ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்பு விழா

ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்பு விழா

தில்லை செந்தில்பிரபு உயர்தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர். தியானப்பயிற்சி அவர் நடத்திவரும் தனிப்பட்ட செயல்பாடு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக தியானப்பயிற்சியில் அனுபவம் கொண்டவர். முழுமையறிவு அமைப்பின் சார்பில் தொடர் பயிற்சிவகுப்புகள் நடத்திவருகிறார்.

கோவையில் அவர் தனக்கான தியானமையம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதை நான் நாளை (20 டிசம்பர் 2024) அன்று திறந்துவைக்கிறேன்.

இடம் சி. பிளாக், சைட் 2, டி.ஆர்.எஸ்.அவென்யூ, குரும்பப்பாளையம் கோவை.

காலை 8:00 மணிமுதல் 9:15 வரை காலையுணவு

விழா காலை 9:30 முதல் 10:30 

நிகழ்ச்சி நிரல்

  • 9.30 இறை வணக்கம். -கவி நிலவன்
  • 9:35 குருபூஜை – தில்லை
  • 9:40 வரவேற்பு & தியான மைய அறிமுக உரை – தில்லை
  • 9:50: நினைவுப்பரிசு வழங்குதல்
  • 9:52 : குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை – ஜெயமோகன்
  • நன்றி உரை – விஜய் குமார் சம்மங்கரை

திறன் மேம்பாட்டு கூடங்கள் திறப்பு.

  • பிரக்யா – ஜெயமோகன்
  • சங்கல்பா – திருநாவுக்கரசு
  • தேஜஸ் – திருநாவுக்கரசு

இது ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா எனும் தலைப்பில் டிசம்பர் 19, 2024 அன்று பிரசுராமான செய்தி தொகுப்பு

அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள்

அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள்

டிசம்பர் 15, 2024

அன்புள்ள ஜெ,

நலமறிய ஆவல்.

இந்த வாரம் பங்கெடுத்த தியானம் உளக்குவிதல் வகுப்பின் அனுபவங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.

முதலில் மனதிற்கான பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி அன்றாடம் நான் செய்தது இல்லை. புத்தக வாசிப்பொன்றுதான் நான் செய்திருந்த உட்சபட்ச கூர்ந்த தியானம். தற்போது இந்திர நீலம் படித்துக்கொண்டிருக்கிறேன். துவாரகையில் இருக்கும் வரை மனம் அதில் லயிக்கிறது. வெளிவந்த உடனேயே அலுவலக வேலை செய்யும் ஒரு உருவாகவும், அதே நேரம் இடைவிடாது மனத்துள் ஓடிக்கொண்டிருக்கும் உரையாடல்கள், கேள்விகள், பதில்கள் என்று சக்தியை செலவிடும் ஒரு உருவாகவும் இரு கூறாக மனம் பிரிந்து நிற்கிறது.

மிக முக்கிய அரிதலாக தில்லை குருஜி சொல்லிக்கொடுத்தது இந்த மனம் மற்றும் உடல் இரண்டிற்குமான ஒத்திசைவை. மூன்று நாட்களும் முயன்று முயன்று அதை தான் அடைய முற்பட்டோம். ஓரளவு அடையவும் செய்தோம். 

இயற்கை தியானத்திற்காக ரம்மியமான கால நிலையை வழங்கியது, நாள் முழுக்க குளிரும் அவ்வப்போது மென் தூறலும் இருந்தன. 

தேநீருக்கு பதிலாக சூடான எலுமிச்சை சாறு போன்று நிறைய மாற்றங்களை வகுப்பிற்காக ஏற்படுத்தியிருந்தார், அனைத்து வகுப்புகளும் குறித்த நேரத்திற்கு 10 நிமிடம் முன்பே தொடங்கி அனைவரும் நிலையில் அமர்ந்த பின்னரே தொடங்கியது.

முதல் பயிற்சியாக Stillness meditation கற்றுக்கொடுத்தார். முதலில் நிலையில் அமர்ந்து உடலின் தற்போதைய நிலையை கவனிக்க உதவும் பயிற்சி, அதனை தொடர்ந்து yogic exercises என்னும் உடற்பயிற்சிகள். வெள்ளிக்கிழமை மாலை கணம் குறித்த விளக்கமும் அதனை தொடர்ந்து சில உலகுவித்தல் குறித்த கருவிகளையும் பற்றி விளக்கினார். கணம் குறித்த விளக்கம் மிகப்பெரிய திறப்பாக இருந்தது. நேற்றும் நாளையும் என்று ஓடி ஓடி இந்த கணத்தை இழந்தபடியே இருக்கிறேன். 

இரண்டாம் நாள் காலை பிராணயாமா பயிற்சிகளை முடித்து குருவணக்கத்தோடு சைதன்ய தியானம் தொடங்கினோம். உண்மையில் மூன்று படிநிலைகளாக ஆழ்ந்த அனுபவத்தை கொடுத்தது. பயிற்சி முடித்தபின் தெளிந்த ஓடைக்கருகில் அமர்ந்திருந்து அமைதியான நீர் ஒழுக்கை காண்பது போன்று எண்ணங்கள் தெளிவாகின. மாலை மீண்டும் சிறு வகுப்பும் பயிற்சிகளும்.

ஞாயிறு காலை மீண்டும் Stillness meditation, யோக உடற்பயிற்சிகள், நாத முத்ர மற்றும் பஞ்ச பிராண பிராணயாமா, நாடி சோதனா, யோக நித்ரா இறுதியாக சைதன்ய தியானம் செய்து முழு பயிற்சி முடித்தோம்.

வகுப்பில் பங்கு கொண்ட நண்பர்கள் பலவகையான பின்னணியிலிருந்து வந்திருந்தனர். தலைமை மேலாளரிலிருந்து திரைப்பட துறை உதவி இயக்குனர் வரை, இருதய சிகிச்சை நிபுணரிலிருந்து கட்டிட கலைஞர் வரை, மழலைகள் முதல் மூத்தோர் வரை என அத்தனை பேருக்கும் தேவையான ஒரு பயிற்சியாக தியானம் உள்ளது.

தில்லை குருஜி கனிவான கணித ஆசிரியர் போல. அவ்வப்போது கண்டிப்பும் வெளிப்பட்டது. தியானம் காலை மாலை மற்றும் செய்யும் ஒரு பயிற்சி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்ற ஆப்தவாக்கியதோடு விடைபெற்றோம். தியான நிலையத்தை தாங்கள் திறந்து வைக்க வருவதை சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு முறை தியானத்தில் அமரும்போதும் புதியதொரு அனுபவம் கிடைக்குமாகையால் அடுத்த 40 நாட்கள் இரு முறையும் அதற்கடுத்த 6 மாதங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் பயிற்சியை தொடர சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்.

வாழ்வு முழுமைக்கும் உடனிருக்கும் மூன்று தினங்களாக அமைந்த இந்நாட்களை வழங்கிய உங்களுக்கும் குருஜிக்கும், வகுப்புகள் சீராக நடைபெற ஒவ்வொரு அமர்வுக்கு முன் உழைத்த இரு நண்பர்களுக்கும் (பெயர் கேட்க மறந்துவிட்டேன்) மற்றும் பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும். 

அன்புடன்,

மனோஜ், திருவானைக்காவல் 


ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று  அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

தியானவகுப்பு- கடிதம்

தியானவகுப்பு- கடிதம்

December 7, 2024

நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை தியான வகுப்பு நடப்பதான அறிவிப்பு வந்தது.தியானமும் பயில  பல நாட்களாக எண்ணம் இருந்தது. நண்பரின் துணையும் கிடைத்தது. கூகிள் கோவையிலிருந்து நான்கு மணிநேரப் பயணம் என்றதால் முதல் நாளே கிளம்பிப் போகலாமா எனும் எண்ணம் எழுந்தது. நித்யவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அந்தியூர் மணியும் மாலையில் வரலாம் என அனுமதி தந்தார். இருட்டுவதற்குள் சென்று விடலாம் எனும் எண்ணத்தில் மதிய உணவினை முடித்ததும் கிளம்பினோம். 

 அந்தியூருக்கு எந்த திசையிலிருந்து வந்தாலும் சாலை நன்றாகவே இருக்கும் போல. கூகிள் வழிகாட்டியபடி குன்னத்தூர் கோபி வழியாக அந்தியூர் சென்று சேர்ந்தோம். கொல்லேகால் சாலையில் நகர எல்லையைத் தாண்டியதுமே வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. எதற்கும் கொஞ்சம் வெயிட் இருக்கட்டும் என்று வெள்ளிமலை ஆசிரமித்திற்குச்  செல்கிறோம் என பதிலளித்துவிட்டு கடந்து சென்றோம். இனிய மாலையில் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதான எச்சரிக்கைகளை பார்த்தபடி ரசித்து பயணித்தோம். சில கொண்டை ஊசி வளைவுகளுடன் சிறப்பான சாலை. 

தாமரைக்கரையிலிருந்து வெள்ளிமலைக்கான சாலைதான் சிறிது பழுதடைந்துள்ளது. சாலை வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜல்லி பரப்பி இருந்ததாலும் ஆங்காங்கே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த இடங்களில் மண்பாதையில் செல்லவேண்டி இருந்ததும் சிறிது கவலை அளித்தது. வழியில் சாலையோர மரங்களும் இயற்கை காட்சிகளும் கிராமங்களில் அய்யப்பன் ஆலயங்களில் பாடல்களும் இறுக்கத்தினை தளர்த்தின.  சாலலையிலிருந்து நித்தியவனத்திற்கு பிரியும் இடத்தை அடைந்தபோது சுமார் ஆறுமணிக்கே நன்கு இருட்டியிருந்தது. குறுகலான மண்பாதையில் செல்லும்போது கார் தரைதட்டி விடுமோ எனும் அச்சம் இருந்தது. அதற்குள் மணி அவர்கள் நாங்கள் வந்ததை தொலைவிலிருந்து பார்த்து வழி சொன்னார். அவர் சமையலுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வெளியே சென்றிருந்தார். நுழைவாயிலை ஒட்டிய வீட்டின் திண்ணையில் பேரனுடன் அமரந்திருந்த  காவல்கார முதியவர் உற்சாகமாக வரவேற்றார். மேடேறிச் சென்று முதலில் கண்ட கட்டிடத்தின் அருகில் கார் நிறுத்தினோம். சுற்றிலும் இருட்டு. பாதையிலும் கூட வளர்ந்து நிற்கும் புற்கள். காரை விட்டு இறங்க எனக்கு தைரியம் இல்லை. நண்பர் சகஜமாக கீழிறங்கி புதிதாக வாங்கிய கைபேசியில் படங்களை எடுக்கத் துணிந்தார். உள்ளே வந்து அமரும்படி அவரை வேண்டினேன். பூச்சி பொட்டு இருந்திச்சுன்னா?

சிறிது நேரத்தில் குருஜி செந்தில் பிரபு அவர்களும் வயநாட்டிலிருந்து பேரசிரியர் காந்தநாதனும் வெவ்வேறு கார்களில் வந்துசேர்ந்தனர். சிறிது ஆசுவாசமாக இருந்தது. மணியும் வந்து சேர்ந்தார். எங்களுக்கான தங்குமிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். கரடுமுரடான சரிவான பாதையில் இறங்கிச் சென்றோம். தங்குமிடம் ஒரு டார்மிடரி. எனது முதல் டார்மிடரி அனுபவம் இது. மூன்று ஓரங்களிலும் 2+3+3 என எட்டு இரண்டடுக்கு பங்கர் பெட் நடுவே வெற்றிடம்.  இங்கே எல்லாம் ஃபுல்லா பெட் போட்டிருவோம் என மணி சொல்ல எனக்கு இவ்வளவு கூட்டத்தில் எப்படி இருக்குமோ எனும் கவலையாக இருந்தது. மணியும் காந்தநாதனும் தீவிர தத்துவ விசாரத்தில் இருந்தனர். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். எட்டரைக்கு சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்து மணி சென்றார். எட்டரைக்கு சாப்பாட்டு அறைக்கு சென்றபோது வெளிச்சமும் ஆள் நடமாட்டமுமாக உயிர்ப்புடன் இருந்தது ஆறுதலாக இருந்தது. சுவையான இரவு உணவு (உப்புமா தான் என்றாலும்) மேலும் நம்பிக்கை அளித்தது. சிறிது நேரம் குருஜியுடன் பேசி விட்டு தங்குமிடம் வந்தோம். இப்பொழுது வழி பரிசயமானதால்  அச்சமளிப்பதாக இல்லை. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து கும்பலை எதிர்கொள்ள தயாரானோம். வந்தவர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் இளைஞர்கள். அவ்வளவு பேர் இருந்தும் மிகவும் சுமுகமாக இருந்தது சூழல். காலை உணவின்போது அனைவரையும் பார்க்க முடிந்தது. சில பெண்களும் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பயிற்சிககென வந்திருந்தனர்.

வெளிச்சத்தில் பார்த்தபோதுதான் அந்த இடத்தின் நில அமைப்பினை பெரிதும் சிதைக்காமல் கட்டிடங்களை எழுப்பியிருப்பது தெரிந்தது.    

வந்திருந்த இளைஞர்கள் அனைவருமே தங்களது அலுவலகப் பணியில் வெற்றிகரமாக செயல்படுவதாகவே தெரிந்தது. தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள வந்திருந்தனர். பயிற்சி அவர்களுக்கு தேவையான உறுதிப்பாட்டினை அளித்துள்ளது என்பது நிறைவுக் கூடுகையில் அவர்கள் மனம் நெகிழ்ந்து பேசியதில் தெரிந்தது. குருஜி செந்தில் பிரபு அவர்களும் கோவையின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆனந்த சைதன்யா  யோகா எனும் அமைப்பினை நிறுவி தியானப் பயிற்சி அளிக்கிறார். அவரது மையம் கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையத்தில் உள்ளது. அங்கும் பயிற்சிகள் நடைபெறுகின்றன. மிகவும் மென்மையாகவும் நகைச்சுவையாகவும் அதே நேரம் கண்டிப்பாகவும் பயிற்சியளித்தார். இரண்டாம் நாள் இரவுணவிற்கு பிறகு திரைப்பட  பாடல் ஜமா கூட்டினார் குருஜி. விஷ்ணுபுரத்தின் ஆஸ்தான பாடகர் என மணி அறிமுகப்படுத்திய யோகேஸ்வரன் மிக இனிமையாகப் பாடினார். அவருக்கு போட்டியாக குருஜியும் களமிறங்கினார். சுவையான உணவு படைத்த அம்மையார் உட்பட பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.             

திரும்பி வர வேண்டிய நேரம் நெருங்கியதும் சாலை குறித்த கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. காலையிலிருந்தே மழை பெய்துக் கொண்டே இருந்தது. மதியம் மழை விட்டாலும் எந்நேரமும் வந்து விடுமோ என்றிருந்தது. அவசரத்தில் உடன் வந்த யோகேஸ்வரன் சாப்பிடாமலே கிளம்பி வந்தது மிகுந்த வருத்தமளித்தது. திரும்பி வரும்போது சாலை அவ்வளவு மோசமானதாக தோன்றவில்லை. பல இடங்களில் வேலை முடிந்து சிமெண்ட் சாலைகள் திறந்து விட்டிருந்தனர். எளிதாகவே முக்கிய சாலையை எட்டினோம். யோகேஸ்வரனின் தந்தையார் தான் தூரன் விழாவில் சிறப்பாக நாதசுரம் இசைத்த கலைஞர் என்பது  பேச்சினூடே தெரிந்தது. அவர் இனிமையாக பாடியதில் வியப்பென்ன! மிகவும் இனிமையான அனுபவமாக அமைந்தது வெள்ளிமலை நித்தியவன பயிற்சி. 

பின் குறிப்பு : நல்ல குளிரும் மழையும் இருந்தபோதும் இறுதி நாளில் மின்சாரம் தடை பட்டதால் பச்சைத் தண்ணீரில் குளித்தபோதும் கோவையிலிருந்து கிளம்புபம் போது வெகு நாட்களாக இருந்த இருமல் தியானம் முடித்து திரும்பும்போது இல்லாமலிருக்கிறது!!!

அரவிந்த் வடசேரி


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று தியானவகுப்பு- கடிதம்  என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

தில்லை செந்தில்பிரபு – கடிதம்

YouTube player

வணக்கம் 

அன்புள்ள ஜெ அவர்களுக்கு  ,

ஆர்வமுள்ளவர்களுக்கு  சிறந்த அறிமுக உரை  . முக்கியமான உடல் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு, பயிற்சியின் வாயிலாக அவை மேன்மை அடைவதும். பயிற்சியின் மூலம் வாழ்வின் அடுத்த பரிணாமம் நோக்கி செல்வது தியான மரபின் ஒரு வழிமுறை என்பது பற்றிய அறிமுக உரை மிகவும் நேர்த்தியாக அமைந்தது. மனதினுடைய தொடர் ஓட்டத்திற்கு உளம் குவிவதன் வாயிலாக ஆற்றலை உற்பத்தி செய்து புத்துணர்வுடன் அன்றைய நாளை நிறைவுடன் முழுமை செய்ய பயிற்சி கருவிகள் வாழ்வில் பெரிதும் உதவுவது பற்றியும் . உடலில் ஏற்படும் பதற்றம் பயம் போன்ற உணர்வுகள் செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பது போன்ற ஆழ்ந்த பார்வை டிஎன்ஏ தொடர்ச்சியின் தொடர்பு பற்றிய தகவல் புதியவர்கள்  மற்றும் தியான மார்கத்தில் பயணிக்கும் அனைவரும் உணர்ந்து பயிற்சியின் வாயிலாக மேம்படுத்திக்கொள்ள உதவும்…

உடலுக்கு தூக்கம் இன்றியமையாதது போல மனதிற்கு தியானம் யோகம் போன்ற வழிமுறையின் முக்கியத்துவம் பற்றிய பார்வை நல்ல திறப்பாக அமையும் … சைதன்ய ஒளிக்கீற்றுஅனைவரின் உள்ளும் நிறைந்து ஒளிர தாங்களின் இந்த காணொளிக்கு குரு மரபிர்க்கும் ஜெ அவர்களுக்கும் , தாங்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .  குரு அவர்களின் தியான முறைகள் தொடர் பயிற்சியின் வாயிலாக  நிறைவுடன் வாழ்வை கணங்களில் கடந்து செல்ல பெரிதும் உதவும்.

ஒவ்வொரு சத் சங்கங்களிலும் புதிய கருவிகளை அருள செய்வார்கள். அவை அனைவருக்கும் தங்களுக்கு உரியதா என அவதானிக்கவும். அதன் அனுபவம் சார்ந்து  கலந்து உரையாடவும் சந்தேகங்களை குருவுடன் பகிர்ந்து கொண்டு மேம்படுத்தி கொள்ளவும் .. மாத மாதம் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது . இவை அனைத்தும் எனக்கு சாத்தியம் பெற  வாய்ப்பு அளித்த தங்களுக்கும் தாங்களுடன் செயலாற்றும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் ….

நன்றி ஜெ 

சிசுபாலன் கிருஷ்ணமூர்த்தி


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

அன்றாட வாழ்வில் தியானம் எனும் தலைப்பில் தியானம் மற்றும் யோகக்கலை பற்றி திரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் காணொளி குறித்து திரு. சிசுபாலன் எழுதிய கடிதம் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் https://unifiedwisdom.guru/199538 கடந்த 4 ஆகஸ்ட் 2024 அன்று வெளியானது. இது அதன் இணையகட்டுரையின் தொகுப்பாகும்.

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

Coimbatore, 11 July 2024

YouTube player

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

“In this video, Thillai Senthil Prabu, founder of Ananda Chaitanya Foundation, with more than two and a half decades of meditation and yoga teaching experience, delves into meditation and its profound benefits. He explains the role of the parasympathetic nervous system, the impact of uncontrolled mental chattering on our physical health, and how meditation enhances focus, productivity, and alleviates pain and psychosomatic diseases. Additionally, he addresses the positive effects of meditation on sleep disorders.”

விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை

விவேகானந்தரைப் பற்றிய முதல் மனப்பதிவு பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் மிகச்சிறிய வயதிலேயே கண்ட நாள்காட்டிப் படங்கள் வழியாகத்தான் வந்திருக்கும். புகழ்பெற்ற அமெரிக்கப் புகைப்பட நிபுணர் தாமஸ் ஹாரிசன் 1893-ல் எடுத்த படம் அது. பக்கவாட்டில் சற்றே திரும்பி, காவிநிறக் கம்பளி உடையுடன், வங்காளத் தலைப்பாகையுடன் கைகட்டி நிமிர்ந்து நிற்கும் அந்தப் புகைப்படம், ஐந்து தலைமுறை காலமாக அளித்துவரும் தன்னம்பிக்கையை எளிதில் விளக்கிவிட முடியாது. வறுமையும் மிடிமையும் ஓங்கி, பட்டினியால் மூடியிருந்த ஒரு தேசம் நமது இந்தியா. தன்னம்பிக்கை குலைந்து உலகை அஞ்சி தனக்குள் சுருண்டுகொண்ட ஒரு தேசம். அதன் இளைஞர்கள் அந்தக் கண்களைப் பார்த்தபோது தங்களை உணர்ந்தனர். விவேகானந்தரின் அந்தக் கண்களில் தெரிந்தது, உலகை எதிர்நோக்கி தலைநிமிர்ந்து நின்ற இந்திய இளமையின் தன்னம்பிக்கை. அந்தப் படம் ஒரு பெரும் படிமம். ‘வா உலகே!’ என்ற அறைகூவல் அதில் இருந்தது.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி நூற்றுக் கணக்கான நூல்கள் தமிழில் உள்ளன. அ.லெ. நடராஜன் எழுதிய ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நூல் முழுமையான அறிமுகம் எனலாம். பல கோணங்களில் விவேகானந்தர் விவாதிக்கப்பட்டிருக்கிறார். வேதாந்திகள், ஆச்சாரவாதிகள் எழுதிய நூல்கள். இடதுசாரிகளான ஜெயகாந்தன் போன்றவர்களின் சொற்கள். அனைவருக்கும் அவர் உத்வேகமளிக்கும் ஆளுமை. எம்.ஓ. மத்தாய் எழுதிய சுயசரிதையில் அம்பேத்கர் மத்தாயிடம் சொல்கிறார், “நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரில் இருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது” என்று.

விவேகானந்தர் மதச் சீர்திருத்தவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, தத்துவ சிந்தனையாளர். அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு ஞானி. ஞானிகள் நம் கையின் விரல்களைப் போல. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான பணி ஒன்று இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அவர்களுடைய இயல்பு அமைந்திருக்கிறது. சுட்டுவிரல் போல சிலர். கட்டைவிரல் போல சிலர். சிறுவிரல் போல சிலர். ஆனால், அனைவரும் சேர்ந்து அள்ளுவது ஒன்றையே. ஆகவே, ஞானி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று நம் சிறிய அறிவைக் கொண்டு வரையறை செய்துகொண்டால், அதன் இழப்பு நமக்கே. ஞானம் நோக்கிய நம் தேடலின் அந்தரங்கமே அவர்களை அடையாளம் காண முடியும்.

இந்தியாவில் ஞானிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ‘ஊரிடும் சோறு துணிதரும் குப்பை’ என வாழும் பல்லாயிரவர் இங்கே இருந்தார்கள். அவர்களில் ஒருவர் நம் மக்களை, நம் தேசத்தை, நம் பண்பாட்டை, நம் அரசியலை நோக்கித் திரும்ப வேண்டுமென விதி இருந்திருக்கலாம். அவ் வண்ணமே வந்த ததாகதர், விவேகானந்தர். இந்த தேசத்தைத் தளையிட்டிருந்த அடிமைத்தனமும் அதன் விளைவாக நிகழ்ந்த பெரும் பஞ்சங்களும் அவர் அப்படி வருவதற்கு நிமித்தமாயின. இந்த தேசத்தில் அளிக்கப்பட்டிருந்த ஆங்கிலக் கல்வி அதற்குக் கருவியாகியது. அன்று உருவாகிவந்திருந்த ரயிலும் அச்சும் அதற்கு வாகனங்களாயின. வந்துசென்றார் அவர். இந்த மண் துயில்விட்டெழுந்தது.

அதுவே விவேகானந்தரின் பங்களிப்பு. இந்த தேசத்தில் உருவான ஒட்டு மொத்த தேசியத் தன்னுணர்ச்சியின் விதை அவரே. பட்டினியாலும் பேத சிந்தனைகளாலும் செத்து மக்கிக்கொண்டிருந்த இந்தியாவைக் கண்டு அடைந்த அறச் சீற்றத்தின் அனல்தான் விவேகானந்தரிடமிருந்து வெளிப்பட்டது. “எழுக, விழித்தெழுக, குறிக்கோள்வரை அயராது செல்க” என்ற உபநிடத வரியை அவர் இந்தியாவுக்கு அளித்த ‘ஆப்தவாக்கியம்’ எனலாம்.

அவரது எழுத்துகளில் இருந்தே இந்த தேசத்தின் அனைத்து நவீன சிந்தனைகளுக்கும் தொடக்கப்புள்ளிகளைக் கண்டுகொள்ள முடியும். இந்தியாவின் நிலவரைபடம் பற்றிய ஒரு பிரக்ஞை அவரது எழுத்துகளில் ஓடுகிறது. அதுவே இந்தியாவுக்கு அவர் அளித்த முதல் கொடை. பத்ரிநாத்தில் இருந்து கன்னியாகுமரி வரை, ஆதிசங்கரர் சென்ற திசைக்கு நேர்எதிர் திசையில் அவர் பயணம் செய்தார். அவர் வழியாக அந்த வரைபடம் அவர் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பேசப்பட்டது. நவஇந்தியா என்ற கனவு அதனூடாக முளைத்தெழுவதை அவரைச் சந்தித்த ராஜம் அய்யர் போன்றவர்கள் எழுதிய குறிப்புகள் வழியாகக் காணலாம்.

இந்திய ஆன்மிக மரபு அன்று மத வழிபாடுகள், சடங்குகள் மற்றும் ஆசாரங்களுடன் பின்னிப் பிணைந்து கிடந்தது. அந்த சிக்கலைப் பிரித்து நோக்க முடியாமல், ஒட்டுமொத்தமாக அதை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, புதியதாக உருவாக்கிவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் பிரம்ம சமாஜம் போன்ற மத-சமூக சீர்திருத்த இயக்கங்களும், இந்திய ஞானமரபின் ஏதேனும் ஒன்றை மட்டும் மையமாக்கி, பிற அனைத்தையும் அதைச் சுற்றிக் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை கொண்ட ஆரிய சமாஜம் போன்ற இயக்கங்களும் அன்று இருந்தன.

விவேகானந்தரின் பங்களிப்பு என்பது இந்திய மெய்ஞான மரபின் சாராம்சமான விஷயங்கள் அனைத்தையும் அடையாளம் கண்டது. அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொண்டது. அதை கம்பீரமான மொழியில் இந்தியாவை நோக்கிச் சொன்னது. இந்திய மெய்ஞானத்தின் மொழி அவர் வழியாகவே சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலமாக மாறியது என்று சொல்லலாம். மடங்களிலும் குருகுலங்களிலும் இருந்த வேதாந்தம் இந்திய இளைஞர்களின் தத்துவமாக ஆகியது.

இன்றும் இந்தியச் சிந்தனையின் ஒட்டுமொத்தத்தைப் பார்க்கும் ஒரு சிந்தனையாளர், விவேகானந்தரைத் தன் ஆசிரியராக அடையாளம் கண்டு கொள்வார். மிகச் சிறந்த உதாரணம், மார்க்ஸிய தத்துவ சிந்தனையாளரான கே.தாமோதரன். மார்க்ஸிய நோக்கில் இந்திய சிந்தனையை வகுத்துரைக்க முற்பட்ட அவருக்குத் தன் உடனடி முன்னோடியாக விவேகானந்தரே தோன்றினார். இடதுசாரிகள் இன்று விவேகானந்தர் பெயரைச் சொல்ல அவரே காரணம்.

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சியின் முதல் குரல். இடிந்து மக்கிய நமது கூரைமீது ஏறி நின்று, பொன்னிற உதயவானம் நோக்கிப் பொன்னிற இறகுகளை விரித்துச் சிறகடித்துக் குரலெழுப்பிய சேவல். இந்திய வரலாற்றாய்வின் மாதிரி வடிவம்பற்றி, இந்தியாவுக்கே உரிய கல்விமுறைபற்றி, இந்தியாவுக்கான வெகுஜன ஜனநாயக அரசியல்பற்றி முதல் சிந்தனைகளை அவரே முன்வைத்தார். இந்திய இலக்கியத்துக்கான முன்வடிவம்பற்றிப் பேசியிருக்கிறார். இந்தியக் கலைகளுக்கான அடிப்படை வடிவம்பற்றி விவாதித்திருக்கிறார். இந்தியாவுக்குரிய சுயமான கட்டடக் கலை பற்றியும், ஓவியக் கலை பற்றியும்கூட அவரே முதலில் பேசியிருக்கிறார். உதாரணமாக, இந்தியாவின் மாபெரும் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள். இந்திய ஓவியக் கலைக்கான அடிப்படைகளை உருவாக்கிய முதற் தூண்டுதலும் வழிகாட்டலும் அவனீந்திரநாத தாகூர் போன்றோருக்கு விவேகானந்தரில் இருந்தே கிடைத்தது.

இந்தியா என்றுமே ஞானபூமியாகக் கருதப்பட்டு வந்தது. மூத்தோரின் முதியோரின் தேசம், பழைமையின் தேசம் என்றே நம்மைப் பற்றி நாம் எண்ணியிருந்தோம். அந்த மனப்பதிவை உடைத்து பிறந்தெழுந்த இளைஞர் அவர். குழந்தைத்தன்மை நீங்காத அவரது அழகிய முகம், புதிய இந்தியாவின் சின்னமாகியது. இந்நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்தவர்கள், இங்கே உருவான புரட்சியாளர்கள், இங்கே கலையையும் இலக்கியத்தையும் உருவாக்கியவர்கள் பெரும்பாலானோர் இளமையில் தங்களை விவேகானந்தருடன் அடையாளம்கண்டிருப்பார்கள்.

இன்றும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணை கொண்டது.


எழுத்தாளர் திரு. ஜெயமோகன் 

இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 8 ஜீன், 2024 அன்று  விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

அகம் மறைத்தல்

December 13, 2012

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். 1991ஆம் வருடம், நான் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். தமிழக அரசு முதன் முதலாக, இறுதித்  தமிழ்த் தேர்வில் ஒரு கவிதை எழுதுவதைக் கட்டாயமாக்கி இருந்தது. அந்த அறிவிப்பு வந்த அடுத்த நாள், எங்கள் தமிழ் ஆசிரியர் (சு. சார்ஜ்), எங்கள் வகுப்பில் ஒரு கவிதைப் போட்டி வைத்தார். அதில், “அன்பு மக்களின் அம்பு , அது மனிதனை ஆண்டவனாக்கும் பண்பு”, என்ற ரீதியில் எழுதிருந்த என் (முதல்) “கவிதைக்கு” இரண்டாம் பரிசு கொடுத்தார். பரிசு, மூன்றாய் உடைக்கப்பட்ட ஒரு ரவா லட்டு. அடுத்த முறை விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்த ஒரு நாள் இரவில், என் அப்பாவிடமும் அம்மாவிடவும் பரிசைப் பற்றிச் சொன்னேன். அம்மா என்ன கவிதை என்று கேட்க, எனக்கு “அன்பை”ப் பற்றி எழுதியதை சொல்ல வெட்கம். வாரமலரில் படித்த வேறொன்றை சொல்லிவிட்டேன் (இது ஒரு கவிதையா என அப்பா அவமதித்தது போகட்டும்).

இன்றுவரை அன்பைப் பற்றி, அன்பு செலுத்துதல் பற்றிப் பேச வெட்கம். இதை என் நண்பர்களிடமும் நிறைய நான் பார்க்கிறேன். என் பெற்றோர்கள் சொல்லிக் கேட்டதில்லை. என் உறவினர்கள் என்னிடம் சொன்னதில்லை, என் மேல் உயிராய் இருப்பவர்கள் கூட. அன்பைப் பற்றி , அன்பாய் இருத்தல் பற்றிப் பிறர் சொல்லி நான் கேட்ட இடம் மூன்றுதான். 1) ஒருவர் ஒரு உடன் பிறப்புகளைப் பற்றி , “அவனுக்கு அவன் அக்கா மேல ரொம்ப பிரியம்” ன்னு சொல்லுவார் . 2) சினிமா 3) இளம் காதலர்கள். சங்கத்தில் அகத்திணைகள் படைத்த நம் சமூகம் அகத்தை வெளிப்படையாக சொல்வதை ஏன் தவிர்க்க வேண்டும். ஏன் என்னால் என் தங்கையிடம் சொல்ல முடியவில்லை. என்னால் என் நண்பர்களின் மின்னஞ்சலில் மட்டுமே சொல்லமுடிகிறது. மிகுந்த முயற்சிக்குப்பின், அதுவும். ஆனால் நேரில் அல்லது தொலைபேசியில் பேசும்போதோ சொல்ல முடிவதில்லை. என் தோழி(மனைவி)கிட்ட கூட வேறு மனிதர்கள் முன் சொல்ல முடிவதில்லை. என்மகனிடம் நான் சொல்லவதை சக தமிழ் நண்பர்கள் வித்தியாசமாக உணர்கிறார்கள். ஆணால், அது அவனை சந்தோஷப்படுத்துவது தெரிகிறது.

இதற்கு மாறாக, இங்கு மேலைச் சமூகத்தில் இது மிகவும் இயல்பாக இருக்கிறது. யாரும், தனக்குப் பிடித்தவரிடம், தனக்கு அவர் பிடித்திருப்பதைப் பற்றி சொல்லத் தயக்கம் இல்லை. மகள்கள் அப்பாவிடமும், அப்பாக்கள் அம்மாவிடமும், தோழர்கள் தோழிகளிடமும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் இவர்களுக்கு அலுப்பே இல்லை. முதலில் அது செயற்கையாகத் தோன்றினாலும், சில வருடங்களில் தெரிந்து விட்டது, அவர்கள் அதை நிஜமாகத்தான் சொல்லுகிறார்கள் என்று. அந்த அன்பு அல்லது உறவு மாறும் பொழுது அதை சொல்வதில்லை. அதில் எந்த குழப்பமும் தெரிவதில்லை.

நேற்று, என் வயதே ஆன(35) என் மகனின்(3 வயது) ஆசிரியையிடம் கேட்டேன். “can I say, I love you?”. என்னை இறுக்கி அணைத்தபடி, நீ ஆயிரம் முறை சொல்லலாம் என்றாள். ஆனால், என்னால் என் அம்மாவிடம் சொல்ல முடியவில்லை; அத்தையிடம் சொல்ல முடியவில்லை; அப்பாவிடம் முடியவில்லை. நான் என் மறைமுக அக்கறை மூலமும், செயல்கள் மூலமுமே அதை நிரூபிக்கவேண்டி இருக்கிறது. உறவுகள் மூலம் பின்னிப் பிணைந்த, இன்னும் சற்றேனும் (அல்லது நிறைய) பழங்குடி மனநிலையில் உள்ள நம் சமூகம் ஏன் அதை மறைக்கிறது.

இது அன்பைப் பற்றி மட்டுமல்ல. என் மாமா, இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான, பெரிய ஒரு அரசு கல்லூரியின் முதல்வர். ஆனால் அவரிடம், அதில் எனக்குப் பெருமை என்பதை சொல்ல முடியவில்லை. அதை மறைமுகமாக, வேறு ஏதோதோ சொல்லி உணர்த்த வேண்டி இருக்கிறது. அவரும் அதற்கு போலியாக “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை” என்று பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

அதே போலத்தான் தொடுதலும். நாம் நிறைய உரசிக்கொள்(ல்)கிறோம். பேருந்தில், பொதுஇடங்களில், கல்லூரிகளில். ஆனால் தொட்டுக்கொள்ளுதல் குறைவு. கல்லூரிகளில் பசங்கள் தோளைத் தட்டிக்கொள்வதைத் தவிர, பைக்குகளில் போகும்போது தவிர, (மேலை சமூக த்தில் இது இன்னும் குறைவு, அதுவும் ஆண்-ஆண் தொட்டுக் கொள்ளுதல் அறவே இல்லை). ஆனால், பஞ்சாப் போன்ற மாநில மக்களுக்கு இது மிக இயல்பாக இருக்கிறது. கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துதல் இயல்பாக வருகிறது. நான் என் அம்மாவைக் கட்டிப்பிடித்து அன்பாய்ப் பேசினால் அவள் பாதி நோய் சரியாகிவிடும் போல…..

