26 ஆகஸ்ட் 2025, கரூர்
கரூர் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், காணியாளம்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது, கரூர் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி. இந்த கல்லூரியில் சுமார் 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பெரும்பாலும் இந்த கல்லூரியை சுற்றியுள்ள, கிராம புறங்களில் இருந்து வருகின்றனர்.

மாணவர்களின் நலனுக்காக கல்லூரியில் நூலகம் அமைத்திட வேண்டும் என்ற ஆசிரியர்களின் முயற்சியில், ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் பங்களிப்புடன், நூலகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26 – ஆம் தேதி ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் முக்கிய நிகழ்வான “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு போட்டி நடைபெற்றது.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு போட்டியானது, பள்ளி மாணவர்களிடயே புத்தக வாசிப்பின் முக்கியத்துத்தை எடுத்துரைக்கும் வகையிலும், புத்தக வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும் தொடந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் 30 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
நிகழ்வில், உலக அளவில் பிரபலமான இகிகாய், சீக்ரெட், மேஜிக், கல்பனா சாவ்லா போன்ற புத்தகங்களை பற்றி, 16 மாணவர்கள் அவர்களின் புத்தக வாசிப்பு அனுபவங்களை, உரையாக பகிர்ந்து கொண்டனர்.
போட்டியின் நடுவர்களாக விளங்கிய கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர். M. உமாதேவி, முனைவர். A. கவிதா, முனைவர். E. மேனகா மற்றும் முனைவர். ராமராசன், மாணவர்களின் சிறப்பான பங்களிப்பை கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இத்தகைய கிராம பகுதியில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் இந்த வாய்ப்பினை எவ்வாறு திறமையாக பயன்படுத்துகின்றனர் எனவும், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இந்த அளவுக்கு திறமை உள்ளது என நாங்களே இப்போதுதான் அறிகிறோம் எனவும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.

இப்போட்டியினை கல்லூரி ஆசிரியர்கள் செல்வகுமார், குணசேகர், முனைவர். சுந்தரி, ப்ரியதர்ஷினி, பாலாஜி மற்றும் கலைசெல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். போட்டியில் சிறப்பாக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள், வரும் நாட்களில் பரிசளிப்பு விழாவில் பங்கேற்று, பரிசளிக்கிறார்.