தன்னிலிருந்து விடுதலை, கடிதம் – பிரதீப்

அன்புள்ள ஜெமோ,

கடந்த அக்டோபர் இறுதியில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய உளம்குவித்தல் மற்றும் தியான வகுப்பில் கலந்துகொண்டேன். இந்த நிகழ்வு குறித்து உங்களின் கருத்து மற்றும் கலந்து கொண்ட நண்பர்களின் பின்னோட்டம் ஆகியவற்றால் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் கலந்து கொண்டேன். நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு நிறைவாக இந்த வகுப்பு அமைந்தது.ஒரு மாத பயிற்ச்சிக்கு பின் உடலிலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றங்களை நான் மட்டுமல்ல என் சுற்றதாரும் உணரமுடிகிறது.

என் இளவயதில் கடுமையான OCDக்கு உள்ளாகி ,அதனால் உடலளவிலும் பாதிக்கபட்டு என் மனைவியின் உதவியுடன் ஓரளவு மீண்டேன்.ஆனால் பதட்டமான சூழலில் மீண்டும் அந்த  எண்ணங்களின் சுழலில் மனது சிக்கிகொள்வது நடந்துகொண்டேதான் இருந்தது. இந்த வகுப்பிற்கு பிறகு அந்த எண்ணங்களின் முடிவில்லா சுழலில் தவிக்கும் என்னை என்னாலேயே வெளியில் இருந்து பார்த்து வெளியிழுத்து மீள முடிகிறது. புதை குழியில் மூழ்கும் ஒருவனை அவன் கைமட்டும் தனியே வெளியே வந்து அவனை காப்பற்றுவது போல ஒரு உணர்வு.தேவையான நேரத்தில் ஒரு “குரல்” உள்ளிருந்து ஓளிக்கிறது.மனது அவ்வளவு எளிதில் விட்டுவிடாது.குரு தில்லை செந்தில் பிரபு அவர்களிடம் தொடர்ந்து உரையாடி கொண்டிருப்பதும் அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து தொடர்ந்து அவரின் ஆலோசனைகளை கேட்பதும் மட்டுமே இதை ஒரு மாதமாக சாத்தியபடுத்தியுள்ளது.

மேலும் நான் சிறிய அளவில் சமூகசெயற்பாட்டில் ஈடுபட்டுள்ளவன். குடியியல் பிரச்சினைகள் குறித்து அரசு அதிகாரிகள்,பிரதிநிதிகள் ஆகியவர்களிடம் முறையிட்டும்,புகாரளித்து மாற்ற தொடர்முயற்சி செய்தும் வருகிறேன் ஆதலால் நான் வீட்டை விட்டு வெளிவந்தவுடன் ஆபத்தான நிலையில் உடைந்திருக்கும் பாதாளசாக்கடை மூடி முதல்  வலுவிழக்கவைக்கபடும் RTI சட்டம்  வரை என அனைத்தும் என் மூளையை சுக்குநூறாக்கிவிடும்.இந்த வகுப்பிற்கு பிறகு என்னால் இதே செயல்களை இந்த தவிப்புகளும்,தன்வதையும் இல்லாமல் மேலும் சிறப்பாக செய்யமுடிகிறது. இதேபோல இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்துவரும் மற்றொன்று தாங்கள் மருத்துவர் ஜீவா அவர்களின் நினைவேந்தலில் நீங்கள் ஆற்றிய உரை .அதில் சமூக செயல்பாடு யாருக்கானது,அதை எப்படி அணுக வேண்டும் என்று மருத்துவர் ஜீவா அவர்களிடம் நீங்கள் கற்றுகொண்ட விஷயங்களை பகிர்ந்திருப்பீர்கள். நான் சந்திக்கும் சக சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரிடம் அந்த விடியோவை ஒரு முறையாவது பாரக்க அறிவுறுத்துவேன். (https://youtu.be/dWjB9JLmHhM?si=D2FkDEUrYq6MiqYx)

இந்த வகுப்பிற்கு பின் இதுநாள் வரை நான் செய்த அதே விஷயங்களை செய்தபின் நிறைய நேரம் மீதமிருப்பது மற்றொரு ஆச்சரியம்.  

இந்த வகுப்பு வெறும் தியானம்,உளகுவிப்பு என்பதை தாண்டி  இந்த உலகத்தை ,குடும்பத்தை,நண்பர்களை ஏன் நாம் எதிரிகளாக நினைப்பவரை கூட பார்க்கும் விதத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. உலகை ஒரு கனிவுடன் புன்னைகையுடன் எதிர்கொள்ள வழிவகை செய்கிறது.

மனதளவில் வரும் மாற்றங்களுக்கு இணையாக உடலளவில் வரும் மாற்றங்களும். நிம்மதியான உறக்கம். காலை அலாரம் அடிக்கும் முன்னே முழுமையான விழிப்பு வருகிறது. அந்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ள முடிகிறது. என்னளவில் உடலில் மிகப் பெரிய மாற்றெமென்றால் அது என் புகைபிடிக்கும் பழக்கம். கடந்த 20 வருடங்களாக புகைபிடித்து வருகிறேன் பல முறை விட முயற்சித்தும் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள். வெள்ளிமலை நிகழ்வுக்கு பின் சரியாக இன்று 32 நாட்கள். நான் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஆனால் கடந்த 32 நாட்களில் புகைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படவில்லை ,ஆதலால் புகைப்பிடிக்கவில்லை என்பதே உண்மை.

குரு தில்லை செந்தில் பிரபு  அவர்களின் தனிப்பட்ட தொடர் உரையாடலே இந்த அனைத்து மாற்றங்களையும் சாத்தியமாக்கி கொண்டிருக்கிறது. இதன்பொருட்டே கடந்த வாரம் குரு அவர்கள் நடத்திய இணையவழி நிகழ்வில் கலந்துகொண்டேன். இதில் தினமும் ஒரு விஷயத்தை சொல்லி அதை இன்று பயன்படுத்தி அந்த நாளின் இறுதியில் வீட்டுபாடமாக அனுப்ப வேண்டும். இதனால் எங்கள் மன ஓட்டங்களை வெவ்வேறு அன்றாட வாழ்க்கை சூழலில் விலகி நின்று பார்க்க முடிந்தது. மறுநாள் அந்த அனுபவம் குறித்த விவாதங்களும் குருவின் அறிவுரைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வெள்ளிமலையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் இந்த இணையவழி நிகழ்வில் கலந்துகொள்வது  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்படி ஒரு பயிற்சி வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்னால் கிடைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே உள்ளிருந்து ஒரு குரல் சிரித்துகொண்டே இதற்குமா என்று எச்சரித்து இந்த கணத்தில் இருக்க சொல்கிறது.

இவ்வளவு பயனுள்ள இந்த பயிற்ச்சியை வழங்கியதோடல்லாமல் கடந்த ஒரு மாதமாக தனிபட்ட முறையில் தினமும் எங்களுடன் உரையாடி எங்கள் மனதை மீண்டும் மீண்டும் சீரமைக்கும் குரு தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும்,இப்படியொரு நல்வாய்ப்பை உருவாக்கி தந்த உங்களுக்கும்,நித்தியவனத்திற்கும் நன்றிகளும் வணக்கங்களும்.

நன்றி

பிரதீப்


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் (2023) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் கடந்த டிசம்பர் 19, 2023 அன்று தன்னிலிருந்து விடுதலை, கடிதம் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.