இதற்கு வரலாறு, பண்பாடு, தட்பவெப்பம் சார்ந்த காரணிகள்உண்டா? அல்லது இது அவ்வளவாக முக்கியமானது இல்லையா? நேரம் இருந்தால் மட்டும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

“எவ்வளவு சொன்னாலும் சொல்லாமல் விடப்பட்டது தான் அகம்” என்று உங்கள் தமிழாசிரியர் சொன்னதை நீங்கள் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது .

அன்புடன் கெளதம்.

பின் குறிப்பு: உங்களுக்கு இது முன்னமே தெரிந்து இருக்கும். உங்களிடம் நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு உரையாடலில் இருந்துகொண்ட இருக்கிறார்கள் (என்னைப் போல, என் தோழி போல, என் நண்பர்கள் போல). அதனால், இணையத்தில் எழுதுவதைக் குறைப்பதைப் பற்றி மட்டும் நினைக்கவேண்டாம். அது உங்கள் எழுத்துக்கான நேரத்தையும் சச்தியையும் உறிஞ்சும் என்ற உண்மை தெரிந்தும், இந்தக் கோரிக்கையை உரிமையாக வைப்பதில் என்னக்கு எந்த சங்கோசமும் இல்லை.

***

அன்புள்ள கௌதம்,

நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயத்தை நான் என்னுடைய பதின்பருவத்தில் மிக உக்கிரமாக உணர்ந்திருக்கிறேன். இளமையில் நாம் அறியும் ஓர் வெறுமைக்கான காரணமே இதுதான். நம்மைச்சுற்றி எங்கும் அன்பின் கடல், ஆனால் குடிக்க ஒரு துளிகூட இல்லாமல் வாட்டும் தாகம்.

என்னுடைய அப்பா அளவுக்கு என் மேல் பிரியம் கொண்டிருந்த எவரேனும் இருந்தார்களா என எனக்குத்தெரியவில்லை. ஆனால் என் அப்பாவிடம் நான் ஒட்டுமொத்தமாக இருபது முப்பது சொற்றொடர்களே பேசியிருக்கிறேன். என்னைஅவர் நாலைந்துமுறைக்குமேல் தொட்டதே இல்லை. நான் அவரைப் புரிந்துகொள்ளும்போது அவர் உயிருடனில்லை. இளமையின் அலைக்கழிப்பிலும் கொந்தளிப்பிலும் சிக்கி நான் திசையறியாமல் விழித்த நாட்களில் அந்த அன்பை நான் உணர்ந்திருந்தால் என்னுடைய தவிப்பு பெருமளவு குறைந்திருக்கும்.

கடலலை மேல் தாகத்தால் வெந்து மரணம் வரை சென்று மீண்டபின் தெரிந்தது நான் அலைக்கழிந்த கடல் குடிநீராலானது என்று. அவரது துணையும் பலமும் எனக்குத் தேவையானபோது கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அவரே. அவர் எப்போதும் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்து வாழ்ந்தவர்

எந்த உணர்ச்சியையும் என்று சொன்னேனே அது தவறு. கோபத்தை வெளிக்காட்டுவார். அப்பாவிடம் வெளிப்பட்ட ஒரே உணர்ச்சி அதுதான். சொல்லப்போனால் அவர் கோபம் கொண்டால் மட்டும்தான் பேசுவார். அவர் வீட்டில் இருப்பதை அவரது கோபம் வழியாக மட்டுமே உணரமுடியும். அவர் ஒரு ரகசியவெடிகுண்டுபோல, கோபத்தால் மட்டுமே பற்றவைக்கப்படுவார். மற்றநேரத்தில் குளிர்ந்த கரிய உலோகம்.

பின்னர் எழுத வந்தபோது நான் இந்த ஒரு பிரச்சினையைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன். என்னுடைய மிகப்பெரிய ‘தத்துவப்பிரச்சினைகளில்’ ஒன்றாக என் அப்பா இருந்தார் என்றால் மிகையல்ல. அப்பா எனக்கு என் மரபை, என் சமூக அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்தார். அவர் வழியாகவே நான் என் வரலாற்றுடன் உறவுகொண்டேன். அவரைப்போலவே அதுவும் என்னுடன் பேசாததாக, அல்லது தன் கோபம் மூலம் மட்டுமே என்னுடன் பேசக்கூடியதாக இருந்தது.

அதன்பின் நான் சுந்தர ராமசாமியைக் கண்டுகொண்டேன். சுந்தர ராமசாமியும் அவரது தந்தையின் வடிவில் மரபை அறிந்தவர். தந்தைமீதான எல்லா உணர்ச்சிகளையும் மரபின் மேல் திருப்பிக்கொண்டவர். எண்பதுகளிலிருந்த ஜெயமோகன் அப்படியே ஜே.ஜே.சிலகுறிப்புகளின் சுந்தர ராமசாமி [என்ற பாலு] தான்

நான் ராமசாமியிடம் நேரடியாக இதைப்பற்றி உரையாடியிருக்கிறேன். மானசீகமாக இன்னும் பலமடங்கு தீவிரமாகப் பேசியிருக்கிறேன். ராமசாமிக்கு சுந்தரம் அய்யர் பேசமறுக்கும் கோயில் சிலை, திருவிழா நெரிசலில் விட்டுச்சென்ற கை. அந்தக் கோபம் பரிதவிப்பு ஏக்கம் எல்லாமே இருந்தது. ஆனால் ஆச்சரியமாக ராமசாமியே ஒரு சுந்தரம் அய்யர் [எஸ்.ஆர்.எஸ்] தான். ராமசாமி ஒருபோதும் பிரியத்தை வெளிக்காட்டக்கூடியவரல்ல. பிரியத்தின்மீது சுயக்கட்டுப்பாட்டின், சுய கண்காணிப்பின் கடிவாளத்தை எப்போதும் போட்டிருந்தவர் அவர்.

அவரது சொற்களிலேயே சொல்லப்போனால் ‘ யானைத்தலையளவுக்கு புனுகை எவரேனும் உருட்டிக் காண்பித்தால் அது புனுகுதானா என்று நான் சந்தேகப்படுவேன்’ . மனிதர்களின் அன்பு என்பது புனுகு போல மிகமிக அரிதாகவே உருவாகக்கூடியது என்று அவர் நம்பினார். அதை ஒருபோதும் அதிகமாக வெளிக்காட்டிவிடக்கூடாது என்றும் அப்படி காட்டினால் அதன் மதிப்பு இல்லாமலாகிவிடும் என்றும் நினைத்தார். அவரது அன்பை நான் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை என்றால் மிகையல்ல. நான் அவரிடம் உணர்ந்தது அவர் மேல் நான் கொண்டிருந்த அன்பை மட்டுமே.

நெடுங்காலம் கழித்து நான் சுந்தர ராமசாமியின் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நாவலை படிக்கையில் ஆச்சரியமாக ஒன்றைக் கண்டுகொண்டேன். சுந்தர ராமசாமி அதில் அவரது தந்தையைத் தனக்குச் சாதகமானவராக மாற்றிக்கொண்டிருந்தார். தன்னைப்போன்ற ஒருவராக அவரை சுந்தர ராமசாமி கட்டமைப்பதை அந்நாவலில் காணலாம். தன் தந்தை பற்றி சுந்தர ராமசாமி நிறையவே சொல்லியிருக்கிறார். அறிவார்ந்த தேடல்களோ ரசனைகளோ இல்லாத வணிகர் அவர். சுய உழைப்பால் தன்னை உருவாக்கிக்கொண்டவர். அந்த பெருமிதம் கொண்டவர். அதேசமயம் புற உலகு பற்றிய நீங்காத பதற்றம் கொண்டவர். ஆகவே தன் சொந்த குட்டி சாம்ராஜ்யத்தில் சர்வாதிகாரி.

அந்த எஸ்.ஆர்.எஸ்சை ஷெல்லி வாசிக்கக்கூடிய சுதந்திரப்போராட்ட ஈடுபாடுள்ள ஒருவராக சித்தரித்துக்கொள்கிறார் ராமசாமி. அப்பா மேல் அவருக்கிருந்த கசப்புகளையும் ஆங்காரத்தையும் அப்படித்தான் அவரால் செரிக்க முடிந்தது. அப்பாவின் விராடரூபமாக அவர் கண்ட இந்தியமரபையும் கடைசிக்காலத்தில் அப்படி சுருக்கி திரித்துக்கொள்ள கொஞ்சம் முயன்றார் என்று படுகிறது.

ஆற்றூர் ரவிவர்மாவுடனான என் உறவும் அந்த இடைவெளியுடன் மட்டுமே இருக்கிறது. அவரது பெரும் பிரியத்தை பத்து கண்ணாடிகளில் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து என்னிடம் வந்த பிம்பமாகவே நான் உணர்கிறேன். எனக்கு உடல்நலமில்லாதிருந்த காலகட்டங்களில் அவரது ஆழ்ந்த அன்பை உணரும் வரம் எனக்குக் கிடைத்தது. இன்று முதுமையில் கனிந்திருக்கும்போது இன்னும் அவரிடம் என்னால் நெருங்கமுடிகிறது.

பின்னர் நித்ய சைதன்ய யதியைக் கண்டுகொண்டேன். நித்யா இருமுனை கொண்டவர். அவர் பிரியம், கருணை போன்றவற்றுக்கு அப்பால் இருப்பதாகத் தோன்றியபடியே இருக்கும். ஆனால் அவர் நமக்கு மிகமிக அருகே இருப்பார். என்மீது தடையின்றிக் கொட்டிய பிரியம் என்றால் அது நித்யாவுடையதுதான். ‘உனக்காகக் காத்திருந்தேன்’ என்று என்னிடம் சொல்ல, ‘அவனுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று அத்தனைபேரிடமும் காட்ட, ‘நீ எனக்குப் பிரியமானவன்’ என்று எனக்கு எழுத, உணர்ச்சிகரத்துடன் என்னை மார்போடு தழுவிக்கொள்ள, என் கைகளை இறுகப்பற்றிக்கொள்ள, தன் கால்களை என்னை நோக்கி நீட்டி எனக்குப் பணிவிடைசெய் என ஆணையிட அவருக்கு எந்தத் தடையும் இல்லை.

நித்யா ஒரேசமயம் வைரம்போல இறுகிய வெண்பனிபோல இளகிய மனிதர். ஒருவரைப் பிரியும்போது கண்ணீர்மல்கியபடி அவர் கைகளைப்பற்றிக்கொள்வார். ஒவ்வொரு முறை நான் கிளம்பும்போது ‘எப்போது மீண்டும் வருவாய்?’ என்று அவர் கேட்பார். முதல்பார்வையிலேயே உரக்கச்சிரித்து ‘வா வா’ என்று மகிழ்வார். அன்பை முழுக்கமுழுக்க வெளிப்படுத்தக்கூடியவராகவே இருந்தார். .எனக்கு அவர் கற்பித்த அனைத்தும் அன்பினூடாகவே.

‘நம்மவர் பாவத்துக்குக் கூச்சப்படுவதில்லை, அன்புக்குக் கூச்சப்படுகிறார்கள்’ என்று நித்யா ஒருமுறை சொன்னார். ஒருமுறை ‘நான் உன்னைச் சந்திக்க ஏங்குகிறேன். உன்னைப்பற்றிய நினைப்பால் முழுக்கமுழுக்க தித்திக்கிறேன்…’ என அவரது பிரியத்துக்குரிய இளம் மாணவர் பீட்டர் ஓபன்ஹைமருக்கு அவர் கடிதம் சொல்லி எழுதவைக்கும்போது நான் அருகே இருந்தேன்..சட்டென்று என் கண்கள் ஈரமாகிவிட்டன. எத்தனை அபூர்வமாகிவிட்டன அன்பின் சொற்கள் என எண்ணிக்கொண்டேன் பின்பு.

அந்த நாளில், அந்தக்கணத்தில் நான் புரிந்துகொண்டேன். என் அப்பாவின் ,அவரைப்போன்றவர்களின் சிக்கல் என்ன என்று. நித்யா அந்தக் கடிதத்தை ஓர் இளம் ஜெர்மானிய மொழியியலாளருக்கு எழுதிக்கொண்டிருந்தார். அந்தக்கணத்தில் அவர் அவரது கல்வியை, அவரது கவித்துவத்தை, அவரது புகழை, அவரது குருபீடத்தை முழுக்க இழந்து எளிமையான குழந்தையாக அவன் முன் நின்றிருந்தார்.

