Coimbatore, 07July 2024
கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கல்வியில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இடை நிற்றல் ஆகாமல் கல்லூரி சென்று உயர்கல்வி பயிலும் கனவை நனவாக்க ஆண்டு தோறும் கற்கை நன்றே எனும் திட்டத்தின்கீழ் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
கற்கை நன்றே கல்வி ஊக்கத்தொகையின் மூலம் பல மாணவர்கள் கலை, அறிவியல், தகவல் தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட பல துறைகளில் பல கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மட்டுமல்லாது அவர்கள் சார்ந்த துறையில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் சேரவுள்ள மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கட்டங்களாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 7 ஜூலை 2024 அன்று இறுதிகட்ட நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் 11 மாணவ மாணவிகள் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் கற்கை நன்றே திட்டத்தில் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் திரு.ரவிகுமார், திரு.செல்வகுமார், திருமதி.கிருத்திகா மதியரசன், திருமதி.ராதிகா, திரு.சண்முக சுந்தரம் மற்றும் திரு.சசிகுமார் ஆகியோர் மாணவர்களின் மதிப்பெண்கள், கல்வித்தகுதி, எழுத்து தேர்வு, பொருளாதார சூழ்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலைகளை மதிப்பாய்வு செய்தனர்.
மதிப்பாய்வுக்குபின் இறுதிகட்ட நேர்முகத்தேர்வுகளுக்காக கடந்த 7 ஜூலை 2024 அன்று கோவை குரும்பபாளையத்திலுள்ள ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் அலுவலகத்திற்கு மாணவ மாணவிகள் நேரில் வரவழைக்கப்பட்டனர். இறுதிகட்ட நேர்முகத் தேர்வுகளை ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் திரு.ராஜமுருகன், திரு.சசிகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இறுதியாக நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களில் தகுதியான 11 மாணவ மாணவிகளை ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் நேர்காணல் செய்து தேர்வு செய்தார்.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு கற்கை நன்றே கல்வி ஊக்கத்தொகைப்பெறும் பல மாணவர்களோடு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 11 மாணவ மாணவிகளும் நடப்பு கல்வியாண்டு முதல் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் கற்கை நன்றே திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை பெற்று கல்லூரி படிப்பை பயில்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.