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.


“கற்கை நன்றே” கல்வி விழா – தினமலர் நாளிதழில் வெளியான செய்தி தொகுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *