அவனருளாலே அவன் தாள்  வணங்கி 

“அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”.

இந்த காலகட்டத்திலும் பெருமளவில் திறமையான மாணவர்கள்  பள்ளியிலிருந்து கல்லூரி சேரும் முக்கியமான  காலகட்டத்தில் பொருளாதார மற்றும் குடும்ப சூழலால் படிப்பைத் தொடர முடிவதில்லை அல்லது  சரியான கல்லூரிப்படிப்பை தேர்ந்தெடுக்க முடிவதில்லை. ஒரு இளைஞன் கல்வி மூலம் தலையெடுத்து விட்டால் அந்தத் தலைமுறையின் வாழ்வே  தலைகீழாய் மாறி விடும். அதற்கு ஒரு சிறிய முன்னெடுப்பாக ” கற்கை நன்றே ” என்கிற கல்வி உதவித்திட்டத்தை சில நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தோம். 

எந்த ஒரு செயலுக்கும் சரியான அமைப்பு இல்லாமல் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்த இயலாது என்பதால்  இந்த இரண்டு ஆதாரமான நோக்கங்களுக்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  

சிதானந்த ரூபமாக விளங்கும் ஆன்ம ஸ்வரூபத்தை நினைவுறுத்தும் விதமாக “ஆனந்த சைதன்யா அறக்கட்டளை” என இந்த அமைப்புக்கு   பெயர் சூட்டப்பட்டுள்ளது. சைதன்யா என்றால் தூய விழிப்புணர்வையும் குறிக்கும் .அதே சமயம் தெய்வீகத்தின் இருப்பையும் குறிக்கும். உண்மையில்  தூய விழிப்புணர்வின்  உச்சமே  தெய்வீகத்தின் இருப்பு தான் . இரண்டும் வேறல்ல. “பிரஞ்ஞானம் பிரம்மா ” என்ற மகா வாக்கியம் குறிப்பது இதுவே. பிரக்ஞையே பிரம்மம்.

ஆனந்தம் என்றால் பெரும்பாலும் நம் மகிழ்ச்சியை உருவகித்து கொள்கிறோம் . அல்லது மிக அதிகமான மகிழ்ச்சியை. உண்மையில் மகிழ்ச்சி என்று நாம் உணர்ந்து இருப்பது எல்லாமே பெரும்பாலும் வெளி தூண்டுதல்களாலோ  அல்லது அதை பற்றிய எண்ணங்களாலோ அல்லது அதைப்  பற்றிய கற்பனைகளாலோ மட்டுமே. 

இயல்பாகவே இந்த எந்த தூண்டுதல்களும் அற்று ஒருவன் ஆனந்தத்தில் இருப்பானாயின் அதுவே உண்மையான ஆனந்தம் . அந்த ஆனந்த சைதன்யத்தை அறிதலும், உணர்தலும், உணர்ந்து நிலை கொள்வதுமே  மெய் உணர விரும்பும் மனிதனின் நோக்கமாகும்.

அதுவே இறையருளின் ஆனந்தமாக நிலை கொள்ளும் . இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இந்த பரிமாணத்தை  ஒரு துளியேனும் பருக உதவ வேண்டும் என்பதே இந்த அறக்கட்டளையின் நோக்கமும் . இந்த நோக்கில் ஆனந்த சைதன்யா யோகா மற்றும் ஆன்மிக வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

  முன் எப்போதும் இல்லாத அளவில் உளவியல் சிக்கல்களும் உறவுச் சிக்கல்களும் உணர்வுச் சிக்கல்களும் பெருகியுள்ள இந்த காலகட்டதில் உளவியல் பற்றிய புரிதல்கள்  நம் சமூகத்தில் மிக மிகக் குறைவாகவே , நன்கு படித்தவரிடையே கூட, உள்ளது. 

        தியானமோ , ஆன்மிகமோ உணர்வதற்கு முன்பு மனத்தையும் உணர்ச்சிகளையும், உறவுகளையும் செம்மையாக்கிக் கொண்டாக வேண்டும். இது புரியாததாலேயே வாழ்வின் நான்கு புருஷார்த்தங்களாகிய  அறமும், பொருளும், இன்பமும், வீடுபேறும் சமநிலையாக உணர முடியாமல் போகிறது.  மக்களில் பெரும்பாலோர் சிக்கிக் கொள்வது பொருள் தேடுவதில். தேவையான அளவு கிடைத்த போதும் , தேடிய பொருள் தரக்கூடிய சுகத்தைக் கூட உணராமல் புலிவால் பிடித்த கதையாய் என்ன செய்வதெனத்  தெரியாமல் சிக்கிக் கொள்கின்றனர். அல்லது இன்பம் நுகர ஆரம்பித்து எந்த இன்பமும் முழுமை தர முடியாத போதாமையில் பரிதாபமான மனிதர்களாக மாறிப் போகின்றனர். 

