தியானம், உளக்குவிப்புப் பயிற்சி அறிவிப்பு (Article date:7 February 2024)

அண்மையில் சுசித்ராவிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். ‘ஜெர்மனி அல்லது சுவிட்சர்லாந்தில் அன்றாடம் யோகம் அல்லது தியானம் செய்யாதவர்களை தொழிலிடங்களில் பார்ப்பது அரிதினும் அரிது. அவற்றைப் பற்றிய அறிதலோ மதிப்போ இல்லாமலிருப்பவர்கள் இந்தியர்கள்தான். அதைப்பற்றி ஜெர்மானியர்களுக்கு பெரிய வியப்பும் உண்டு. யோக- தியானப் பயிற்சிகள் இன்று மதம்- நாடு சார்ந்த அடையாளங்களை இழந்து உலகளாவியவையாக மாறிவிட்டன’

நாம் இன்னும் இன்றைய உலகச்சூழலின் இயல்பை புரிந்துகொள்ளவில்லை என்பதே நம் அறியாமைக்குக் காரணம். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த சூழல் அவர்களின் வீடு, ஊர் ஆகியவற்றில் நிகழ்ந்தது. இன்றைய தலைமுறையின் சூழல் மொத்த உலகமுமே என ஆகிவிட்டது. இது ஊடகங்களால் இணைக்கப்பட்ட உலகம். ஊடகங்களை பெரும் நிபுணர்கள் கட்டமைக்கிறார்கள். ஊடகம் நம் மீது பெரும் அலைபோல வந்து அறைகிறது. நம்மை அது சிதறடிக்கிறது. நம்ம் கவனம் எதிலுமே குவியாமல் செய்கிறது.

நாமே கவனிக்கலாம் .இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஊடகம் ஒரு பரபரப்பை கிளப்புகிறது. அரசியல், சினிமா எதையாவது சார்ந்த ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. நாம் அதைப்பற்றி பேசி, விவாதித்துக் கொண்டிருக்கையிலேயே அடுத்தது வந்துவிடுகிறது. நாம் சமகாலத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது உண்மை அல்ல. நாம் எதையும் கவனிப்பதில்லை. எதையும் நினைவில் நிறுத்துவதில்லை. நாம் அப்படியே ஊடகங்கள் வழியாக ஒழுகிச் சென்று கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம். நம்மை ஊடகங்கள் நிரந்தரமாக ஒரு பதற்றநிலையில் வைத்திருக்கின்றன.

அதிலிருந்து விலகினாலொழிய நம்மை நாம் குவிக்க முடியாது. எதையேனும் முழுமையாக கவனிக்கவோ, எதையேனும் தொடர்ச்சியாகச் செய்யவோ முடியாது. அவ்வாறு நம்மைக் குவிக்கவும் நமக்கு நிபுணர்கள் வடிவமைக்கும் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. முறையாக அவை கற்பிக்கப்படவேண்டியுள்ளது. அவற்றையும் நாம் அதே ஊடகம் வழியாக கற்கலாம் என்பது அபத்தம். அந்தக் கல்வி ஏற்கனவே நம்மை சிதறடிக்கும் ஊடகங்களின் தாக்குதலின் இன்னொரு பகுதியாகவே அமையும். நமக்குத்தேவை நேரடியாக ஆசிரியரிடமிருந்து கற்கும் கல்வி.

இன்றைய மாணவர்களுக்கு மிக இன்றியமையாதது இது. இன்றைய தொழில்முனைவோர், மூளையுழைப்பாளர் அனைவருக்கும் தேவையானது. அப்பயிற்சியை பலர் இன்று இன்னொரு வகை தொழில்நுட்பப்பயிற்சியாக அளிக்கிறார்கள். இன்னொரு வகை ஊடகவணிகமாகவும் மாற்றியுள்ளனர். ஆனால் அப்பயிற்சியை அதற்கு இயல்பான வடிவில் அளிக்கும் பொருட்டு குருகுல முறைப்படி இப்பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இத்துறையில் 30 ஆண்டுக்கால நிபுணரும், பல்லாயிரம்பேருக்குப் பயிற்சி அளித்துள்ளவருமான தில்லை செந்தில் பிரபு இப்பயிற்சியை அளிக்கிறார். அவர் தொழில்முறையில் ஒரு ஏற்றுமதித் தொழில்நுட்ப நிபுணர். இது அவர் அளிக்கும் சேவைகளில் ஒன்று.

வரும் மார்ச் மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புக்கு

[email protected]


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் வரும் மார்ச் (2024) மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்த்த இருக்கும் தியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம் பற்றி தியானம், உளக்குவிப்புப் பயிற்சி அறிவிப்பு எனும் தலைப்பில் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதி அவரது இணையதளத்தில் பிப்ரவரி 7, 2024 அன்று வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.