தொடங்காமையில் இருத்தல் – அ

Lethargic Dream, 2002 – Nina Tokhtaman Valetova 

அன்புள்ள ஜெயமோகன்,

2020ல் கொரோனா ஊரடங்கின் போது நான் கல்லூரி (b.sc) மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு இல்லாமலேயே பாஸ் என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நானும் பாஸ் ஆயிட்டேன்னு சந்தோஷப்படேன். ஆன 6 மாசத்துல கடைசி செமஸ்டர் exam மட்டும் எழுதச் சென்னாங்க (onlineல்). அதன் பிறகு மறுபடியும் அரியர் examஐயும் எழுத சொன்னாங்க (onlineல்). எனக்கு அரியர் இருந்து. அதையும் 2021 june மாதம் எழுதினேன். அப்போது காலையில் ஒரு exam மதியம் ஒரு exam இருந்தது. காலையில் எழுதிய examஐ photo எடுத்து onlineல் அப்லோட் செய்யும் போது இன்டர்நெட் ஒர்க் ஆகவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது (airtel sim network). ஒன்றரை மணி நேரம் கழித்து தான் நெட் கிடைத்தது. அதற்குள் அடுத்த (மதிய) exam கான வந்து விட்டது. காலை exam கான portal close ஆகி விட்டது. அதனால் அந்த examக்கு absent விழுந்துவிட்டது. இதனால் இன்னொரு அரியர் விழுந்து விட்டது. அப்போதும் லாக்டவுன் இருந்தது.

என்னுடன் சேர்ந்தவர்கள் எல்லாம் பிஜி படிக்க சென்றுவிட்டார்கள். நான் மட்டும் அரியர். எங்கள் அப்பாவும் லாக்டவுன் சமயத்தில் டீ கடை திறக்க முடியாமல் சிரமப்பட்டார். பிறகு restrictions ஓடு கடை திறந்தார். அப்போது ஒரு நாள் செப்டம்பர் ல் நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்துவிட்டார் கடையில்.ஆஸ்பிடலில் சேர்த்தோம் அன்று நன்றாகத்தான் இருந்தார் திடீர் என்று இரவு பல்ஸ் குறைய ஆரம்பித்தது. அந்த ஆஸ்பிடலில் கோயம்புத்தூர் gh க்கு கொண்டு போக சொன்னாங்க. அங்கு அதற்கு அடுத்த நாள் இறந்து விட்டார். அந்த நிகழ்வில் இருந்து எனக்கு ஒரு வித மன உளைச்சல் ஏற்பட்டது. வெளியே யாருக்கும் தெரியாது ஆனால் எனக்குள் கடும் மன உளைச்சல் இருந்தது. அப்பா எங்க. அப்பா எங்கே போனார்? இந்த திண்ணையில் தானே உக்காந்திருப்பார். இத்தனை மணிக்கு தானே வருவார். இப்போது எங்கே. அவர் குரலை இனி மேல் கேட்க முடியாதா என்று பல கேள்விகள் எனக்குள் இருந்தது.

அப்போது எங்கள் வீட்டில், உறவினர்கள், என்னை ரோட்டில் பார்பவர்கள் எல்லோரும் வேலைக்கு போக சொன்னாங்க. ஆனா நான் முன்பு கல்லூரி படிக்கும் போது இருந்த மனநிலையில் இல்லை. அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும். அதை அவர்களிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இதோ வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று பொய் சொல்வேன். ஆனால் வேலை தேடும் மனநிலையில் நான் இல்லை. ஏதோ மனநிலை போய் விட்டது. வீட்டில் திட்டுவார்கள். வீட்டை விட்டு போ என்பார்கள். இப்போது என்னால் என் சக நண்பர்களுடனும் பேச முடியவில்லை. அவர்கள் வேலையில் இருக்கிறார்கள். பைக் வைத்திருக்கிறார்கள். எனக்கு இரண்டும் இல்லை.