வீடுபேறே அறுதியான இலக்காய் வைத்திருந்தாலும்  அறத்தோடு பொருள் தேடி இன்பம் உணர்ந்த பின்பு மட்டுமே அதைத் தாண்டிய இன்னொன்றை நோக்கி பயணம் மிக இயல்பாகவும் இலகுவாகவும்    பெரும்பாலோருக்கு அமையும்.  இல்லாவிட்டால் ஏற்படும் சமநிலைக் குலைவு மெய்யறிதல் நோக்கிய பயணத்திலும் பெருந் தடையாகவே மாறும்.

 

மேற்கத்திய உளவியல் மேல் எனக்கு எப்போதும் பெரும் ஆர்வமும் வியப்பும் உண்டு. கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த துறையில் நான் பல விதமாகக் கற்றுக் கொண்டவை எனக்குள் நிரப்பப் படாமல் இருந்த பல இடைவெளிகளை முழுமை செய்தது. மனம் என்கிற மாயப் பெருவெளியை சற்றேனும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். 

        விஞ்ஞான பூர்வமாய் நிரூபிக்கப்பட்ட  இந்த நவீன உளவியல் நுட்பங்கள் மூலம் முதலில் இம்மையில் நல்வாழ்வு வாழ ஒரு தெளிவான புரிதல் உருவாக்கினால் மட்டுமே,  பின்பு இந்த  மகத்தான யோக அறிவியல்  தரும் ஆன்மிக அனுபவத்தை முழுமையாக உணரவும் நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளவும் இயலும்.  அதனால் தான் நவீன உளவியலையும் மரபார்ந்த யோக விஞ்ஞானத்தையும் சரியான விகிதத்தில் அளிக்கும் விதமாகவே “ஆனந்த சைதன்யா யோக வகுப்புகள் ” நடத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொற்று காலத்தில் மிகத் தேவையான சூழ்நிலையில் ஆன்லைனிலும் நேரடியாகவும் அலுவலக நண்பர்களுக்காகவும்,  பிறருக்காகவும் வடிவமைக்கப்ட்ட வகுப்புகள் உருவாக்கும் மாற்றத்தைப்  பார்த்த பிறகு தொடர்ந்து இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது ( வகுப்புகள் பற்றி தெரிந்து கொள்ள www.anandachaitanya.org ). 

        இரண்டாவது முன்னெடுப்பான   கற்கை நன்றே – கல்வி உதவித்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட  மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்லூரிப் படிப்புக்கு அறக்கட்டளை மூலம் உதவி செய்யப் பட்டிக்கிறார்கள். இந்த ஆண்டும் மாணவர்கள் தேர்வு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

  ஒரு சிறிய அளவிலான அன்பர்கள் குழுவே கடந்த இரு ஆண்டுகளாக  இந்த மாணவர் தேர்வு மற்றும் கல்விக் கட்டணம் இவற்றில் பங்கெடுக்கிறார்கள். இந்த அடித்தளம் பலமாகவும் உறுதியாகவும் அமைந்து விட்டது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. 

இந்த அறச் செயலில் பங்கெடுக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

கற்கை நன்றே பற்றி மேலதிக தகவல்களுக்கு www.anandachaitanya.org என்ற தளத்தில் கற்கை நன்றே சுட்டியைப் பார்வையிடவும்.

    கடந்த பிப்ரவரி 27 அன்று கல்லூரி சேர்ந்து விட்ட அந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.  அவர்கள் பகிர்ந்ததைக் கேட்கும் போதும் அவர்கள் முகங்களைப் பார்க்கும் போதும் இதுவே என் தன்னறம் என்று உள் எழுந்த நிறைவும் கனிவு மே உரக்கச் சொன்னது.  

அதே நிறைவு தான்  ஒவ்வொரு தியான வகுப்பின் நிறைவின் போதும் நான் உணர்வது. 

அடையாளங்கள் அகன்ற வெற்று மானிடனாக ஒரு இனம் புரியா வெறுமை . ஆகவே அதுவே முழுமையும் கூட.

“நேற்று கற்றதையும் உணர்ந்ததையும்  இன்று எஞ்சாமல் கற்றுக் கொடுத்துவிடுங்கள் . கற்றது ஆழமாக உணர அது இன்னும் உதவும் ” என்ற எழுத்தாளர் ஜெயமோகன்  எனக்குச் சொன்ன வார்த்தைகளை அவர் மூலமாக வந்த குரு வாசகமாகவே  உணர்ந்து தலைக் கொண்டு வருகிறேன்.

செயலினால் உளம் நிறைந்து மனம் கனிந்து பின்  சொல் குறைந்து, செயல் குறைந்து முழுமையும் உள் திரும்பி உதிரும்  நாள் வரை, 

செய்கின்ற செயலை  இறையருளும் குருவருளும் முழுமையாக வழி நடத்த  வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

” அன்பர் பணி செய்ய என்னை

ஆளாக்கி விட்டு விட்டால் 

இன்ப நிலை தானே

வந்தெய்தும் பராபரமே”