அப்படி இறங்கி வருபவர்களுக்குரியது அன்பு. அன்பு நம் ஆன்மாவை உடைகளைக் கழற்றும்படி கட்டாயப்படுத்துகிறது. அகங்காரத்தை மட்டுமல்ல அறிவையும் கழற்றாமல் அன்பு செலுத்த முடிவதில்லை. அதற்கு முடியாத நிலையிலேயே அன்பை ஒளித்துவைக்கிறார்கள். அன்பை ஒளித்துவைப்பவர்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அந்த அன்பைத் தடையில்லாமல் கொட்டுவார்கள். ஏனென்றால் அவர் இறங்கிவந்திருப்பதை அவை உணர்வதோ மதிப்ப்பிடுவதோ இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள்.

அந்த மனநிலையின் வேர் கிடப்பது நம் பண்பாட்டின் மூதாதை வழிபாட்டில். நாம் இறந்தவர்களை தெய்வமாக்குகிறோம். அந்த மனநிலையின் நீட்சியாக மூத்தவர்களை சற்றே குறைந்த தெய்வங்களாக நிறுத்துகிறோம். நம் பல்லாயிரமாண்டுக்காலப் பண்பாடு மூத்தவர்களைத் தங்கள் இளையவர்களின் உலகில் இருந்து பிரிக்கிறது. மரியாதையான ஒரு தொலைவில் அவர்களை நிறுத்துகிறது. நாம் நம் மூத்தவர்களுக்கு மதிப்பை மட்டுமே வழங்குகிறோம். அன்பைக்கூட மரியாதையாக நாணயமாற்றம் செய்துதான் கொடுக்கிறோம்.

நம் மூத்தவர்கள் அந்த மரியாதைக்குப் பழகிவிட்டிருக்கிறார்கள். அதையே தங்களுக்குச் சமூகம் அளிக்கும் அங்கீகாரமாக, இடமாக நினைக்கிறார்கள். அந்த மரியாதை சற்று குறைவதைக்கூட அவர்கள் தாங்கிக்கொள்வதில்லை. அவர்கள் உக்கிரமாகக் கோபம் கொள்ளுமிடம் எல்லாமே மரியாதை குறைகிறதோ என தோன்றுமிடங்கள்தான். அவர்கள் முன்கோபத்தையும் விரைப்பையும் கைக்கொள்வதே மரியாதையை இழக்காமலிருக்கத்தான். அவர்கள் மண்ணில் மூதாதைதெய்வங்களின் வடிவில் வாழ நினைக்கிறார்கள், மனிதர்களாக அல்ல. அக்குளில் அந்தக் கண்ணாடிப்பாத்திரத்துடன் இருக்கையில் எப்படி இயல்பாக அசையமுடியும்?

மேலைநாடுகளில் மூத்தார்வழிபாடு இல்லை. ஆகவேதான் அன்பை வெளிப்படுத்துவதற்கான செயற்கையான தயக்கங்களும் இல்லை என நான் ஊகிக்கிறேன்

அதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. நம் சூழலில் தூய அன்பை மதிக்கும் மனநிலை நம்மிடமில்லை. நம் தந்தையரிடமிருந்து மிகமிக மாறுபட்டவர்கள் நம் அன்னையர். அவர்களுக்கு அன்பை அள்ளிக்கொட்ட எந்தத் தயக்கமும் இல்லை. ஒவ்வொரு செயலிலும் அன்பை அவர்கள் நமக்கு தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் குடும்பங்களில் அவர்களின் அன்பு ஒவ்வொருநாளும் அவமதிக்கப்படுகிறது. அவர்களின் அன்பு என்பது அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாமென்பதற்கான உரிமைப்பட்டயமாக எண்ணப்படுகிறது.

நம்முடைய கசப்புகளை கொதிப்புகளை எல்லாம் நாம் அம்மாமேல் தான் கொட்டுகிறோம். பல குடும்பங்களில் குழந்தைகள் அம்மாக்களை நடத்தும் விதம் கண்டு கொதிப்படைந்திருக்கிறேன். ரயிலில் அம்மாவிடம் ‘கொஞ்சம் வாய மூடிட்டிருக்கியா? நான்சென்ஸ்’ என்று சீறிய ஒரு இளம்பெண்ணை சென்றவாரம் பார்த்தேன். அம்மா ‘சொன்னாக்கேளுடீ’ என்று மீண்டும் எதையோ சொல்ல ஆரம்பித்தாள். கண்டிப்பாக அது தனக்காக இருக்காது, அந்தப்பெண்ணுக்கு நல்லது என அந்த அம்மா நினைக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.

தன் அன்பைத் தெரிவிக்கக்கூடிய ஒருவரை தன்னுடைய பலவீனத்தை தன்முன் திறந்துவைக்கக்கூடியவராக நினைத்துக்கொள்ளும் அற்பத்தனம் நிறைந்த சமூகம் நாம். குறிப்பாக நம் படித்த இளைய தலைமுறை இந்த அற்பத்தனத்தில் ஊறி ஊறி வாழ்பவர்கள். குடும்பத்தின் அன்பையும் தியாகத்தையும் கூச்சமில்லாமல் பெற்றுக்கொண்டு அதெல்லாம் தன் சிறப்புத்தகுதிக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகள் என நினைத்துக்கொள்ளும் அசடுகள் அவர்கள். அவர்கள் முன் அன்பின் வெளிப்பாடு அசட்டுத்தனமாக நிற்க நேரிடலாம்.

ஆனால் அதற்காக அன்பைத் தெரிவிக்காமலிருக்கவேண்டும் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அன்பு என்பது நாம் பிறருக்குக் கொடுப்பது அல்ல. நமக்கு நிகழ்வது. அது நம்முடைய சொந்த ஆன்மீக மலர்ச்சிக்கான வழி.

சுந்தர ராமசாமியின் புனுகு உதாரணத்தின் அடிப்படைப்பிசகு என்ன? அன்பு என்பது கொஞ்சமாக மட்டுமே உருவாக முடியும் என்ற நம்பிக்கைதான். அன்பு அப்படித் தன்னிச்சையாக கொஞ்சமாக நம்முள் ஊறக்கூடிய ஒன்று அல்ல. அன்பு என்பது ஒரு நிகழ்வு. நாம் நிகழ்த்திக்கொண்டால்தான் அது நிகழும். நாம் நிறைக்க நிறைக்க அது நிறையும். அன்பை மிகையாகத் தெரிவிப்பது என்பது சாத்தியமே அல்ல. ஒருபோதும் ஒரு செய்கையாலும் உண்மையான அன்பை முழுமையாகத் தெரிவித்துவிடமுடியாது. அன்பை எப்படி மிகையாகத் தெரிவிக்க முயன்றாலும் குறைவாகவே தெரிவித்திருப்போம்.மண்ணில் எந்தச்செயலும் அன்பைத்தெரிவிக்கப் போதுமானவை அல்ல.

நான் அதை என் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறேன். என் அப்பாவுக்கு நேர்மாறாக. நான் சொல்வது நான் அப்படி செய்து கற்று உணர்ந்ததை மட்டுமே நான் என் மனைவியிடம் குழந்தைகளிடம் நண்பர்களிடம் என் அன்பை முடிந்தவரை தெரிவித்துக்கொண்டே இருப்பவன். என் குழந்தைகளை நண்பர்களைக் கட்டித்தழுவ முடியும்போதெல்லாம் அதைச் செய்வேன். ஒருநாளில் நூற்றுக்கணக்கான முறை நீ என் செல்லம் என்று என் பிள்ளைகளிடம் சொல்வேன். என் நாய்களிடம் சொல்வேன். [முந்தைய நாள் அதைச் சொன்ன அதே நேரத்துக்கு சரியாக டாபர்மான் நாய் வந்து நின்று எட்டு தெரு அதிர குரைத்து நம்மைக் கூப்பிடுவதைப்பார்க்கவேண்டும்!]

ஆம், அப்படி அன்பை சொல்லிக்கொண்டே இருப்பதனால் நான் இழப்பதென்பது என் அப்பாவுக்கு அவரது சூழலில் கிடைத்துவந்த மரியாதையை. என் வீட்டில் நான் வந்தால் எவரும் அமைதியாக எழுந்து நிற்பதில்லை. நான் ஏவினால் என் மனைவியோ குழந்தையோ ஓடிப்போய் அதைச் செய்வதில்லை. எனக்கு எவரும் பணிவிடைகள் செய்வதில்லை. உரையாடல்களில் எப்போதும் சமமான இடமே எனக்குக் கிடைக்கும். என்மீது எவருக்கும் பயம் இல்லை. அந்த பயத்தை, மரியாதையை எதிர்பார்த்தால் அங்கே அன்பு இருக்க முடியாது.

ஆனால் அவர்களுக்கு நான் நெருக்கமானவனாக இருக்கிறேன். அவர்களின் அப்பாவாக மட்டுமல்லாமல் ஆசிரியனாகவும் இருக்கிறேன். அந்த இடம் முக்கியமானது.

ஜெ


 எழுத்தாளர் திரு. ஜெயமோகன் 

இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 13 டிசம்பர், 2012 அன்று  அகம் மறைத்தல் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.


பயிற்சிகளின் வழியே… – சிவா கிஷோர்

அன்புமிகு ஜெ,

எனக்கு காசநோய் ஆராய்ச்சி துறையில் (NIRT) வேலை கிடைத்துள்ளது. சென்ற பிப்ரவரியில் வேலையை விடும் போது பெரும் திருப்தி அடைந்திருந்தேன். ‘Matrix’ எனும் பிடியிலிருந்து வெளியே வந்துவிட்டோம். முதல் காரணம் நேரமின்மை. சராசரி பத்து மணிநேரம் வேலை பார்த்தால் மட்டுமே அவர்களின் ‘Target’ ஐ முடிக்க முடியும். போக்குவரத்து நெருக்கடி. இரவு நேர வேலை (விளைவாக உடல் சிக்கல்கள், தூக்கமின்மை). வீட்டிற்கு வந்து வாசிக்க எழுத நேரமிருக்காது. இரண்டாவதாகப் படைப்பூக்கம். ஒரு மாதத்திற்குள்ளாகவே வேலை சலித்துவிட்டது. இவ்வளவு தானா. பொறுத்துச் சென்றாலும் பிப்ரவரியில் பா.ராகவன் அவர்களின் எழுத்துப் பயிற்சி வகுப்பில் தூங்கித் தூங்கி விழுந்ததால் எனக்குள் எழுந்த “யாருக்காக வாழ்கிறோம்?” என்ற கேள்வி வேலையை உதறிவிட்டது.

அப்பொழுது எடுத்த முடிவு, நான் படித்த துறை (Biomedical Engineering) சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடலாமென்று. அதற்காக பெங்களூரில் இருமாத பயிற்சி வகுப்புக்குச் சென்றேன். ஏப்ரல் மாதம் வெள்ளியங்கிரி போகும் திட்டம் ஏனோ அது கைவிட்டுப் போக நண்பன் தர்ஷனுடன் வெள்ளிமலை வர நேர்ந்தது. அந்த மூன்று நாட்கள் – மேடையுரை முகாம். என் நல்லூழ். வாழ்க்கையை மாறுதலடையச் செய்த மிக முக்கிய நாட்கள் அவை. அதுவரை உங்களை கேள்விப்பட்டிருந்தேன். நாரோயில் காரர் என்பதால் சிறு நெருக்கம். ஆனால் முகாம் முடித்து வந்ததிலிருந்து உங்கள் குரல் மட்டுமே மனதில் கேட்டுக் கொண்டிருந்தது. நடைப்பயிற்சியில் எழும் கற்பனையில் நான் உங்கள் குரலில் மேடையில் பேசிக் கொண்டிருந்தேன். என் சிந்தனையில் உங்களுடைய தாக்கம் அலாதி. பல காணொளிகள் இலக்கிய வாசிப்பு தொடர்பான புத்தகங்கள் தினம் தளத்தில் வரும் கட்டுரைகள், நான் பார்க்காத இடங்களை காட்டின.