இன்றுவரை நான் வேலைக்கு செல்லவில்லை. ஆனால் முன்பு போல் மன உளைச்சல் இல்லை இப்போது. ஆனால் பயமாக இருக்கிறது. தவறான முடிவெடுத்து விட்டேனோ என்று. இப்போதெல்லாம் என்னை யாரும் மதிப்பதில்லை. அதனாலேயே ரோட்டில் நடக்கும் போது ஏதோ வேலை இருப்பது போல் காட்டிக்கொண்டு வேகமாக நடந்து சென்று விடுகிறேன். எதிரில் வருபவரிடம் கண் கொண்டு பேச முடியவில்லை. வீட்டிற்கு யாராவது வந்தால் நான் ஏன் வேலைக்கு போகவில்லை என்பதற்கு காரணம் சொல்ல யோசிக்கிறேன். சமூகத்தில் யாருமே மதிப்பதில்லை. யாராவது பேசிக்கொண்டால் என்னைப் பத்தி தான் பேசுராங்களோன்னு பயமாக இருக்கிறது. இப்போது இதில் இருந்து எப்படி மீள்வது என்று புரியவில்லை. நான் செய்தது சரியா. எனக்கு என்ன ஆச்சு. கொஞ்ச நாள் மனநோய் இருந்தது இப்போது பயம் இருக்கிறது. இதிலிருந்து மீள்வது எப்படி. நான் ஒரு பேச்சாளர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பேசி பார்க்கும் போதுதான் தெரிந்தது எனக்கு பேசவே தெரியாது என்று. பேசும் போது எண்ணங்கள் நின்று விடுகின்றன.

இப்போது என்ன செய்வது. இதிலிருந்து எப்படி மீள்வது.பயத்திலிருந்து எப்படி மீள்வது. நான் செய்தது தவறா?மன உளைச்சல் இருந்தாலும் வேலைக்கு சென்றிருக்க வேண்டுமா? இப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் கல்லூரி படிக்கும் போது இருந்த மனநிலை இப்போது இல்லை. எனக்கு வழி சொல்லுங்கள் ஜெயமோகன். இது தான் நான் அனுப்பும் முதல் மின்னஞ்சல். அதனால் தவறு இருந்தால் மன்னிக்கவும் ஜெயமோகன். ஒரு நாள் பிரபஞ்சத்திடம் என் குருவை காட்டு என்று வேண்டிக்கொண்டிருந்தேன். மறுநாள் உங்களை யூட்டியூபில் பார்த்தேன். எனக்கு ஏதாவது சொல்லுங்கள் ஜெயமோகன். எப்படி என்ன கேட்பது என்று தெரியவில்லை அதனால் தான் நடந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன். please பதில் சொல்லுங்கள் ஜெயமோகன்.

நன்றி.

இப்படிக்கு,

**********************************

அன்புள்ள அ,

இதற்கிணையான கடிதங்களுக்கு நிறையவே பதில் சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொருநாளும். இவற்றுக்கு நான் தீர்வளிக்க இயலாதென்ற எண்ணத்தாலேயே கொரோனாவுக்குப் பின் பல பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைக்கிறேன். நிபுணர்களைக்கொண்டு. நான் சொற்களையே அளிக்கமுடியும். வாழ்க்கைப்பயிற்சியை அதற்குரியவர்களே அளிக்க இயலும்

*

உங்கள் கடிதத்தில் இருந்து நான் ஊகிக்கும் இரண்டு விஷயங்கள் ஒன்று, மெய்யான சோம்பல். அதாவது செயலின்மையில் இனிமை கண்டுவிட்ட உள்ளம்.

உடல் உள்ளம் இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு இயல்புநிலைகள் உள்ளன. உடல் ஒரு பருப்பொருள். எல்லா பருப்பொருட்களுமே செயலின்மையை இயல்புநிலையாகக் கொண்டவை. ஒரு கல் ஊழிக்காலம் வரை அப்படியே அசையமாலிருக்கும் தன்மை கொண்டது. அதன்மேல் பிறிதொரு விசை செயல்பட்டாலொழிய அது அசைவதில்லை. உள்ளம் அப்படி அல்ல. அதனால் அசைவின்மை கொள்ளவே முடியாது. அது ஒரு ஓயாப்பெரும் பெருக்கு. செயலே அதன் இயல்பு.

