ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் பங்களிப்புடன், கரூர் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நூலக அறை திறந்து வைக்கப்பட்டது.

22 ஆகஸ்ட் 2025, கரூர்

கரூர் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், காணியாளம்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது, கரூர் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி. இந்த கல்லூரியில் சுமார் 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பெரும்பாலும் இந்த கல்லூரியை சுற்றியுள்ள, கிராம புறங்களில் இருந்து வருகின்றனர். மாணவர்களின் நலனுக்காக கல்லூரியில் நூலகம் அமைத்திட வேண்டும் என்ற ஆசிரியர்களின் முயற்சிகேற்ப, கல்லூரியில் நூலகம் அமைக்கப்பட்டது.


கொரோனா காலகட்டத்திற்கு, பின்பு பெரும்பாலான ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்களில் முக்கியமான ஒன்று, மாணவர்களின் கவனச்சிதறல் மற்றும் அவர்களது அதீத தொலைபேசி உபயோகித்தல் ஆகும். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் நீடித்த விடுமுறை காரணங்களால் மாணவர்கள் தொலைபேசி உபயோகிப்பதற்கு அடிமையாகி, குறைந்தபட்ச நேரத்திற்கு கூட கவனத்தைக் குவித்து செயலாற்றுவதில் சிரமப்படுகின்றனர். இதனை கையாள்வது, ஆசிரியர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்து வந்தது. இங்கு படிக்கும் மாணவர்களின் நடத்தை மற்றும் அவர்களின் மனப்பாங்கு ஆகியவை கிட்டத்தட்ட மோசமான நிலையில் இருந்தது. எந்த ஒரு விஷயத்திற்கும் உணர்ச்சிவயப்படுவது, உணர்வுகளை கையாள தெரியாமல் பிரச்சனைகளை உண்டாக்குவது, போதை பழக்கத்திற்கு அறிமுகம் போன்ற பல இன்னல்களை மாணவர்களிடையே, ஆசிரியர்கள் சந்தித்து வந்தனர்.


இந்நிலையில் இதற்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என எண்ணிய கல்லூரியின் விரிவுரையாளர் மற்றும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலருமான திரு. செல்வகுமார் அவர்கள், மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தினை அறிமுகப்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கலாம் என உணர்ந்து கல்லூரியில் நூலகம் அமைக்கலாம் என முடிவு செய்தார். இதற்காக, கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடன் கலந்து பேசி, அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டது. நூலகம் அமைப்பதற்காக, கல்லூரி வளாகத்தில் நெடுங்காலமாக உபயோகிக்கப்படாத, ஓர் அறை முடிவு செய்யப்பட்டது.

நூலகம் அமைப்பது தொடர்பாக ஆனந்த் சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களின் ஆலோசனைக்கேற்ப, அறக்கட்டளையின் சார்பாக நூலகம் அமைக்க தேவையான அறை சீரமைப்பு, மேசை உபகரணங்கள், குளிர்சாதன வசதிகள் போன்றவை ஏற்படுத்தி தரப்பட்டது.

இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த, இந்த ஏற்பாடுகள் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 22 – ஆம் தேதி, சிறப்பு விருந்தினர் திரு. K. கருணாகரன், உதவி ஆணையர் (கலால்), கரூர் அவர்கள் நூலகத்தை திறந்து வைத்து, நூலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பற்றியும், அவர் படித்த புத்தகங்கள் பற்றியும், புத்தக வாசிப்பு அனுபவங்கள், நுணுக்கங்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றியும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் திரு. லோகநாதன் மற்றும் கரூர் நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வம் அவர்கள், வாழ்த்துரை வழங்கினர்.

நூலக திறப்பு விழா நாளன்று மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் அனைவரின் ஒருங்கிணைந்த உழைப்பு மற்றும் ஒத்திசைவால், கல்லூரியே விழாக்கோலம் பூண்டிருந்தது.


கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, ஆசிரியர்கள் முற்றிலும் தனிப்பட்ட முறையில் கையாள வேண்டியுள்ளது. அந்த வகையில், இந்த நூலகம், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் நடத்தை மற்றும் மனப்பாங்கு நல்ல முறையில் மாறி, அவர்கள் வாழ்வில் சமூக, பொருளாதார உயர்வை அடைவதைத் தாண்டி, நாளைய சமுதாயத்தை வடிவமைக்கும், நல்ல மனிதராக மாற இந்த நூலகம் பெரும் பங்கு வகிக்கும் என ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *