அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள்

டிசம்பர் 15, 2024

அன்புள்ள ஜெ,

நலமறிய ஆவல்.

இந்த வாரம் பங்கெடுத்த தியானம் உளக்குவிதல் வகுப்பின் அனுபவங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.

முதலில் மனதிற்கான பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி அன்றாடம் நான் செய்தது இல்லை. புத்தக வாசிப்பொன்றுதான் நான் செய்திருந்த உட்சபட்ச கூர்ந்த தியானம். தற்போது இந்திர நீலம் படித்துக்கொண்டிருக்கிறேன். துவாரகையில் இருக்கும் வரை மனம் அதில் லயிக்கிறது. வெளிவந்த உடனேயே அலுவலக வேலை செய்யும் ஒரு உருவாகவும், அதே நேரம் இடைவிடாது மனத்துள் ஓடிக்கொண்டிருக்கும் உரையாடல்கள், கேள்விகள், பதில்கள் என்று சக்தியை செலவிடும் ஒரு உருவாகவும் இரு கூறாக மனம் பிரிந்து நிற்கிறது.

மிக முக்கிய அரிதலாக தில்லை குருஜி சொல்லிக்கொடுத்தது இந்த மனம் மற்றும் உடல் இரண்டிற்குமான ஒத்திசைவை. மூன்று நாட்களும் முயன்று முயன்று அதை தான் அடைய முற்பட்டோம். ஓரளவு அடையவும் செய்தோம். 

இயற்கை தியானத்திற்காக ரம்மியமான கால நிலையை வழங்கியது, நாள் முழுக்க குளிரும் அவ்வப்போது மென் தூறலும் இருந்தன. 

தேநீருக்கு பதிலாக சூடான எலுமிச்சை சாறு போன்று நிறைய மாற்றங்களை வகுப்பிற்காக ஏற்படுத்தியிருந்தார், அனைத்து வகுப்புகளும் குறித்த நேரத்திற்கு 10 நிமிடம் முன்பே தொடங்கி அனைவரும் நிலையில் அமர்ந்த பின்னரே தொடங்கியது.

முதல் பயிற்சியாக Stillness meditation கற்றுக்கொடுத்தார். முதலில் நிலையில் அமர்ந்து உடலின் தற்போதைய நிலையை கவனிக்க உதவும் பயிற்சி, அதனை தொடர்ந்து yogic exercises என்னும் உடற்பயிற்சிகள். வெள்ளிக்கிழமை மாலை கணம் குறித்த விளக்கமும் அதனை தொடர்ந்து சில உலகுவித்தல் குறித்த கருவிகளையும் பற்றி விளக்கினார். கணம் குறித்த விளக்கம் மிகப்பெரிய திறப்பாக இருந்தது. நேற்றும் நாளையும் என்று ஓடி ஓடி இந்த கணத்தை இழந்தபடியே இருக்கிறேன். 

இரண்டாம் நாள் காலை பிராணயாமா பயிற்சிகளை முடித்து குருவணக்கத்தோடு சைதன்ய தியானம் தொடங்கினோம். உண்மையில் மூன்று படிநிலைகளாக ஆழ்ந்த அனுபவத்தை கொடுத்தது. பயிற்சி முடித்தபின் தெளிந்த ஓடைக்கருகில் அமர்ந்திருந்து அமைதியான நீர் ஒழுக்கை காண்பது போன்று எண்ணங்கள் தெளிவாகின. மாலை மீண்டும் சிறு வகுப்பும் பயிற்சிகளும்.

ஞாயிறு காலை மீண்டும் Stillness meditation, யோக உடற்பயிற்சிகள், நாத முத்ர மற்றும் பஞ்ச பிராண பிராணயாமா, நாடி சோதனா, யோக நித்ரா இறுதியாக சைதன்ய தியானம் செய்து முழு பயிற்சி முடித்தோம்.

வகுப்பில் பங்கு கொண்ட நண்பர்கள் பலவகையான பின்னணியிலிருந்து வந்திருந்தனர். தலைமை மேலாளரிலிருந்து திரைப்பட துறை உதவி இயக்குனர் வரை, இருதய சிகிச்சை நிபுணரிலிருந்து கட்டிட கலைஞர் வரை, மழலைகள் முதல் மூத்தோர் வரை என அத்தனை பேருக்கும் தேவையான ஒரு பயிற்சியாக தியானம் உள்ளது.

தில்லை குருஜி கனிவான கணித ஆசிரியர் போல. அவ்வப்போது கண்டிப்பும் வெளிப்பட்டது. தியானம் காலை மாலை மற்றும் செய்யும் ஒரு பயிற்சி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்ற ஆப்தவாக்கியதோடு விடைபெற்றோம். தியான நிலையத்தை தாங்கள் திறந்து வைக்க வருவதை சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு முறை தியானத்தில் அமரும்போதும் புதியதொரு அனுபவம் கிடைக்குமாகையால் அடுத்த 40 நாட்கள் இரு முறையும் அதற்கடுத்த 6 மாதங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் பயிற்சியை தொடர சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்.

வாழ்வு முழுமைக்கும் உடனிருக்கும் மூன்று தினங்களாக அமைந்த இந்நாட்களை வழங்கிய உங்களுக்கும் குருஜிக்கும், வகுப்புகள் சீராக நடைபெற ஒவ்வொரு அமர்வுக்கு முன் உழைத்த இரு நண்பர்களுக்கும் (பெயர் கேட்க மறந்துவிட்டேன்) மற்றும் பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும். 

அன்புடன்,

மனோஜ், திருவானைக்காவல் 


ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று  அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்