உடலை உள்ளம் செலுத்திக்கொண்டே இருக்கிறது. உடலின் எல்லைகளே உள்ளத்தின் எல்லைகளை தீர்மானிக்கின்றன. அந்தப்புரவி எத்தனை வேகமாக ஓடும் என அதை ஓட்டுபவன் அறிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிறான். உடலுக்கும் உள்ளத்துக்குமான அந்த முரணியக்கத்தில் ஓர் இயல்பான சமநிலை உருவாகி வந்தாகவேண்டும். அதுவே சிறந்த நிலை.

அரிதாக உடலின் சோம்பல் உள்ளத்தை வெல்கிறது. அந்நிலையில் எச்செயலையும் நாம் ஒத்திப்போடுகிறோம். செயலின்மையில் விழுந்து கிடக்கிறோம். நோய், போதைப்பழக்கம் போன்றவை உடல் சார்ந்த காரணங்கள். உள்ளம் தன் விசையை இழந்து உடலுக்கு அடிமைப்படுவதே முதன்மையான அகக்காரணம்.

அந்நிலையில் நாம் எதற்கும் சாக்குபோக்குகள் கண்டுபிடிக்கிறோம். காரணங்களை உருவாக்கிக் கொள்கிறோம். பிறரை குறை சொல்ல ஆரம்பிக்கிறோம். சூழலை குறையாகக் காண்கிறோம். செயலால் பயனில்லை என நினைக்கிறோம். நாளை செய்வோம் என எண்ணிக்கொள்கிறோம். அவ்வாறாக நாட்களை கடத்திக்கொண்டே இருக்கிறோம்.

உங்கள் சிக்கல் மிக எளியது. கடந்த தலைமுறையில் எவரிடமும் தனிப்பட்ட வெற்றிகள் செய்யவேண்டுமென சமூகம் எதிர்பார்க்கவில்லை. அவர் வாழ்வதற்கான வழியை கண்டடைந்தால்போதும். பெரும்பாலும் அது அனைவரும் செல்லும் வழி. இன்று ஒவ்வொருவரிடமும் அவர் தனக்கான சாதனை ஒன்றை நிகழ்த்தவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். குடும்பம் சூழல் எல்லாமே அந்த அழுத்தத்தை அளிக்கிறது. ஒவ்வொருவரும் அப்படிக் கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள்.

அந்தக் கனவில் முதல் தோல்வி அமையும்போது அப்படியே சோர்ந்து செயலின்மையில் அமைந்துவிடுகிறார்கள். மேற்கொண்டு செயலாற்றுவதே இல்லை. கொரோனா காலகட்டத்தில் அப்படி ஒரு தோல்வியை கண்டு, அதை ஒட்டி உளம் சோர்ந்து, முழுமையாகவே செயலற்று அமர்ந்திருப்பவர்கள் பலரை நான் அறிவேன். அவர்களில் ஒருவர்தான் நீங்கள்.

உண்மையில் அப்படி ஏராளமானவர்கள் எனக்கு எழுதத் தொடங்கியபோதுதான் நானறிந்த நிபுணர்களைக் கொண்டு யோகம், தியானம் ஆகிய வகுப்புகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தேன். ஏனென்றால் சொற்களால் பயனில்லை. என் சொற்களை உங்கள் சொற்கள் ஈடுகட்டிவிடும். செயல்முறையே தேவை. அதற்கு நிபுணர்களின் பயிற்சி தேவை.

செயலின்மையில் இருப்பவர்களின் மிகப்பெரிய உத்தி ஒன்றுண்டு. மிகமிக அதீதமான செயல்களை கற்பனையில் நிகழ்த்தியபடி, அதற்கான தருணம் வருமென காத்திருப்பதாக பாவனை செய்தபடி, சும்மா இருப்பார்கள். முதலில் நாம் உடைக்கவேண்டியது நம்முடைய அந்தப் பாவனையைத்தான். நாம் நம்மருகே இருக்கும் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிப்பதே முக்கியமானது. அதை சிறப்புறச் செய்து, அதைக் கடந்தே அடுத்த செயலை செய்ய முடியும். காலடியில் இருக்கும் முதல்படியில் மிதிக்காமல் கோபுரத்தை எட்டமுடியுமா என்ன?