பெங்களூர் பயிற்சி வகுப்பு எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. எட்டுமணி நேர வேலைக்கான உருப்படிகள் தான் அங்கும் தயாராகிக் கொண்டிருந்தன. வீட்டிற்கு வந்து இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். கேட்டால் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பொய் சொன்னேன். அந்நேரத்தில் ‘தன்மீட்சி’ படிக்க நேர்ந்தது. வேலையை விட்டிருக்கக் கூடாதோ என்றொரு எண்ணம். “கனவிற்காக உலகியலைத் துறந்தால், உலகியலுக்காகக் கனவினை துறக்க வேண்டி வரும்” எனும் வரி பயத்தை உண்டாக்கியது. எழுதிப் பிழைக்க முடியாது. எளிய உலகியல் வாழ்க்கையின் அவசியம் புரிந்தது. மனதில் பெரும் குழப்பம். என்ன செய்வது. அந்நேரத்தில் காப்பீடு வேலைக்கான பரீட்சை அறிவிப்பு வந்தது. ஓரளவிற்கு என் துறை சார்ந்தும் அதிக சம்பளமும் இருந்ததால் தீவிரமாக அதில் ஈடுபட்டேன். செப்டம்பர் மாதம் தேர்வு எழுதினேன். ஆனால் பல குளறுபடிகள் வடக்கு மாநிலங்களில் நிகழ்ந்தமையால் ரத்தாகி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

வீட்டில் வேலையின்மையின் அழுத்தம் அதிகரித்தது. எதாவது சின்ன வேலைக்குப் போய்க் கொண்டே படி என்றார்கள். மறுத்தேன். ஜோதிடம் பார்த்து வந்து ஒனக்கு இருவத்தி அஞ்சு வயசு வர கவர்மன்ட் பரீச்ச எழுதுனா கெடைக்காது என்றார்கள். கத புக்கு படிக்கனால தான் வேலைக்கு போவாம கெடக்கானோ என்றார்கள். மாடித்தோட்ட வேலைகள் செய்யும் போது, செடி வைக்கதுக்காண்டி தான் வேலைக்கு போவாம கெடக்கானோ என்பார்கள். பரீட்சை பற்றிய அறிவிப்புகளும் வந்தபாடில்லை. பல முகாம்கள் இதன் மூலம் போக முடியாமல் ஆயிற்று. அக்டோபர் மாதம் தியான முகாம் அறிவிப்பு வந்ததும் வீட்டில் அடம் பிடித்தேன். நம்ம இருக்க நெலமைல இதெல்லாம் முடியுமா என்றார்கள். அதற்கு முந்தைய வாரம் தான் கோவில் கொடைக்கு லட்சத்தில் செலவு செய்தார்கள். நான், கோயிலு கெட்டட்டா அப்பயாவது தருவியளா என்றேன்.

சிறுவயது முதலே பகல் கனவிற்கு நான் அடிமை. விதவிதமாக கற்பனை செய்வேன். கவனம் சற்றும் இறாது. ஒருமுறை வங்கி செல்லானில் இடப்பக்கம் என் பெயரையும் வலப்பக்கம் அப்பாவின் பெயரையும், இருபத்தோராயிரம் பதிலாக இருபதாயிரம் எனவும், ஒருபக்கம் கணக்கு எண் எழுதாமலும் சமர்ப்பிக்க எத்தனித்தேன். பின் கூர்ந்து கவனிக்கையில் மிகவும் பயந்தேன். அடுத்த வாரம் உளக்குவிப்பு முகாம் பதிவு செய்திருந்தது ஆறுதல் அளித்தது.

தில்லை அவர்கள் கற்றுத் தந்த பயிற்சிகள் தத்துவங்கள் கருவிகளை மெல்ல நடைமுறைப் படுத்தினேன். சாப்பிடும் பொது மொபைல் நோண்டுவதை, நடைப்பயிற்சியில் பாட்டுக் கேட்பதை, முடிந்த அளவு கவனச்சிதறல்களை தவிர்த்தேன். யோகா நித்ரா மூலம் உடல் சோர்வு அற்றுப் போனது. உடலை உலகை கவனிக்க ஆரம்பித்தேன். எல்லாம் லேசானதை உணரமுடிகிறது. அச்சமயத்தில் NIRT பரீட்சைக்கான அறிவிப்பும், அடுத்த சில தினங்களில் பாடத் திட்டமும் பரீட்சை நடைபெறும் தினமும் அறிவித்திருந்தார்கள். நான் ஆசைப்பட்ட என் துறை சார்ந்த ஆராய்ச்சி ரீதியான வேலை. ஆனால் இரு வாரங்கள் தான் கெடு. எப்படி திட்டம் வகுப்பது என்கிற குழப்பம். தூங்கும் நேரத்தைக் குறைத்தேன். ஒரே நம்பிக்கை தியானப் பயிற்சிகள். இலக்கியத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டேன். இனி வேலை கிடைத்த பிறகு தான் எல்லாம் என்றொரு அந்தரங்கச் சூளுரை.

இருவேளை தியானப் பயிற்சிகள் மற்றும் ChatGPTஐ சரியாகப் பயன்படுத்தியதன் மூலம் நன்கு படிக்க முடிந்தது. நாள் நெருங்க நெருங்க பயம். பரீட்சை அன்று காலை தளத்தில் “இலக்கியவாதியைக் காதலித்தல், கடிதம்” வாசிக்கையில் ‘நம் முயற்சிக்கு அப்பால் வேறொன்று நிகழ்கிறது’ எனும் வரி மனச்சுமையை இறக்கிவைத்தது (ஆண்டவன் மீது பாரத்தைப் போடுதல் என்பது இது தானோ). பரீட்சை ஆரம்பிப்பதற்கு கால் மணி நேரம் முன்பு பிராணயாமா செய்ய நினைத்தேன். கூச்சத்தில் வெறுமென கண்களை மூடி சில நிமிடங்கள் ஆழ மூச்சிழுத்து விட்டேன். பரீட்சையையும் சுலபமாக எழுதிவிட்டேன்.

“ரசவாதி” நாவல் படித்தது முதல் சகுனங்களைக் கவனிக்கும் ஆர்வம் உண்டு. அப்படி கவனித்த சில சகுனங்கள் மூலம் ‘NIRT’ மீது அசைக்க முடியாத நம்பிக்கை உருவானது. எந்த அளவிற்கு என்றால், சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்ததுமே ரத்தான காப்பீடு பரீட்சைக்கான தேதி வெளியிட்டிருந்தார்கள். ஒரே ஒரு வாரம் கெடு. எள்ளளவும் படிக்கத் தோன்றவில்லை. பயமில்லை. அதை எழுதும் பொது கூட அக்கறையில்லாமல் தான் எழுதினேன். ஆனால் வீட்டிற்கு வந்ததும் ஒரு எண்ணம் ‘ஒருவேளை இரு பரீட்சையிலும் தோல்வி அடைந்துவிட்டால். பெரும் மனக்குழப்பம். எல்லா வாசல்களும் மூடியது போன்ற பிரமை. பித்துப் பிடித்தது போலானேன். நாட்களை வீணாகக் கழித்தேன். தியானப் பயிற்சிகள் செய்யவில்லை இலக்கியம் படிக்கத் தக்க செய்தி வரவில்லை நாட்குறிப்பு கூட எழுதவில்லை. வெறும் ஜடம் சோர்வுடன் உலவ மட்டும் செய்தது. ஒரு நாள் இரவு அம்மா புது காலண்டரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன பாக்குறீய.

கவர்மென்டு லீவு பாத்துட்டு இருக்கேன். ஒருவேள வேல கெடச்சா டிக்கெட்டு போடனும்லா என்றாள்.

எனக்கு அளவுபடாத ஆச்சரியம். நான் ஏன் நம்பிக்கை இழந்தேன். மறுநாளே தியானப் பயிற்சிகளைத் தொடர்ந்தேன். என்ன படிக்கலாம் என்று பார்க்கையில் ‘ஏழாம் உலகம்’ எடுத்தேன். ஒரு அத்தியாயத்தோடு நிறுத்திய குறுநாவலுக்கு இரண்டாம் அத்தியாயம் எழுதிப் பார்த்தேன்.

தினமும் NIRT தளத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பேன். இப்போ வந்துருக்குமோ. வருடத்தின் இறுதி நாள் காலை. இன்றும் வந்திருக்காது என சும்மா தளத்தை பார்க்கையில் பரீட்சை முடிவுகளை வெளியிட்டிருந்தார்கள். சில நொடிகள் அதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். படபடப்பு. பயம். பெயர் இருக்குமா. உள்ளே சென்றேன். இருந்தது. SIVA KISHORE S.

உடலும் உள்ளமும் ஓரிடத்தில் நிலைகொள்ளாது துள்ளின. அம்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நண்பர்களுக்கு சொந்தங்களுக்கு செய்தி அனுப்பினேன். ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தினேன். தில்லை அவர்களுக்கு ‘இவ்வருடத்தின் நாட்குறிப்பில் வேலையின்மை காரணமாக சந்தோஷமான நாட்கள் அதிகம் இல்லாவிடினும் நான் சந்தித்த இரு முக்கிய நபர்கள் ஜெ மற்றும் நீங்கள்’ என எழுதினேன்.

உங்களைச் சந்தித்த பின் தான் இலக்கியத்தில் இருக்கும் குறியீட்டுத் தன்மை, வாசக இடைவெளி, அணுகும் முறை என பல விஷயங்கள், கலைச் சொற்கள் தெரிந்து வருகிறேன். என் சிந்தனை பண் பட்டிருப்பதை உணர முடிகிறது. முன்பைவிட.

வருடத்தின் மொத்த கவலையும் இறுதி நாள் ஓடிற்று. புத்தாண்டு உண்மையிலேயே புதியதாகிப் போனது. மத்திய அரசாங்க உத்தியோகம் எனும் மூன்று சொற்களால் பாமர சமூகத்தைப் புறந்தள்ளி என் இலட்சிய பாதையில் இறங்குகிறேன். தன்னறத்தை தொடர்கிறேன்.

இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். அன்று நீங்கள் இனிமேல் மேடையுரை முகாம் நிகழாது என்றீர்கள். அன்று கலந்துகொண்டது என் நல்லூழ்.

ஆம், நம் முயற்சிக்கு அப்பால் வேறொன்று நிகழ்கிறது.

எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லி உங்களை வணங்குகிறேன்.

‘என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போ? என்று நானும் இனிமேல் கேட்கலாம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது.

– வண்ணதாசன்.’

அன்புடன்

சிவா கிஷோர்


அன்புள்ள சிவா

வாழ்த்துக்கள்

எந்தப் பயிற்சியும் ஆளுமைப் பயிற்சியே என்று ஒரு சொல்லை நித்ய சைதன்ய யதி சொல்வதுண்டு. ஒரு மேடையுரைப் பயிற்சி, ஒரு தியானப் பயிற்சி மட்டும் அல்ல; ஒரு சிறு கைத்தொழில்பயிற்சி கூட நம்மை அறியாமலேயே நம் ஆளுமையை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயிற்சி உண்மையான ஆசிரியர்களால் அளிக்கப்படவேண்டும். அதை நாம் நம்மை அளித்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஜெ


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் (2023) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் பிப்ரவரி 16, 2024 அன்று பயிற்சிகளின் வழியே… என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

அகப்பயிற்சி- கடிதம் – வ.க. மாலதி, கோவை.

அன்பாா்ந்த ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு

ஜனவரி 5,6,7 தேதிகளில் வெள்ளிமலையில் குருஜி தில்லை  செந்தில் அவர்களின் வழிநடத்தலில் நடந்த தியான முகாம் பங்கேற்ற பிறகு உலகம் இன்னும் அழகாகி விட்டதாக மலர்ந்த என் அனுபவத்தை எழுதுகிறேன்

முதலில் எல்லோருக்கும் ஒரு கேள்வி எழலாம். இந்த வயதில் (75) இம்முயற்சி  தேவையா என்று.உண்மை  கூற வேண்டும் என்றால், நாள் ஆக ஆக ஒரு  Zombie போல் ஏதோ எனக்கு நினைவில் இருப்பவைகளை   மாணவர்களுக்கு எாிச்சலும் கோபமுமாக சொல்லிக் கொடுப்பது, ஜெ யை படித்து விட்டு இன்னும் பதறுவது என்ற போய்க் கொண்டிருந்த   பொழுது  உங்களுடைய இரண்டு பதிவுகள் என்னை எழுப்பி விட்டது. ஒன்று  உங்களுடைய  61 ஆம் பிறந்த  நாள் அன்று வந்தது என்று நினைக்கிறேன். இறுதிவரை ஒரு சோா்வும் இல்லாமல் அறிவுசார் செயல்களில் நான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று உங்கள் உறுதியை கூறினீர்கள். இரண்டாவது பதிவு, நீங்கள் என்றாவது உங்களைப் பற்றி உன் உள் மனது, உன்னுடைய தொடர்பு இந்த பிரபஞ்சத்துடன் என்று யாராவது யோசிக்கிறீா்களா?   உங்களை அவதானிக்க ஏன் பயப்படுகிறீா்கள் என்று கேட்டீா்கள்.  சம்மட்டி போல் உங்கள் வார்த்தைகள் தாக்கிய  பொழுது இந்த ஜடத்தன்மையிலிருந்து நிச்சயம் விடுதலை வேண்டும் என்று தியானத்தை நோக்கி  நகர்ந்தேன்.

