December 7, 2024
நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை தியான வகுப்பு நடப்பதான அறிவிப்பு வந்தது.தியானமும் பயில பல நாட்களாக எண்ணம் இருந்தது. நண்பரின் துணையும் கிடைத்தது. கூகிள் கோவையிலிருந்து நான்கு மணிநேரப் பயணம் என்றதால் முதல் நாளே கிளம்பிப் போகலாமா எனும் எண்ணம் எழுந்தது. நித்யவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அந்தியூர் மணியும் மாலையில் வரலாம் என அனுமதி தந்தார். இருட்டுவதற்குள் சென்று விடலாம் எனும் எண்ணத்தில் மதிய உணவினை முடித்ததும் கிளம்பினோம்.
அந்தியூருக்கு எந்த திசையிலிருந்து வந்தாலும் சாலை நன்றாகவே இருக்கும் போல. கூகிள் வழிகாட்டியபடி குன்னத்தூர் கோபி வழியாக அந்தியூர் சென்று சேர்ந்தோம். கொல்லேகால் சாலையில் நகர எல்லையைத் தாண்டியதுமே வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. எதற்கும் கொஞ்சம் வெயிட் இருக்கட்டும் என்று வெள்ளிமலை ஆசிரமித்திற்குச் செல்கிறோம் என பதிலளித்துவிட்டு கடந்து சென்றோம். இனிய மாலையில் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதான எச்சரிக்கைகளை பார்த்தபடி ரசித்து பயணித்தோம். சில கொண்டை ஊசி வளைவுகளுடன் சிறப்பான சாலை.
தாமரைக்கரையிலிருந்து வெள்ளிமலைக்கான சாலைதான் சிறிது பழுதடைந்துள்ளது. சாலை வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜல்லி பரப்பி இருந்ததாலும் ஆங்காங்கே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த இடங்களில் மண்பாதையில் செல்லவேண்டி இருந்ததும் சிறிது கவலை அளித்தது. வழியில் சாலையோர மரங்களும் இயற்கை காட்சிகளும் கிராமங்களில் அய்யப்பன் ஆலயங்களில் பாடல்களும் இறுக்கத்தினை தளர்த்தின. சாலலையிலிருந்து நித்தியவனத்திற்கு பிரியும் இடத்தை அடைந்தபோது சுமார் ஆறுமணிக்கே நன்கு இருட்டியிருந்தது. குறுகலான மண்பாதையில் செல்லும்போது கார் தரைதட்டி விடுமோ எனும் அச்சம் இருந்தது. அதற்குள் மணி அவர்கள் நாங்கள் வந்ததை தொலைவிலிருந்து பார்த்து வழி சொன்னார். அவர் சமையலுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வெளியே சென்றிருந்தார். நுழைவாயிலை ஒட்டிய வீட்டின் திண்ணையில் பேரனுடன் அமரந்திருந்த காவல்கார முதியவர் உற்சாகமாக வரவேற்றார். மேடேறிச் சென்று முதலில் கண்ட கட்டிடத்தின் அருகில் கார் நிறுத்தினோம். சுற்றிலும் இருட்டு. பாதையிலும் கூட வளர்ந்து நிற்கும் புற்கள். காரை விட்டு இறங்க எனக்கு தைரியம் இல்லை. நண்பர் சகஜமாக கீழிறங்கி புதிதாக வாங்கிய கைபேசியில் படங்களை எடுக்கத் துணிந்தார். உள்ளே வந்து அமரும்படி அவரை வேண்டினேன். பூச்சி பொட்டு இருந்திச்சுன்னா?
