தியானப்பயிற்சி, கடிதம் – நந்தினி 

வணக்கம்,

நான் தங்களுடைய புதிய வாசகி. செப்டம்பர் மாதம்  1,2, 3 ஆம் தேதிகளில் குருஜி தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய தியான  வகுப்பில் கலந்து கொண்டேன். மிக அற்புதமான அனுபவம். வெள்ளிமலைக்கு முதலில் ஆலயக்கலை வகுப்பிற்கு வந்த பொழுது இங்கு வந்து தியானம்  செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதன்படியே வெகு விரைவில் தியான வகுப்பிற்கான அறிவிப்பு வந்தது.  

ஏற்கனவே பல தியான  வகுப்புகளுக்கு சென்று இருந்தாலும், எதையும் தொடர்ந்து பயிற்சி செய்யவில்லை. நாற்பது வயதில், உடல் பருமன், குழந்தையின்மை என்று பல பிரச்சனைகள். மிகுந்த உள  சோர்வுடன் இருந்தேன். வகுப்பு ஆரம்பித்த அரை நாளிலேயே எல்லா பிரச்சனைகளும் மறந்து விட்டன. தியானம் நடந்த இரண்டரை நாட்களும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். மனம் மிக  மகிழ்ச்சியாக இருந்தது. புதிய நட்புகள்,  அனுசரணையான அறைவாசிகள், இதமான காலநிலை என்று எல்லாமே கூடி வந்தது. 

கடந்த இரு மாதங்களாக விடாமல் பயிற்சி செய்கிறேன். உடலில்  முக்கியமான மூன்று  மாற்றங்களை உணர முடிகிறது. 

  1. என்  காதுகள் எப்பொழுதும் குடைந்தபடியே இருக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று ear buds தேவைப்படும். சீரான மூச்சு பயிற்சிகள் ஆரம்பித்த பிறகு, அதை தொடுவதே இல்லை. 
  2. காலையில் சீக்கிரம் எழ எவ்வளவு முயன்றாலும் முடியாது. இரவு தூக்கமும் மிக தாமதமாகத்தான் வரும். தூங்கிய உணர்வே இருக்காது. எப்பொழுதும் சோர்வாக இருக்கும். யோக நித்ரா பயின்ற பிறகு தினமும் நன்றாக தூங்குகிறேன். காலையில் தானாகவே ஐந்து மணிக்கு யாரும் எழுப்பாமல், அலாரம் இல்லாமல், எழுகிறேன். நாள் முழுவதும் மிகுந்த சக்தியுடன் இருக்கிறேன்.
  3. தினமும் சாக்லேட், கேக் அல்லது ஐஸ் கிரீம் சாப்பிடுவது வழக்கம். இனிப்பு இல்லாமல் இருக்கவே முடியாது என்று நினைத்தேன். த்யான வகுப்பிற்கு பிறகு இனிப்பிற்கான craving மாயமாகி விட்டது. யாராவது கொடுத்தாலும், சம்பிரதாயமாக கொஞ்சம் உண்டு விட்டு நிறுத்தி விடுகிறேன்.  

இனிப்பு இல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத்தில் இருந்தது முயற்சியே இல்லாமல், வெகு இயல்பாக குருஜி வெளியே வர வைத்து விட்டார். அதிக தூக்கம், இனிப்பு என்ற இரு போதைகளில்  இருந்தும் உடல் தானாகவே மீண்டு விட்டது. 

மனதளவில் மிக உற்சாகமாக உணர்கிறேன். கோபம், ஆற்றாமை மிகவும் குறைந்து இருக்கின்றது. சின்மய தியானத்தின் கடைசியில் வெள்ளை ஒலியுடன் ஒன்றி போகும் அனுபவத்தை தினமும் ரசித்து செய்கிறேன். தியானத்தை நிகழ விடுங்கள் என்று குருஜி சொன்னதன் பொருள் முழுமையாக புரிகிறது. நிறைய நல்ல விஷயங்களும் நடக்கின்றன. இது வேண்டும், அது வேண்டும் என்று பட்டியல் போடாமல், ஒவொரு நாளும் கொஞ்ச நேரம், மிகுந்த நன்றியுடன் இருக்க முடிகிறது. இது ஒரு பெரிய விடுதலை. 

நாம் நன்றாகத்தானே இருக்கிறோம். ஒன்றிரண்டு குறைகள் இருந்தால் பரவாயில்லை என்று மனம் சமாதானம் அடைந்து விட்டது. உடல், மனம் இரண்டும் தனக்கு தானே சரி செய்து கொள்கிறது. நானே என்னுடைய  உடலையும், மனதையும் புதிதாக பார்ப்பது போல் இருக்கிறது. குருஜி தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும், இந்த வகுப்பை நடத்துகின்ற உங்களுக்கும், கோடானு கோடி நன்றிகள். 

வகுப்பு நடந்த மூன்று நாட்களும் மிகுந்த கொண்டாட்டமாக இருந்தது. இரவு மரத்தடி அரட்டையில், மணி அவர்கள், தான் வெகு ஜன  எழுத்தாளர்களை வாசிப்பதில் தொடங்கி  இலக்கிய வாசிப்பிற்கு வந்ததை ஸ்வாரஸ்யமாக கூறினார். கிட்டத்தட்ட எல்லாரும், “அட  நாங்களும் இப்படிதானே,” என்று எண்ணிணோம். சமராஜ் சாரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய படைப்புகளை தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறேன். 

தங்களுடைய ‘செம்பருவம்‘  பதிவில் “குருதிநிறமாக இலைசிவந்து எரிவதெனப்பொலிந்து உதிர்ந்தணைபவை” என்ற வரிகளை படித்தேன். அருமையான வார்த்தைகள். குருஜி தில்லை செந்தில் பிரபு அவர்கள் உணரவைத்ததும் இதுவே. இதுவும் ஒரு காலகட்டம். அனைத்து  பிரச்சனைகளும்  வாழ்க்கை சுழற்சியின் ஒரு நிலை. 

கோபபபட்டு, குமுறி, எரிந்து, ஆற்றாமையால் வெந்து ஒரு பயனும் இல்லை.  அனைத்தும் கடைசியில் வேரில் இருந்தும், கிளையில் இருந்தும் உதிர்வதுதான் இயல்பு. இந்த கணம் 100% நடக்கவேண்டிய படியே நடக்கிறது. இதில் மாற்றவோ, வருத்தப்படவோ எதுவும் இல்லை. இதை விரைவாக உணர்ந்த நாம் அதிர்ஷடம் செய்தவர்கள். 

மிகுந்த நன்றியுடன்,

நந்தினி 


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

https://www.jeyamohan.in/192957/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் (2023) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 20, 2023 அன்று வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.