இந்த முகாமிற்கு வருவதற்கு முன் தனியாகப் போவது சிறிது பயமாக இருந்த பொழுது குருஜியை அணுகினேன்.   இணையத்திலோ அல்லது கோயம்புத்தூரில்  உள்ள நிலையத்திலோ கற்க முடியுமா என்று கேட்ட பொழுது, ஒரு நொடியும் தாமதிக்காமல் நண்பர்கள் யாரும் சேரவில்லை என்றால் என்னுடன் வரலாம் என்று உடனே கனிவுடன் கூறினா்.  மிகவும் வியப்பாக இருந்தது இப்படி எளிமையாக சொல்கிறார் என்று. நல்லவேளையாக. கோயம்புத்தூரிலிருந்து என்னுடைய நண்பர்  ஆனந்தன் ( அவரும் நானும் இந்திய வேளாண்  ஆராய்ச்சி நிலைத்தில் ஒன்றாக வேலை  செய்திருக்கிறோம் .ஆனால் போனில் முதலில் தெரியவில்லை.  நண்பரை இத்தனை வருடங்கள் கழித்து பார்த்தது  ஒரு ஆனந்தம்.) போகும் வழி எல்லாம் ஒவ்வொரு கதையும், ஜெயிலிருந்து அசோகமித்திரன்  ,  தி.ஜா,  புதுமைப்பித்தன்  என்று எல்லா முத்துக்களையும் கோர்த்து  மகிழ்ந்து கொண்டே அந்தியூர் வந்து  சோ்ந்தோம் . அங்கு நண்பா் இராமமூா்த்தி வந்து சேர்ந்து கொண்டாா்.  வெள்ளிமடை வந்ததும் சொந்த ஊருக்கு வந்தது போல அமைதி. மணி  அண்ணாவின் அணைப்பு. இரவு உண்ணும் பொழுது நம்ப முடியாத இளமையுடன் சிாித்த குருஜி, அவருக்கு  உதவ  வந்த கடந்த வெள்ளி மலை வகுப்புகளில் பங்கேற்ற தன்னார்வலர்கள் (செல்வா , ரவி, குணா,மோகன்ராஜ்)  எல்லாரையும் சந்தித்தேன். எட்டரை மணிக்கு  வந்த தோழி சித்ரபிரபாவிடம் சிறிது அளவளாவி,  விட்டு நன்கு  உறங்கிவிட்டேன் .  பின்னர் வெகுநேரம்  பிரபா பூச்சிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்

காலை ஆறுமணி இருக்கும். எழுந்து வெளியில் வந்து அமா்ந்து முடுபனியும் காற்றும் ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது மேக பனி  மூட்டத்திலிருந்து ஒரு பாட்டு  மிக மெல்ல, ஆனால்  தெளிவாக  உருகி உருகி ஒலித்தது . இந்த காலை வேளையில் யாா் இப்படி என்று பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த மலைச்சாிவு மேக மூட்டங்கள் நடுவே ஒரு தேவதூனைப் போல பாடிக் கொண்டே வந்த மணி அன்ணா. அவர் என்னைக் கவனிக்க வில்லை அவரும் அவர் பாட்டோடு இறையருளோடு  ஒன்றி கலந்து  அனுபூதி நிலையில் செல்வதை கூப்பிட்டு நிறுத்தும் மனது இல்லை.  அந்த சில்ஹவுட்ட்  சித்திரம் ,  என்னவோ செய்தது.  பாவம் ஏதோ ஒரு pump or UPS  வேலை செய்கிறதா  என்று  பார்த்து விட்டு வந்திருப்பார் . 40 பேருடைய வாழ்வும் அவரது அணைப்பில்தான் இருக்கிறது என்று நினைத்த பொழுது, இது போல் அா்ப்பணிப்போடு ஒரு கர்ம யோகியாக நானும் மாறணும் என்று நினைத்துக் கொண்டேன்.

எப்பொழுதும் போல் புத்தரையும்   தேவியையும்    பிரார்த்தனை  செய்த பிறகு வகுப்பு துவங்கியது முதல் வகுப்பில், யோகா என்றால் என்ன , யோகாசனத்திற்கும்        தியானத்திற்கும் உள்ள வேற்றுமைகளை குருஜி  விளக்கினார். புறத்தில் நடக்கும் செயல்களை உணர   இருக்கும் ஐம்புலன்கள் , அதனை உள்ளடக்குதல் (பிரத்யாகாரம்). மையப்படுத்தல் தியானம் , நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்  உயிா் சக்தி பிரானா என்று  எல்லாவற்றையும் மிகவும் பொறுமையாக விளக்கினார் .  மிருகத்திலிருந்து  மனிதன்   வேறுபடுவது விழிப்புணர்வு ஒன்றினால் தான். மனம், பல உணர்வுகள் அனுபவங்கள் , நிலைகள் கொண்ட பெருவெளி என்றல் விழிப்புணர்வு  என்பது நம் கையில் உள்ள தீபம் போல ,மனிதன் எந்த வெளியில் நாம் செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தி செல்லும் என்றார் .  

இதை நாங்கள் நன்கு புாிந்து கொள்ள பல எடுத்துக்காட்டுகள் கூறிக் கொண்டே சென்றார் .  எனக்கு மிகவும் பிடித்தும் எளிதானதும் ஆனது, மனம் ஒரு பொிய மாளிகை என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதில் பல அறைகள் இருக்கின்றன. ஓரொரு அறையிலும்   பயம், வெறுப்பு, கோபம், சலிப்பு என்று இருந்தாலும் நம் விழிப்புணர்வு கொண்டு எந்த அறையிலிருந்து நாம்  விடுபடுவது  மிகவும்  தேவை என்று உணர்ந்து அதிலிருந்து வெளி வர வேண்டும் என்றார் மனதுக்கும் விழிப்புணர்வுக்கும் உள்ள வேறுபாடு புாிந்தால்  ( Mind versus Awareness நமது உணர்ச்சிகளை அதன் பிரவாகத்தை கட்டுப்படுத்தலாம் (emotional)  ஏனெனில்  இந்த வெளிப்பாடுகளில் நம் உயிர் சக்தி(ப்ரானா ) செலவாகிறது.  ஒரு தெளிந்த ஒடைப்போல, மனம், விழிப்புணர்வு, ப்ரானா , உணர்ச்சிகள் நான்கையும்  இணைத்து  இருந்தால் நம் செயல்பாடுகளை   மேம்படுத்த முடியும் என்று விளக்கினார் குருஜி. அவர்  நல்ல உளவியாலாளராகவும் இருக்க வேண்டும். சின்ன சின்ன உதாரணங்களை சொல்லி நம்மிடமிருந்தே விடை வர வழைக்கிறர்.

 அதற்கு பிறகு எல்லோரையும் அறிமுகப்படுத்திக்  கொள்ள சொன்னா். அதிக சதவீதம் வந்திருந்தவா்கள் கூறியது  கவனமின்மையும் ஞாபக மறதியும் தான் . இதை நிச்சயமாக கையாள முடியும் என்றார்  அதற்கான கருவிகள் இவைதான் , முதலில்  (1) முன் முடிவுகளோடு எதையும் அணுகாதீா்கள்(2) எது செய்தாலும் மிக மிக சிறிய  விஷயமாக இருந்தாலும் (பல் தேய்ப்பதை உதாரணமாக கூறினா்) நண்பா்களிடம்  பேசினாலும் அவருக்கு/ அவைகளுக்கு முழு  கவனிப்பு கொடுங்கள்.  (3) பல வேலைகளை செய்கிறேன் என்று எல்லாவற்றையும் சொதப்பாமல்  திட்டமிடுங்கள். இந்த வேலையை இந்த மணிக்குள் செய்து முடித்து விட்டு அடுத்த வேலை என்று வரையறுக்க கற்றுக் கொள்ளுங்கள் (multitasking/ multiple tasking). நினைத்துப் பாா்க்கும் பொழுது இந்த மூன்று தவறுகளையும் நான் செய்து கொண்டிருந்தேன், இனி நான்  திருத்திக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்  

 மாலை வகுப்பு, தியான முறைகளை கற்றுத்தந்தாா்.  தோழி சித்ரா கிருஷ்ணன் கூறியது போல் ,இந்த பயிற்சி வகுப்பை மிக அழகாக கட்டமைத்திருந்தார் . முதலில் தெய்வீக மணம் கமழும் அரங்கம், ஹம்சத்வனி அல்லது சிந்துபைரவியில் பண்டிட் சொளராசியாவின் குழலிசை , யோகா பயிற்சியின் வரிசைகள்,   எல்லாம்   கச்சிதமாகஅமைக்கப்பட்ட பயிற்சி .எப்பொழுது கேளிக்கையாக இருப்பது எப்பொழுது விதிகளை  மீறாமல் அடக்குவது என்று கண்டிப்பான ஆசிரியராகவும் இருந்தார் .  நான் கவனித்தது, ஒரு  தியான பயிற்சி  செய்யும் பொழுது, எந்த உறுப்புகளின் செயல் பாட்டினை  மேம்படுத்தும், என்ன பயன் கிடைக்கும் என்று சொன்னாரே  தவிர அது செய்யும் பொழுது உடல் நிலையில் என்ன எதிா்பாா்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும் என்ன நடந்தது என்று கேட்கும் பொழுது நண்பர்கள் தாங்கள் உணர்ந்த  அதிர்வுகள்/ சிறு மாற்றங்கள் பகிர்ந்த பொழுது, 80% சதவீதத்திற்கு மேல் எல்லாருடைய அனுபவம்  ஒன்றாக இருந்தது.இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது . அறிவியல் வழி இது ஒரு சிறந்த  காட்டி ( indicator) .  எனக்கும் நண்பா் அருணச்சலத்துக்கும் பொிதாக ஒன்றும் நிகழ்வில்லை என்று வருத்தத்துடன் சொன்ன பொழுது அமைதியாக, நடக்கும், நிகழும், நம்புங்கள் என்றார் .

நிகழ்ந்தது. என்னுடைய நம்பிக்கையின்மை உடைந்தது.  இதை எழுதுவது தவறா  வெளியில் சொல்லக் கூடாதா என்று விதிகள் எனக்கு தொியாது அவா் கூறிய மூன்று விஷயங்களை உள்வாங்கி ,  மாலதி என்ற அகந்தையை ஒடுக்கி விட்டு கடை பிடித்தேன்.  ஒன்று அவா் கூறியது போல ‘௧ணம்’.  இந்தக் கணத்தில் எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 100% விழுக்காடு கவனம் செலத்துங்கள். தியானம் என்பது நீங்கள் செய்வது அல்ல. பிராா்த்தனை நீங்கள் செய்யலாம் அது கடவுளோட நீங்க போடற  dealing (குறிப்பாக என்னை பார்த்து சொன்னார் )அது இல்லை; தியானம் என்பது நிகழ்வது அதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கலாம் .ஆனால் எவ்வளவு தூரம் உங்களை கொடுக்கிறீா்கள் என்பது முக்கியம் என்று விளக்கினார்

 ஞாயிற்றுக்கிழமை கற்பனை உலகில் கொண்டு செல்லும் தியானம் பயிற்றுவித்தாா்.  அதற்கு முன் எல்லோரையும் இரண்டு வருடங்களில் என்ன செய்ய  வேண்டும் முதலில் எது, இரண்டாவதாக அதற்கு அடுத்து என்ன  செய்ய வேண்டும் , முன்றவதாக நெடுநாள் கனவு குறிக்கோளாக என்ன வேணும் என்று எழுதியோ அல்லது மனதில் நினைத்துக் கொள்ளவோ செய்யுங்கள் என்று தொடங்கினார் .  கற்பனை தியானத்தில் என்னை முழுக்க  கொடுத்தேன். அவா் ஒவ்வொன்றாக குறிப்புகள் சொல்ல, மலையேறி , காடும் செடியும் விலங்குகளை உணர்ந்தேன் .   மேலே மேலே மேலே பறந்தேன் அந்த உயா்ந்த வெளியிலிருந்து அடர்ந்த காடு கண்டு கொண்டே இருந்த பொழுது சிறிய  ஒளிக்கற்றை தொிந்தது. மெல்ல மெல்ல கீழிறிங்கிய பொழுது ஒரு பேரொளி என்னை கவ்வியது. என்னை அணைத்து ஏதோ உறுதி கூறியது.  என்னை ஆசீா்வதித்து கொண்டே இருந்தது. கருணை , ஒளி, பேரருள் கடவுள், பெயா் என்ன வேண்டுமானாலும்   இருக்கட்டும்  என்னை ஒரு பொருட்டாக நினைத்து எனக்கு நம்பிக்கை கொடுத்தது. கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீா் வடிகிறது, நன்றி, நன்றி, நான் இதற்கு தகுந்தவளாக நிச்சயம் மாறுவேன் என்று உறுதிமொழி  கொடுத்தேன்.  இந்த பயிற்சிக்கு பிறகு ஒரு இடைவேளை. (பேசக்  கூடாது) ) பிறகு நமக்கு இந்த கருவிகளை கொடுத்த ஞானியா்கள், குருக்கள் எல்லாருக்கும் நன்றி தொிவித்து அவரும் வணங்கினார்  ( அவா் சிறிது உணர்ச்சி வசப்பட்டது  போல எனக்கு தோன்றியது ) பிறகு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்று விரும்புவர்களை  நன்றியோடு நினைக்கச்  சொன்னர்.  விரும்பாதவா்களையும் நினைத்து மறக்க சொன்னா். இந்த வகுப்பு நடத்தப்படும் சூழ்நிலைக்கு. அதை உருவாக்கி கொடுக்கும் உங்களுக்கு, அதை செவ்வனே  நடத்தி செல்லும்  மணி அண்ணாவிற்கு, வகுப்பு நடத்த உதவிய ஆசிாியா்களுக்கு, எல்லாவற்றிக்கும் மேல் நாமிருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி என்று ஒவ்வொன்றாக சொல்லி நாம் ஆழ்ந்து நன்றி என்று சொல்லி உள்ளம் உருகி   இருக்கையில் திருமதி  பாம்பே ஜெயஸ்ரீ  பாடிய பாரதியாருடைய,’ உயிரே உ னது பெருமை யாருக்குத்தெரியும், நீ கண் கொண்ட தெய்வம், —— ——- உயிரே நீயே  நீா் நிலம் காற்று நெருப்பு” என்று சரணாகதி  அடைந்த பாடலுடன் முடிந்ததும் ,என்ன சொல்வது. போின்ப நிலை  என்று இதைத்தான் சொல்கிறார்களா?பேரருள் என்பது இதுதானா ?

நடைமுறை வாழ்க்கை்கு அவர் கூறிய பல வழிகள் (Take home Points). கவனமின்மையை நீக்க அவர் கூறிய கருவி, ஏதாவது ஒரு செயல், எழுதுவதோ படிப்பதோ வீட்டு வேலையாக கூட இருக்கலாம்  எடுத்து கொண்டு முதல் ஒரு மாதத்தில்  1 ½  மணிக்கு எந்த ஒரு இடைவெளி யும் இல்லாமல் அதை செய்வேன் என்று எடுத்து கொள்ளுங்கள் அதில் வெற்றி பெற்றல் அடுத்த குறிக்கோளாக இன்னொரு   செயலை எடுங்கள் என்றாா் அது மிகவும் நடைமுறைக்கு உதவும் என்று நம்புகிறேன். மற்றொன்று  inner silence.பயிற்சிகளின் நடுவில் பேசக்கூடாது  என்று கடுமையான விதி கொண்டுவந்தார்.  என்னப் போல வாய் ஒயாமல் பேசிக் கொண்டிருப்பவா்க்கு  அமைதியின் அழகு இப்பொழுது தான் புரிகிறது.

சனிக்கிழமை இரவு இசை இரவாக  அமைந்தது. குருஜி பாடுவது SPB  போல இருக்கிறது என்று யாரோ சொன்னா்கள்.உற்சாகமா பாடல்கள் பாடி இதுவும் இரு த்யானம் போல ஆயிற்று.  மிக மிக எதிர்பாராதது  மணி அண்ணா பாடியது மேகமூட்டத்தில் அவா் முணு முணுத்து கொண்டு வந்ததை நான் கேட்டேன் என்று சொன்னதும் குருஜி வேண்டுதலில் ” என் அப்பன் அல்லவா எந்தாயும் அல்லவா என்று பாடியதும் நந்தனார் உலகத்துக்கே சென்று திரும்பினோம்.நடுவில் நண்பா்கள் சட்ட நாதன், அருணாசலம் வேடிக்கை பேச்சுகள். கடைசியில் குருஜியின்” அவள்  செந்தமிழ் தேன் மொழியாள் ” தொடங்கியதும்  எல்லோரும் சேர்த்து அனுபவித்து பாடியது

 அடுத்த நாள் விடை பெரும் பொழுது வழக்கம் போல் ஒரு மயான அமைதி .  எல்லா நண்பா்கலும் காா் அருகில் வந்து விடை பெரும் பொழுது யாரோடும் பேசாமலேயே உருவான உறவு இது.

கோயம்புத்தூர் திரும்பி வரும் வரை அந்த அழகு உலகத்தில் சஞ்சரித்துக்  கொண்டிருந்தேன். சின்ன சின்ன மாற்றங்கள் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய 100% விழுக் காடு கவனம் பேச்சு செய்கை படிப்பு எழுதுவது எல்லாவற்றிலும் கொண்டு வருகிறேன். குருஜி கற்றுக் கொடுத்த தியானம் முறைகளை இரண்டு வேளையும் தட்டு தடுமாறி செய்து முடிக்கிறேன்.நான் சொல்வது நகைப்பிற்குாியதாக தோன்றினாலும் ஒரு உடனடி பலன்  நான் கண்டது சொல்லத்தான் வேண்டும். நான் கண்ணை முடினால் psychedelic colors patternsதான் தொியும்  அந்த வண்ணங்களிலிருந்து என்னால் மீளவே முடியாது  தொலைக்காட்சி, மடிக்கணினி , மொபைல் எந்தக் காரணம் என்று சொல்ல முடியாத  ஒரு எாிச்சலூட்டும் நிகழ்வு.   சனிக்கிழமை நான்  குருஜீயை நம்பி ஆழ் நிலை தியானத்தில் இருந்த பிறகு அடுத்த நாள் காலையிலிருந்து அந்த வண்ணங்கள் வருவதில்லை எல்லோரையும் போல கறுப்பு /வெள்ளை தான் தெரிகிறது

 என் நெடுநாள் கனவாக கற்பனை தியானத்தில் நினைத்து கொண்டது, ஆசான் விரும்பும் உலகம்— அறிவியலோடு ஆன்மீக உறுதியும் மொழி இன பேதமின்றி ஏற்ற தாழ்வு ஒன்றுமில்லாமல் கற்றலும் கற்றுவிப்பதும் அதன்வழி  பயன்கள் பெறும் உலகம். இந்த கணங்கள்  எல்லாம் நாம் அவ்வுலகத்தை நோக்கி எடுத்து வைக்கும் அடியாக இருக்கட்டும். நல்லதோா் உலகம் படைப்போம் என்று  கூறி.

வணக்கங்களுடன்,

வ.க. மாலதி,

கோவை.

பி.கு: அடுத்து பைபிள் முகாம் வரவேண்டும் . குரான் நிச்சயம் படிக்கணும்.உங்கள் தத்துவ வகுப்பு எல்லாம் வரணும் .ஆனந்தன் சொன்னது போல வெள்ளிமலையில் வீடு வாங்கிவிடவா


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த ஜனவரி மாதம் (2024) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் பிப்ரவரி 13, 2024 அன்று அகப்பயிற்சி- கடிதம் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

தியானம், உளக்குவிப்புப் பயிற்சி அறிவிப்பு (Article date:7 February 2024)

அண்மையில் சுசித்ராவிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். ‘ஜெர்மனி அல்லது சுவிட்சர்லாந்தில் அன்றாடம் யோகம் அல்லது தியானம் செய்யாதவர்களை தொழிலிடங்களில் பார்ப்பது அரிதினும் அரிது. அவற்றைப் பற்றிய அறிதலோ மதிப்போ இல்லாமலிருப்பவர்கள் இந்தியர்கள்தான். அதைப்பற்றி ஜெர்மானியர்களுக்கு பெரிய வியப்பும் உண்டு. யோக- தியானப் பயிற்சிகள் இன்று மதம்- நாடு சார்ந்த அடையாளங்களை இழந்து உலகளாவியவையாக மாறிவிட்டன’

நாம் இன்னும் இன்றைய உலகச்சூழலின் இயல்பை புரிந்துகொள்ளவில்லை என்பதே நம் அறியாமைக்குக் காரணம். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த சூழல் அவர்களின் வீடு, ஊர் ஆகியவற்றில் நிகழ்ந்தது. இன்றைய தலைமுறையின் சூழல் மொத்த உலகமுமே என ஆகிவிட்டது. இது ஊடகங்களால் இணைக்கப்பட்ட உலகம். ஊடகங்களை பெரும் நிபுணர்கள் கட்டமைக்கிறார்கள். ஊடகம் நம் மீது பெரும் அலைபோல வந்து அறைகிறது. நம்மை அது சிதறடிக்கிறது. நம்ம் கவனம் எதிலுமே குவியாமல் செய்கிறது.

நாமே கவனிக்கலாம் .இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஊடகம் ஒரு பரபரப்பை கிளப்புகிறது. அரசியல், சினிமா எதையாவது சார்ந்த ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. நாம் அதைப்பற்றி பேசி, விவாதித்துக் கொண்டிருக்கையிலேயே அடுத்தது வந்துவிடுகிறது. நாம் சமகாலத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது உண்மை அல்ல. நாம் எதையும் கவனிப்பதில்லை. எதையும் நினைவில் நிறுத்துவதில்லை. நாம் அப்படியே ஊடகங்கள் வழியாக ஒழுகிச் சென்று கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம். நம்மை ஊடகங்கள் நிரந்தரமாக ஒரு பதற்றநிலையில் வைத்திருக்கின்றன.

அதிலிருந்து விலகினாலொழிய நம்மை நாம் குவிக்க முடியாது. எதையேனும் முழுமையாக கவனிக்கவோ, எதையேனும் தொடர்ச்சியாகச் செய்யவோ முடியாது. அவ்வாறு நம்மைக் குவிக்கவும் நமக்கு நிபுணர்கள் வடிவமைக்கும் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. முறையாக அவை கற்பிக்கப்படவேண்டியுள்ளது. அவற்றையும் நாம் அதே ஊடகம் வழியாக கற்கலாம் என்பது அபத்தம். அந்தக் கல்வி ஏற்கனவே நம்மை சிதறடிக்கும் ஊடகங்களின் தாக்குதலின் இன்னொரு பகுதியாகவே அமையும். நமக்குத்தேவை நேரடியாக ஆசிரியரிடமிருந்து கற்கும் கல்வி.

இன்றைய மாணவர்களுக்கு மிக இன்றியமையாதது இது. இன்றைய தொழில்முனைவோர், மூளையுழைப்பாளர் அனைவருக்கும் தேவையானது. அப்பயிற்சியை பலர் இன்று இன்னொரு வகை தொழில்நுட்பப்பயிற்சியாக அளிக்கிறார்கள். இன்னொரு வகை ஊடகவணிகமாகவும் மாற்றியுள்ளனர். ஆனால் அப்பயிற்சியை அதற்கு இயல்பான வடிவில் அளிக்கும் பொருட்டு குருகுல முறைப்படி இப்பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இத்துறையில் 30 ஆண்டுக்கால நிபுணரும், பல்லாயிரம்பேருக்குப் பயிற்சி அளித்துள்ளவருமான தில்லை செந்தில் பிரபு இப்பயிற்சியை அளிக்கிறார். அவர் தொழில்முறையில் ஒரு ஏற்றுமதித் தொழில்நுட்ப நிபுணர். இது அவர் அளிக்கும் சேவைகளில் ஒன்று.

வரும் மார்ச் மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புக்கு

programsvishnupuram@gmail.com


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் வரும் மார்ச் (2024) மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்த்த இருக்கும் தியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம் பற்றி தியானம், உளக்குவிப்புப் பயிற்சி அறிவிப்பு எனும் தலைப்பில் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதி அவரது இணையதளத்தில் பிப்ரவரி 7, 2024 அன்று வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.