அன்பு ஆசிரியர் அவர்களுக்கு…..
நேற்றைய தினம் தங்கள் எங்கள் கல்லூரிக்கு வந்தது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வு . இதற்காக எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .தாங்கள் எங்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டும் என்பது ஒரு வருட கனவு .

நமது அறக்கட்டளையின் வாசிக்கலாம் வாங்க நிகழ்வினை எங்கள் மாணவர்களுக்காக வழங்கியது மிகப்பெரும் பாக்கியம் .தங்களால் எங்கள் கல்லூரி நூலகத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒவ்வொரு மாணவர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது . இதற்காக எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
தங்களின் ஈடு இணையற்ற நேரத்தினை எங்களுக்காக வழங்கியதில் மிகப்பெரும் மகிழ்ச்சியை அடைகிறோம் .தாங்கள் எங்களுக்காக நேரம் ஒதுக்கிய நாளிலிருந்து இந்த நிகழ்வை சிறப்பாய் மாற்றுவதற்கு தீவிரமாய் உழைத்தோம் .தங்களுக்கே தெரியும் ஒரு அரசு கல்லூரி எப்படி இருக்கும் என்று .

கடந்த ஐந்து நாட்களாக கல்லூரி மற்றும் விடுதி மாணவர்களின் உதவியால் கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மை செய்தோம் .அந்த நிகழ்விற்கு பிறகு எல்லா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது .இது தங்கள் வருகையால் சாத்தியம் ஆயிற்று .நீங்கள் என்னுடைய வாழ்வில் முக்கியமான நபர் .
நீங்கள் என்னுள் ஏராளமான மாற்றங்களை நிகழ்த்தி உள்ளீர் .நம் நூலகத்தின் வாயிலாக நானும் எண்ணற்ற புத்தகங்களை படித்து வருகிறேன் .அதிலும் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் என்ற புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது .அந்த புத்தகத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் பரிந்துரைத்து சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த புத்தகத்தை படித்துள்ளனர் .எண்ணற்ற மாணவர்களுக்கு இந்த கதையின் சாரம்சத்தை எடுத்துக் கூறியுள்ளோம் .

இவையெல்லாம் தங்களால் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற கொடை .மேலும் சிங்கப்பூரின் சிற்பி என எனும் புத்தகம் ஒவ்வொரு இடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் ,தூய்மை பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் என்பதையும் வலியுறுத்தியது . லீ குவான் யூ அவர்களின் வாழ்க்கை சரித்திரம் பல்வேறு பாடங்களை கற்றுத் தந்தது .எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை உடைத்தெறிய உறுதியாக இருக்க வேண்டும் என்பதனையும் கற்றுத் தந்தார் .
வாசிப்பு எனும் தீபத்தினை நீங்கள் எங்களுக்காக தந்ததால் நாங்கள் இன்று ஒளிர்கிறோம் .இதற்காக நாங்கள் தங்களுக்காக நன்றி கடன் பட்டுள்ளோம் . உங்களை நினைக்கும் போது எனக்குள் ஆனந்த கண்ணீர் ஊற்று எடுக்கிறது .ஏனெனில் நமது கல்லூரி மாணவர்கள் கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் .அவர்களது பெற்றோர்களும் மிகவும் அறியாமையில் இருக்கின்றனர் .

இந்த மாணவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எதையும் அறியாமல் அறியாமை உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர் .தாங்கள் அமைத்துக் கொடுத்த இந்த நூலகமும் ,வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியும் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குள் சிறு மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது .நீங்கள் எங்களுக்காக அளித்த இந்த கொடைக்கான ஒட்டுமொத்த கல்லூரியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் .

உங்களிடம் என்னைக் கொண்டு வந்து சேர்த்த இந்த பிரபஞ்சத்திற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன் .மேலும் ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கும் என் பாதம் பணிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .வாசிக்கலாம் வாங்க நிகழ்வின் அடுத்த நிகழ்வை தொடங்குவதற்கு அனுமதி கோரி இந்த உரையை முடிக்கிறேன் .
நன்றி ……..

திரு. செல்வகுமார், விரிவுரையாளர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்
மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நூலக வாசிப்பு அறை மற்றும் நூலகம் மேம்படுத்துவதற்கு உதவி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில் அங்கு புத்தக வாசிப்பு போட்டியும் அதனை தொடர்ந்து கடந்த 24 டிசம்பர் 2025 அன்று பரிசளிப்பு விழாவும் கல்லூரியில் நடத்தப்பட்டது.
கல்லூரியில் நூலகம் அமைந்த பிறகு மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரித்திருப்பது குறித்தும், புத்தக வாசிப்பு போட்டி பரிசளிப்பு விழா குறித்தும் கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. செல்வகுமார் அவர்கள் கல்லூரியின் சார்பாக மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இது அந்த கடிதத்தின் தொகுப்பு.
மேலும் விழா குறித்த தகவல்களுக்கு: கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தக வாசிப்பு போட்டி பரிசளிப்பு விழா