சிறிது நேரத்தில் குருஜி செந்தில் பிரபு அவர்களும் வயநாட்டிலிருந்து பேரசிரியர் காந்தநாதனும் வெவ்வேறு கார்களில் வந்துசேர்ந்தனர். சிறிது ஆசுவாசமாக இருந்தது. மணியும் வந்து சேர்ந்தார். எங்களுக்கான தங்குமிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். கரடுமுரடான சரிவான பாதையில் இறங்கிச் சென்றோம். தங்குமிடம் ஒரு டார்மிடரி. எனது முதல் டார்மிடரி அனுபவம் இது. மூன்று ஓரங்களிலும் 2+3+3 என எட்டு இரண்டடுக்கு பங்கர் பெட் நடுவே வெற்றிடம். இங்கே எல்லாம் ஃபுல்லா பெட் போட்டிருவோம் என மணி சொல்ல எனக்கு இவ்வளவு கூட்டத்தில் எப்படி இருக்குமோ எனும் கவலையாக இருந்தது. மணியும் காந்தநாதனும் தீவிர தத்துவ விசாரத்தில் இருந்தனர். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். எட்டரைக்கு சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்து மணி சென்றார். எட்டரைக்கு சாப்பாட்டு அறைக்கு சென்றபோது வெளிச்சமும் ஆள் நடமாட்டமுமாக உயிர்ப்புடன் இருந்தது ஆறுதலாக இருந்தது. சுவையான இரவு உணவு (உப்புமா தான் என்றாலும்) மேலும் நம்பிக்கை அளித்தது. சிறிது நேரம் குருஜியுடன் பேசி விட்டு தங்குமிடம் வந்தோம். இப்பொழுது வழி பரிசயமானதால் அச்சமளிப்பதாக இல்லை. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து கும்பலை எதிர்கொள்ள தயாரானோம். வந்தவர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் இளைஞர்கள். அவ்வளவு பேர் இருந்தும் மிகவும் சுமுகமாக இருந்தது சூழல். காலை உணவின்போது அனைவரையும் பார்க்க முடிந்தது. சில பெண்களும் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பயிற்சிககென வந்திருந்தனர்.
வெளிச்சத்தில் பார்த்தபோதுதான் அந்த இடத்தின் நில அமைப்பினை பெரிதும் சிதைக்காமல் கட்டிடங்களை எழுப்பியிருப்பது தெரிந்தது.
வந்திருந்த இளைஞர்கள் அனைவருமே தங்களது அலுவலகப் பணியில் வெற்றிகரமாக செயல்படுவதாகவே தெரிந்தது. தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள வந்திருந்தனர். பயிற்சி அவர்களுக்கு தேவையான உறுதிப்பாட்டினை அளித்துள்ளது என்பது நிறைவுக் கூடுகையில் அவர்கள் மனம் நெகிழ்ந்து பேசியதில் தெரிந்தது. குருஜி செந்தில் பிரபு அவர்களும் கோவையின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆனந்த சைதன்யா யோகா எனும் அமைப்பினை நிறுவி தியானப் பயிற்சி அளிக்கிறார். அவரது மையம் கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையத்தில் உள்ளது. அங்கும் பயிற்சிகள் நடைபெறுகின்றன. மிகவும் மென்மையாகவும் நகைச்சுவையாகவும் அதே நேரம் கண்டிப்பாகவும் பயிற்சியளித்தார். இரண்டாம் நாள் இரவுணவிற்கு பிறகு திரைப்பட பாடல் ஜமா கூட்டினார் குருஜி. விஷ்ணுபுரத்தின் ஆஸ்தான பாடகர் என மணி அறிமுகப்படுத்திய யோகேஸ்வரன் மிக இனிமையாகப் பாடினார். அவருக்கு போட்டியாக குருஜியும் களமிறங்கினார். சுவையான உணவு படைத்த அம்மையார் உட்பட பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.
திரும்பி வர வேண்டிய நேரம் நெருங்கியதும் சாலை குறித்த கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. காலையிலிருந்தே மழை பெய்துக் கொண்டே இருந்தது. மதியம் மழை விட்டாலும் எந்நேரமும் வந்து விடுமோ என்றிருந்தது. அவசரத்தில் உடன் வந்த யோகேஸ்வரன் சாப்பிடாமலே கிளம்பி வந்தது மிகுந்த வருத்தமளித்தது. திரும்பி வரும்போது சாலை அவ்வளவு மோசமானதாக தோன்றவில்லை. பல இடங்களில் வேலை முடிந்து சிமெண்ட் சாலைகள் திறந்து விட்டிருந்தனர். எளிதாகவே முக்கிய சாலையை எட்டினோம். யோகேஸ்வரனின் தந்தையார் தான் தூரன் விழாவில் சிறப்பாக நாதசுரம் இசைத்த கலைஞர் என்பது பேச்சினூடே தெரிந்தது. அவர் இனிமையாக பாடியதில் வியப்பென்ன! மிகவும் இனிமையான அனுபவமாக அமைந்தது வெள்ளிமலை நித்தியவன பயிற்சி.
பின் குறிப்பு : நல்ல குளிரும் மழையும் இருந்தபோதும் இறுதி நாளில் மின்சாரம் தடை பட்டதால் பச்சைத் தண்ணீரில் குளித்தபோதும் கோவையிலிருந்து கிளம்புபம் போது வெகு நாட்களாக இருந்த இருமல் தியானம் முடித்து திரும்பும்போது இல்லாமலிருக்கிறது!!!
அரவிந்த் வடசேரி
எழுத்தாளர் திரு. ஜெயமோகன்
ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று தியானவகுப்பு- கடிதம் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.