உங்கள் நிலையில் செய்யத்தக்கது ஒன்றே. உடனடியாக வெற்றிதரக்கூடிய செயல்களைச் செய்வது. அன்றாட வெற்றி என ஒன்றாவது கண்ணுக்குப் படவேண்டும். சிறியதாக இருந்தாலும் சரி. அது உங்கள்மேல் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். செயல் அளிக்கும் மகிழ்ச்சியை கற்பித்து செயல்நோக்கி ஈர்க்கும். இறுதிவெற்றி எவர் கையிலும் இல்லை. அன்றாடச்செயல், அதன் நிறைவு மட்டுமே நம்மால் செய்யக்கூடுவது. ஆனால் செயலாற்றிக்கொண்டே இருப்பவர் திறன் பெறுவார். திறனுடையோர் வெல்வார். அது இயல்பான நெறி.

ஆனால் அதைச் செய்ய உங்களுக்கு ஒரு புற உதவி இருப்பது சிறந்தது. இல்லையேல் நீங்கள் செயலாற்றுவதைப் பற்றிய சிந்தனைகளையே ஒரு செயலாக ஆக்கி அதற்குள்ளேயே சுழல ஆரம்பிப்பீர்கள்.

அந்த உதவி உங்களுக்கு இரு வகையில் தேவை.

ஒன்று, அமைதியாக அமர்ந்து உங்களை நீங்களே கவனிப்பது. உங்கள் சால்ஜாப்புகள், சமாளிப்புகள் என்னென்ன என நீங்களே அறிவது. உங்களை நீங்களே கறாராக மதிப்பிட்டுக் கொள்வது. உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே அலசி, தீர்வை நீங்களே அறிந்துகொள்வது. செயலுக்காக உங்களை தொகுத்துக் கொள்வது. தியானம் போன்ற வழிமுறைகள் அதற்கு உதவுவன. அதற்கு முறையான வழிகாட்டுதல் தேவை. இல்லையேல் அதையே ஓர் உளநாடகமாக நடத்தியபடி மேலும் சோம்பி இருப்பீர்கள்.

இரண்டு, ஒருவேளை உங்களுக்கு உடல்நிலை சார்ந்த சிக்கல்கள், அல்லது தூக்கம் போன்ற சிக்கல்கள் இருந்தால் அதை உங்களுக்கு ஒருவர் சுட்டிக்காட்டி தேவையென்றால் சிகிச்சைக்கு செல்லவைக்கவேண்டும்.

மூன்று, நீங்கள் உங்கள் மானசீக உரையாடலை நடத்தும் முன்னிலை, ஓர் ஆசிரியர், உங்களுக்குத் தேவை. அவர் உங்களை அறிந்திருக்கவேண்டும். அணுக்கமான ஒருவர் இருக்கிறார் என்னும் எண்ணம் உங்களுக்குத் தேவை.

அந்த உதவியை எழுத்தாளர்கள் அளிக்க இயலாது. எழுத்தாளர்கள் தங்கள் அக அலைவுக்குள் சென்றுகொண்டிருப்பவர்கள். தங்கள் கனவுகளை தொடர்பவர்கள். உங்களுக்குத் தேவை நிதானமும், பயிற்சியும் கொண்ட நிபுணர்கள். அவர்களை தேடிக்கொள்ளுங்கள்.

ஜெ

***


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

இந்த கட்டுரையானது எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு அவரது வாசகர் ஒருவர் எழுதிய கடிதமும் அந்த வாசகருக்கு திரு.ஜெயமோகன் அவர்கள் அளித்த பதிலும் அடங்கிய இணைய கட்டுரை தொடங்காமையில் இருத்தல் என்ற தலைப்பில் அவரது இணையதளைத்தில் ஆகஸ்ட் 17, 2023 அன்று பதிவிடப்பட்டதன் தொகுப்பாகும்.