ஜீலை 9, 2025
தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது.
இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே மிகப்பெரிய சவால். கல்வியிலானாலும் தொழிலில் ஆனாலும். செயற்கையாக உள்ளத்தை தீவிரமாக்கிக்கொண்டால் அதன் விளைவாக உளச்சோர்வு உருவாவது இன்னொரு சிக்கல்.

இன்றைய வாழ்க்கை நம் அட்ரினல் சுரப்பியை சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு விலங்கு அபாயத்தில் இருக்கையில் அதன் உடலில் முழு ஆற்றலும் வெளிப்படவேண்டும். அதன் உடலின் உணவு முழுமையாக எரிக்கப்பட்டு, தசைகள் முற்றாகச் செயலாற்றவேண்டும். அட்ரினல் அப்பணியைச் செய்கிறது. ஆனால் நாம் இன்று உருவாக்கிக்கொண்டிருக்கும் பதற்றம், பரபரப்பு கொண்ட வாழ்க்கையில் நாம் நிரந்தரமாகவே சிங்கத்தால் துரத்தப்படும் மான் போல் இருக்கிறோம். நாம் பொழுதுபோக்கு என நினைக்கும் கேளிக்கைகள், சமூகஊடகங்கள் ஆகியவையும் நம் அட்ரினலைத் தூண்டுவனதான். அதுவே நம்மை கவனமின்மை மற்றும் உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது. செரிமானமின்மை, தூக்கமின்மை முதல் சோரியாஸிஸ் வரையிலான நோய்களுக்கும் காரணமாகிறது.
யோக முறைகள், தியானங்கள் நாமே நம் உடலின் சுரப்பிகளை அமைதிப்படுத்தும் பயிற்சிகள்தான். நம் உள்ளத்தை நாமே மெல்ல அடங்கச் செய்து உடலை ஆறவைக்கிறோம். அவை மிகப்பயனுள்ளவை என்பதனால்தான் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளன. உலகிலேயே மிக அதிகமானபேர் யோக – தியானப்பயிற்சிகளைச் செய்யும் நாடுகள் ஐரோப்பா- அமெரிக்காதான்.
தில்லை செந்தில்பிரபு பயிற்றுவிக்கும் தியானமுறை இன்றைய காலகட்டத்திற்காக வரையறை செய்யப்பட்ட ஒன்று. உலகமெங்கும் செல்வாக்குடன் இருப்பது.
நாள் ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

வரும் ஆகஸ்ட் மாதம் 1, 2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு) 2025 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நிகழ்த்தவுள்ள மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாம் பற்றிய அறிவிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் தியானம் – உளக்குவிப்பு பயிற்சி முதல் நிலை எனும் தலைப்பில் ஜீலை 9, 2025 அன்று வெளியானது. இது அந்த இணைய கட்டுரையின் தொகுப்பாகும்.
திரு.ஜெயமோகன் எழுத்தாளர்